கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா!

கல்லூரி நாட்களின் போது பர்தா அணிந்து சென்ற சில பெண்களை பார்த்து நண்பன் ஒருவன் அடித்த கமெண்ட்.. 'எந்த கோர்ட்டுல வேலை பார்க்குறாங்கனு தெரியல!' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம். சில வருடங்கள் கழித்து வளைகுடாவில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் சொன்ன வார்த்தைகள். 'இந்த நாட்டுல மிகவும் கவர்ச்சியான ஆடை பர்தா தான்!!' பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பர்தாக்கள் அவற்றின் நோக்கத்திற்கு மாறாக நிற்பது தான் இத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாக அமைகின்றன.

பெண்களை போகப் பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட உலகில் பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கியது இஸ்லாம். பெண்கள் தங்கள் உடலை அந்நிய ஆண்கள் முன் காட்டுவதை கண்டிக்கும் இஸ்லாம் அதற்கான வழிமுறையாக கூறியதுதான் ஹிஜாப் என்னும் அழகிய நடைமுறை.

பிரத்தியேகமாக ஒரு ஆடையைதான் ஹிஜாபாக அணிய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எதுவும் கிடையாது. பெண்கள் சாதாரணமாக அணியும் ஆடைகள் இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் அதுவே போதுமானதுதான். ஆனால் நடைமுறையில் ஒரு ஆடை சந்தையில் இருப்பதால் பெண்கள் அதனை அணிந்து கொள்கின்றனர்.

ஆனால் தற்போது சந்தையில் உள்ள பர்தாக்களின் நிலை என்ன? இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சீரழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் மேற்குலகு முஸ்லிம் பெண்கள் கண்ணியமாக ஆடை அணிவதை கண்டு சும்மா இருக்குமா? பர்தாக்களிலும் தங்கள் கைவண்ணத்தை காட்ட ஆரம்பித்தார்கள். ஆரம்ப நாட்களில் இருந்தது போன்று வெறும் கறுப்பு கலரில் எத்தகைய அலங்காரமும் இல்லாத பர்தாக்களை இன்று உங்களால் காண இயலாது. இத்தகைய ஒரு பர்தாவை இன்று கடைகளில் சென்று கேட்டால் கடைக்காரர் ஏதோ ஒரு வேற்றுக் கிரக வாசியை பார்ப்பது போல் நம்மை பார்க்கிறார்.

பல விதமான அலங்காரம் கொண்ட, இறுக்கமாக தைக்கப்பட்ட, பல வண்ணங்களில் ஸ்கார்ப்களை கொண்ட ஆடைகள் தான் இன்று பர்தாக்களாக காட்சி தருகின்றன. அதிலும் இவர்கள் தலையில் அணியும் ஸ்கார்ப் கழுத்திற்கு கீழ் வருவதே இல்லை. இத்தகைய ஒரு பர்தாவை அணிவதற்கு பதிலாக சாதாரண உடையை அணியலாம்.

மேற்குலகின் இந்த சதியில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஹிஜாபை முறையாக பேண வேண்டும். இதில் ஆண்களுக்கும் கணிசமான அளவு பங்கு இருக்கிறது. ஹிஜாபின் முக்கியத்துவத்தை பெண்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் பின்னர் அவர்களை பர்தாவை அணிய வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் பெண் பேசி முடித்தவுடனே சம்பிரதாயமாக ஒரு ஜிகு ஜிகு பர்தாவை எடுத்து அனுப்பினால் என்ன பிரயோஜனம்? தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் சகோதரிக்கும் பர்தாவின் முறையை விளக்க வேண்டியது ஆண்களின் கடமை.

பர்தாவை ஆபாசமாக காட்டிய பெருமை சினிமாக்களுக்கு உண்டு என்றால் அதற்கு செயல்வடிவம் கொடுத்த பெருமை நமது பெண்களுக்கு உண்டு. இருபது வருடங்களுக்கு முன்னர் நமது ஊர்களில் எல்லாம் நாம் இந்த பர்தா என்ற ஆடையை காண இயலாது. ஆனால் அப்பெண்களிடம் ஹிஜாபை பேணும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்றோ பர்தா அணியாத இஸ்லாமிய பெண்களை பார்ப்பது அரிது. 
சிந்தனைக்கு
- ஏர்வை ரியாஸ்

நன்றி:பாலைவனத்தூது

0 கருத்துகள்: