கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

அ.தி.மு.ககூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், “”முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?” என்று கேட்டபோது,

“தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான்.
 இது வரலாறு. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இதன் நியாயத்தை உணர்ந்து 70-களில் 12 சதவிகித இட ஒதுக்கீட்டை கேரள அரசு சட்டமாக்கியது. ஆனால் தமிழகத்தில் போராடிக்கொண்டேதான் இருந்தோம். தி.மு.க. அரசில் இது கண்டு கொள்ளப்படவே இல்லை. தற்போது 3.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் இந்த இட ஒதுக்கீட்டால் பெரிய அளவில் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த 3.5 சதவிகிதம் கூட முஸ்லிம்கள் மீதான அக்கறையால் அல்ல. தேர்தலுக்காக கொடுக்கப்பட்டிருக் கிறது. எங்கள் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தானே தவிர அ.தி.மு.க. ஆட்சியில் அல்ல.
உதாரணத்திற்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ல் ஒவ்வொரு வருடமும் பேரணி, போராட்டம் நடத்து வது வழக்கம். ஆனா போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே “முன் னெச்சரிக்கை’ என்று காரணம் காட்டி த.மு.மு.க. நிர்வாகிகள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார் கலைஞர். இப்படி ஒரு அடக்குமுறை ஜெயலலிதா ஆட்சியில் ஒரு போதும் நடந்ததில்லை. தி.மு.க. ஆட்சி யில்தான் கோவை கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் சூறையாடப்பட்டன.
காவிகளும், காக்கிகளும் கண்மூடித்தனமாக முஸ்லிம்களைத் தாக்கினர். இதனை தடுக்காத தி.மு.க. அரசு, “குண்டு வைத்தார்கள்’ என்று அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து மகிழ்ந்தது. இன்னமும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில்தான் துன்பம் அனுபவித்து வருகிறார்கள். மோடிக்கு ஜெயலலிதா விருந்து கொடுத்தார்னுதான் தி.மு.க. குற்றம் சொல்லும். ஆனா, மோடியின் தலைவரான வாஜ்பாய் அரசில் அமைச்சரவை சுகம் கண்டவர்கள் யார்? தி.மு.க.தானே?
முஸ்லிம் கட்சிகளுக்கான தனித்தன்மையை தி.மு.க. எப்போதுமே தந்ததில்லை. தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியை, தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாகத்தான் கலைஞர் வைத்திருக்கிறார். அதனால்தான் முஸ்லிம் கட்சியை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்கிறார் கலைஞர்.
தனிச்சின்னம் வாய்ப்பு தரப்படாததால், முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். இதுவா முஸ்லிம்களை பாதுகாக்கும் முறை? ஆனா, இந்த நிலை அ.தி.மு.க.வில் இல்லை. கடந்த காலங்களிலும் சரி… தற்போதும் சரி… முஸ்லிம் கட்சிகளை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தவர்… அனுமதிக்கிறவர் ஜெயலலிதாதான். இப்படி நிறைய சொல்ல முடியும்” என்கிறார் வலிமையான குரலில் ஜவாஹிருல்லா
நன்றி - நக்கீரன்

0 கருத்துகள்: