கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சுனாமி: இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?

முகவை எஸ்.அப்பாஸ்
பரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல், என்னதான் வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள் வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான்,

அக்கடலின் அரசன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவன்தான் ஆர்ப்பரித்து வரும் அலைகடலை அணைபோட்டு தடுத்து வந்தவன் என்றும், அநீதிகள் பெருகும் போது தனது ஆற்றலை அவ்வப்போது மனிதனின் படிப்பினைக்காக வெளிப்படுத்திக் காட்டுகிறான் என்பதை மனிதன் ஏனோ உணர மறுக்கிறான்.
கடல் காவு கொள்ளும் இந்த சுனாமி என்ற வார்த்தையே ஜப்பான் மொழியாகும். சிறிதாகவும், பெரிதாகவும் சுனாமியால் அதிகமாக அடிக்கடி தாக்கப்படும் நாடும் ஜப்பான்தான். இந்த சுனாமியிலிருந்து தற்காத்துக் கொள்ள எண்ணற்ற முன்னேற்பாடுகளையும் ஜப்பான் செய்து வைத்திருந்தாலும், மார்ச் 11 அன்று ஜப்பானை கடுமையாக தாக்கிய சுனாமியால் உயிர்கள் பலி, உடமைகள்-வீடுகள் சேதம் என நிலைகுலைந்து நிற்கிறது ஜப்பான். இந்த சுனாமி இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாகவே அவ்வப்போது பல நாடுகளை பதம் பார்த்துள்ளது.
உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள்: இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:

1700 ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730 ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755 நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868 ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906 ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946 ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960 மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964 மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976 ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004 டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007 ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009 செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011 மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது. (புள்ளி விவரங்கள் நன்றி: thirudan.com)

இத்தகைய பேரழிவு சுனாமியை இஸ்லாமிய பார்வையில் சற்று அலசி பார்ப்போம்.
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது சமுதாயத்திடம் சத்தியத்தை சொன்னபோது, அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்க மறுத்ததோடு, வரம்பு மீறியதன் காரணமாக, அந்த சமுதாயத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் நீங்கலாக, மற்றவர்கள் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டார்கள். அந்த சமுதாயத்தை அழிப்பதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த வழி, பூமியிலிருந்து அலைபோல நீரை பொங்க வைத்ததும் வானிலிருந்து மழையை பொழிவித்ததுமாகும். இதுபற்றி அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்;

''மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது; "(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்ர்கள்.'' (அல்குர்ஆன் 11:36)
"நம் பார்வையில் நம் (வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்." (அல்குர்ஆன் 11:37)
''அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்; "நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்று கூறினார்.'' (அல்குர்ஆன் 11:38)
"அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்).'' (அல்குர்ஆன் 11:39)
''இறுதியாக, நம் உத்தரவு வந்து, தண்ணீர் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.'' (அல்குர்ஆன் 11:40)
''இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார். (அல்குர்ஆன் 11:41)
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி ந்ன்ற தம் மகனை நோக்கி "என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நூஹ் அழைத்தார்.'' (அல்குர்ஆன் 11:42)
''அதற்கு அவன்; "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டiளியிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகவி விட்டான்.'' (அல்குர்ஆன் 11:43)
''பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.'' (அல்குர்ஆன் 11:44)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்திததன் காரணத்தினால் அல்லாஹ், அலைபோல நீரை பொங்க வைத்து அநியாயக்காரர்களை மட்டும் அழித்தான். ஆனால் இப்போது ஏற்படும் சுனாமி போன்ற பேரிழப்புகளில் நல்லவர்களும் பலியாகிறார்களே என நமக்கு ஒரு கேள்வி எழலாம். இதைப்பற்றியும் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்,
''நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.'' (அல்குர்ஆன் 8:25)
அல்லாஹ் பொதுவாக ஒரு அழிவை உண்டாக்கும்போது அதில் நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களின் எண்ணத்திற்கேற்ப நன்மையுண்டு என்று நபியவர்கள் விளக்கமளித்துள்ளர்கள். இது ஒருபுறமிருக்க, இதைப் போன்ற பேரழிவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,

போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,
ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,
தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,
கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,
பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,
தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,
அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,
ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,
ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும்,
கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,
ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது
ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,
மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,
இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது
இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். (அறிவிப்பவர் : அபூஹுரை ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் திருவாயால் முன்னறிவிப்பு செய்த மேற்கண்ட அநியாயங்கள் இன்றைக்கு உலகில் அச்சரம் பிசகாமல் நடக்கிறதா? இல்லையா?

பொதுச் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதும்,
உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை கற்பதும்,
தீயவன் சமுதாய தலைவனாக காட்சியளிப்பதும்,
அந்த தீயவனுக்கு பயந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவன் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுவதும்,
அமைதியாக இருந்த பள்ளிவாசல்கள் துப்பாக்கி சத்தம் கேட்கும் இடமாக மாற்றப்பட்டதும்,
நல்லவனை இழிவாகவும், அயோக்கியனை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும்,
மேலும், மது-விபச்சாரம்- ஆடல்- பாடல்....
இப்படி எல்லாம் மிகுதியாகி விட்டதை கண்கூடாக காண்கிறோம்.
இத்தகைய இழிநிலையை மாற்றி இறைவனின் அச்சத்தை மனிதில் தாங்கி,
இறையச்சமுடையவர்களாக நாம் மாறவேண்டும் என்பதுதான் இந்த சுனாமி தரும் படிப்பினையாகும்.
source: http://mugavai-abbas.blogspot.com/

0 கருத்துகள்: