கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!
கேள்வி
மாமியார் மருமகள் சண்டைகள் ஏற்பட்டு பெற்ற தாய் கட்டிக்கொண்ட மனைவியை பார்க்கக்கூடாது ன்று கூறுகிறார்  அல்லது அருமை மனைவி தாயை பார்க்க வேண்டாம் என்றும் அடம்பிடிக்கிறாள் என்ன செய்வது?
பதில்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம்.  நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!


எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
முதலில் மேற்கண்ட இந்த இறை வசனத்தை உள்ளத்தில் ஆழமாக பதித்துக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லை காரணம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கம் கீழ்படியாமைதான்! எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா? நம் ஆதிபிதா ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) இருவரும் தவறு செய்தார்கள் அல்லாஹ் இருவருக்கும்தான் தண்டனை அளித்தான் இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்த்து தண்டனை அளிக்கவில்லையே!
 பெற்றோரை பேணுதல் 
பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்”
(லுக்மான்: 14).
  இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).

தாய்க்கு முன்னுரிமை வழங்கிய மாநபி நாயகம் (ஸல்)
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,   ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
  
தந்தைக்கு கண்ணியம் அளிக்க அறிவுறுத்திய அருமை நபி (ஸல்)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.  நூல்: திர்மிதீ
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516
  பெற்ற தாய், தந்தையர் சுவனத்திற்கு உவமை!
முஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து
” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா?” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.  அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி) நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்
 

மனைவியை பேணுதல்

“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.”  (ஸஹீஹ் முஸ்லிம்)
 (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)
 மூமினான மனைவியை வெறுக்காதீர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நல்ல மனைவிக்கு அடையாளம்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
 மனைவியிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது! நபிமொழி!
பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)
நீங்கள் சிறந்தவரா? சுய பரிசோதனை செய்து பாருங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)
பெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு?
·                    பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்,

உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப் பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!

இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப்பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்!

இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்!

மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்!

தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

”நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!
அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்!
மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
குறிப்பு
மார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்! எப்படி வரும் நிம்மதி! 


 நம் அனைவருக்கும் நல் குடும்பத்தை வழங்கி அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி :http://islamicparadise.wordpress.com/


0 கருத்துகள்: