கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

வேட்பாளர் செலவு கணக்கு பட்டியல்: ஒரு டியூப் லைட்டுக்கு 50 ரூபாய் நாற்காலி ஒன்றுக்கு 5 ரூபாய்; பட்டாசுக்கு ரூ.350; பூ மாலைக்கு ரூ.400

வேட்பாளர் செலவு கணக்கு பட்டியல்: 
ஒரு டியூப் லைட்டுக்கு 50 ரூபாய் 
நாற்காலி ஒன்றுக்கு 5 ரூபாய்; 
பட்டாசுக்கு ரூ.350; பூ மாலைக்கு ரூ.400
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தி கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றி உள்ளது.
இதனால் தேர்தலில் பண நடமாட்டம் தடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பிரசார செலவுக்கு கட்டுப்பாடு விதித்து உள்ளது.புதிய விதியின்படி ஒரு வேட்பாளர் ரூ.16 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக செலவினங்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரித்து வெளியிட்டுள்ளது.
பெயர் அறிவிக்கப்பட்டது முதல் வேட்பாளரோ அவரைச்சுற்றி இருப்பவர்களோ செய்யும் செலவுகள் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நேரடி ஆய்வு செய்து அங்குள்ள விலைவாசிக்கு ஏற்ப இந்த விலைப்பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது.
பிரசாரத்தின் போது வேட்பாளர் செய்யும் செலவுகள் இந்த பட்டியலில் உள்ள விலையின் அளவில் அவரது பிரசார செலவினமாக கணக்கிடப்படும்.   தகர சீட்டுகள் அமைத்து தேர்தல் பிரசார பந்தல் அமைத்தால் ஒரு சதுர அடிக்கு ரூ.5 வீதமும், இரும்பு கால்களுடன் மரத்தாலான மேடை அமைத்தால் சதுர அடிக்கு ரூ.30 வீதமும் தேர்தல் செலவில் கணக்கு வைக்கப்படும்.
இதேபோல் கலர் துணிகள் கொண்டு பந்தல் அலங்கரித்தால் சதுர அடிக்கு ரூ.7.50-ம், வெல்வெட் துணி அமைத்தால் ரூ.8-ம், பூந்தொட்டி வைத்தால் ஒன்றுக்கு ரூ.25-ம், கம்பு நட்டு டியூப்லைட் போட்டால் ஒன்றுக்கு ரூ.50-ம், பிளாஸ்டிக் நாற்காலிக்கு ஒரு நாளைக்கு ரூ.5-ம், ஜெனரேட்டர்களுக்கு ஒரு கிலோ ஓல்ட்டுக்கு ரூ.75-ம் அலங்கார வளைவு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரமும், சீரியல் பல்புகளுக்கு ஒரு அடிக்கு ஒரு ரூபாயும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் எழுதப்படும்.
20 அடிக்கு 10 அடி என்ற அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் அதை பொருத்தும் செலவு, சாரம் கட்டும் செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை சேர்த்து ரூ.3900 என்று வேட்பாளரின் செலவில் கணக்கிடப்படும். 15 அடிக்கு 10 அடி பிளக்ஸ் பேனருக்கு ரூ.3050, 8-க்கு 6 என்ற அளவில் வைத்தால் ரூ.720-ம், ஆடியோ சி.டி.க் கள் விநியோகம் செய்தால் ரூ.9, டி.வி.டி.களுக்கு ரூ.13 என செலவு கணக்கில் வைக்கப்படும்.
தேர்தல் பிரசாரத்துக்கு ஆம்னி வேன் பயன்படுத்தினால் நாளொன்றுக்கு ரூ.800 வாடகை, டிரைவர் பேட்டா ரூ.150, டீசல் செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.50, டாடா சுமோ கார் என்றால் ஏ.சி.யாக இருந்தால் ரூ.1,500, ஏ.சி. இல்லாத சாதாரண கார் என்றால் ரூ.1300, டிரைவருக்கு ரூ.200, இன்னோவா காருக்கு ரூ.2 ஆயிரம், டாடா விங்கர் காருக்கு ரூ.2,200-ம், ஆட்டோவுக்கு ரூ.1400 என்றும் செலவு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
தேர்தல் பிரசாரத்துக்கு வருபவர்கள் தங்கும் ஒரு படுக்கை வசதி கொண்ட அறை என்றால் ரூ.350, இரு படுக்கை வசதி கொண்ட அறைக்கு ரூ.450, ஏ.சி. அறைக்கு ரூ.700 வாடகையாக கணக்கிடப்படும். வேட்பாளருக்கு அணிவிக்கப்படும் மாலை மல்லிகையாக இருந்தால் ரூ.400, ரோஜா மாலைக்கு ரூ.300, சம்பங்கி மாலைக்கு ரூ.300, செயற்கை இழை சால்வைக்கு ரூ.250, பருத்தி இழை சால்வைக்கு ரூ.200, சாதாரண துண்டு அணிவித்தால் ரூ.100 செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
பிரசாரத்தின்போது வழங்கப்படும் அசைவ உணவு ரூ.80, சைவ உணவு ரூ.25, சைவ பிரியாணி ரூ.20, வெரைட்டி ரைஸ் ரூ.15, உப்புமா ரூ.18, 2 இட்லி ரூ.12, 2 சப்பாத்தி, பூரி ரூ.18, பொங்கல் ரூ.18, ரோஸ்ட் ரூ.20, பரோட்டா ரூ.15, வடை ரூ.8, மினரல் வாட்டர் ரூ.14, மட்டன் பிரியாணி ரூ.100, சிக்கன் பிரியாணி ரூ.80, தண்ணீர் பாக்கெட் ரூ.2, டீ ரூ.5, காபி ரூ.8, மினி கூல் டிரிங்ஸ் ரூ.10, ஆம்லெட் ரூ.10.
 பிரசாரத்துக்காக ஏ4 அளவில் ஒரு கலரில் ஆயிரம் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டால் ரூ.430, இரு கலரில் இருந்தால் ரூ.580, 30-க்கு 40 என்ற அளவில் பல வண்ணங்களில் இருக்கும் 100 போஸ்டர்களுக்கு ரூ.1200, கம்புகளில் கட்டப்படும் கட்சிக்கொடிகள் ஒன்றுக்கு ரூ.25, இரும்பு கம்பிகளில் கட்டினால் ரூ.35, காகித கொடிகளில் தோரணம் கட்டினால் ஒரு அடிக்கு ரூ.5 வீதமும், ஒரு ஜோடி வாழை மரம் கட்டினால் போக்குவரத்து செலவு கூலி சேர்த்து ரூ.500, பேண்டு வாத்தியம் வைத்தால் ரூ.3 ஆயிரம், தாரை தப்பட்டை பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம். பெயிண்ட்டால் எழுதப்படும் சுவர் விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ.20, வாட்டர் கலரில் எழுதினால் சதுர அடிக்கு ரூ.10, வேட்பாளர் வரும்போது ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தால் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் செலவு கணக்கில் சேர்க்கப்படும். தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பை பார்த்து அரசியல் கட்சிகள் திகைத்துப்போய் உள்ளனர்.
thanks:http://www.maalaimalar.com/

0 கருத்துகள்: