முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்று பலனை அனுபவித்து வந்தவர்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்காமல் ஏமாற்றியுள்ளதாக முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவையினர் தி.மு.க., மீது குற்றம் சாட்டினர்.
விழுப்புரத்தில் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் அமீர் அப்பாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் துவங்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் முன்னேற்றத்திற்காக கடந்த மூன்றாண்டுகளாக பாடுபடுகிறது. கல்வி, அடிப்படை வசதிகளை பெற்றிட அரசியல் அதிகாரத்தில் இடம்பெற்றாக வேண்டும். மனு கொடுத்து கேட்கும் ஆளாகவே தொடர்ந்து முஸ்லிம் சமுதாயம் இருக்க முடியாது. விழுப்புரம் மாவட்டம் துவங்கி, கடந்த 22 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு கூட எந்த கட்சியும் வாய்ப்பளிக்கவில்லை. அனைத்து சாதி கட்சிகளும், அவரவர் சமூக நன்மைக்கே செயல்படுகின்றனர். தற்போது முளைத்தவர்களுக்கு எல்லாம், 7 சீட் கொடுக்கும் போது முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்கவில்லை.
இங்கே வாய்ப்புகள் இல்லாததால் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் வேலை தேட வேண்டிய நிலை உள்ளது. கடனுதவி, நலத்திட்டங்கள் போன்ற வசதிகளைப் பெற அதிகாரம் இருந்தால் தான் முடியும். ஒரே கட்சிக்கு எங்களின் ஆதரவை கொடுத்து ஏமாந்து விட்டோம். எங்களிடம் பலனை அனுபவித்தவர்கள், எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. முஸ்லிம் மக்கள் அதிகமுள்ள நான்கு தொகுதிகளில் எங்கள் அமைப்புகள் இணைந்து நின்று போட்டியிட்டு, எங்கள் சக்தியை நிரூபிப்போம். ஊழல், அராஜக ஆட்சிக்கு எதிராக, எங்களின் பிரசாரங்கள் இருக்கும். முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த ஒரு கட்சிக்கு மூன்று தொகுதிகளை கொடுத்து விட்டு, அதில் ஒரு தொகுதியை பிடுங்குவது அநியாயம். விழுப்புரம் மாவட்டத்திலும் வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜமாஅத் சார்பில் தி.மு.க.,வின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம்.
எங்களுக்கு பதவி ஆசை இல்லை. மற்ற சமூகத்திற்கு ஒதுக்குவதைப் போல் இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியை சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும். விழுப்புரத்தில் 40 ஜமாத்தார்கள், 15 ஆயிரம் முஸ்லிம்கள் உள்ளனர். பள்ளிவாசல்களில் ஆலோசித்து தனித்து போட்டியிட்டு எங்களின் சக்தியை நிரூபிப்போம். இனி ஏமாற நாங்கள் தயாரில்லை, என்றார். பேட்டியின் போது முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை செயலர் ஷேக் தாவூத், அமைப்பாளர் முகமது ஜகரியா, இயக்குனர் அப்துல்கனி உடனிருந்தனர்.
SOURCE:DINAMALAR
0 கருத்துகள்:
கருத்துரையிடுக