கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அலுவலராக கும்பகோணம் ஆர்டிஓ அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இத்தொகுதி பற்றி கூறியது:
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் நகராட்சிப் பகுதியில் 87 வாக்குப் பதிவு மையங்களும், ஊராட்சிப் பகுதிகளில் 132 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும் 7 வாக்குப் பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திலும் 900 லிருந்து 1200 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இத்தொகுதியில் 97,512 ஆண் வாக்காளர்களும், 96,794 பெண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் காவல் துறையும், தேர்தல் அலுவலர்களும் இணைந்து மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக திருப்புறம்பியம், அண்ணலக்ரஹாரம், உடையாளூர் ஆகிய இடங்களில் உள்ள 12 மையங்களை கண்டறிந்துள்ளனர்.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக சோழபுரம், அம்மாசத்திரம், உள்ளூர், சீனிவாசநல்லூர், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள 12 மையங்களையும் கண்டறிந்துள்ளனர்.
கண்காணிக்கப்பட வேண்டிய மையங்களாக பழவாத்தான்கட்டளை, தாராசுரம், கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, ஏஆர்ஆர் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 22 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள், மத்திய பாதுகாப்புப் படையினர், தேர்தல் நுண்ணறிவு பார்வையாளர்கள் ஆகியோர் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும் என்றார் அவர்.
திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் சக்திவேல் கூறியது-
திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 240 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. கடந்த 2009 தேர்தலை காட்டிலும் 19 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் 98,744 ஆண் வாக்காளர்களும், 94,602 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
இத்தொகுதியில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடியாக சிவபுரம் கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடியாக பந்தநல்லூர், திருப்பனந்தாள், ஆவணியாபுரம், ஆடுதுறை, நாச்சியார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள 17 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்காணிக்கப் பட வேண்டிய மையங்களாக கதிராமங்கலம், திருநறையூர் ஆகிய இடங்களில் உள்ள 10 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றார் அவர். மேலும் அவர்கள் கூறியது: தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் தகவல்களை அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணைய செல்போனில் தொடர்புகொள்ளலாம்.
கும்பகோணம் தேர்தல் அலுவலரும், ஆர்டிஓவுமான அசோக்குமார் -75987 04407, உதவி தேர்தல் அலுவலர் வட்டாட்சியர் காமராஜ் -75987 04408, முதன்மை உதவி தேர்தல் அலுவலர் துரைராஜ் -75987 04409, பறக்கும் படை உதவி தேர்தல் அலுவலர்- 75987 04410 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
திருவிடைமருதூர் தேர்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான சக்திவேல் 75987 04379, உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான கோபால் 75987 04401, முதன்மை உதவி தேர்தல் அலுவலர் மற்றும் தஞ்சை வட்ட வழங்கல் அலுவலர் 75987 04402 ஆகியோரிடம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றனர் அவர்கள்.
நன்றி;தினமணி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக