கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்

பாலைவனத் தூது நடத்திய கட்டுரைப் போட்டியில்முதல் பரிசு பெற்ற கட்டுரை
அறிமுகம்
ஊடகம் என்பதை தரவுகள், தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.

இது அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் சாசனம், புத்தகம், பத்திரிகை, சஞ்சிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலே ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் (existence) உயிர்ப்பையும் (dynamism) நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப் (identity) பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக் கட்டமைக்கப்படும் போலிப் புனைவுகளையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச் சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான போர், "ஊடகப் போர்" (media war) என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

இஸ்லாம், முஸ்லிம் என்ற இரண்டு சொல்லாடல்கள் (discourse) குறித்த பல்வேறு புனைவுகள், சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம். அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்ட அடிப்படையில் உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இத்தகைய இழி செயலில் மேலைத்தேய ஊடகங்களும் கீழைத்தேய ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஸியோனிஸ, கிறிஸ்தவ, ஹிந்துத்துவ சக்திகள் தமது இஸ்லாமிய எதிர்ப்பை, முஸ்லிம் எதிர்ப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதற்கு ஊடகத்தையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.

மேலைத்தேய உலகைப் பொறுத்தவரையில் முதலாவது செய்திப் பத்திரிகை 1605ம் ஆண்டிலும், முதலாவது வானொலிச் சேவை 1920ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டதாக விக்கிபீடியா பதிவு செய்துள்ளது. எனின், முஸ்லிம் உலகின் நிலையென்ன? உலகின் எந்த மூலையில் எந்த ஒரு முஸ்லிம் நாட்டுக்கோ முஸ்லிம்களுக்கோ எத்தகைய கொடூரமான அநியாயங்கள் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க நமக்கென்று ஓர் ஊடகம் இருக்கவில்லை. பி.பி.சி. (B.B.C.), சி.என்.என். (C.N.N.), ஏ.பி. (A.P.), ராய்ட்டர்ஸ் (Reuters) முதலான பக்கச் சார்பு ஊடகங்களினால் கட்டமைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளே உலகமெங்கும் பரவலாகச் சென்றடைந்தன. உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக சொல்லொணாத வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும் கேட்பார் பார்ப்பாரற்ற அனாதைச் சமூகமாக, அகதிச் சமூகமாக நம்முடைய சமுதாயம் நாதியற்றுத் தவிக்கும் நிலையே காணப்பட்டது.

இந்நிலையில், பல்வேறுபட்ட சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் Al Jazeera (அல்ஜஸீரா) அரபுத் தொலைக்காட்சிச் சேவை 1996ம் ஆண்டிலும் ஆங்கில சேவை 2006ம் ஆண்டிலும், பிரஸ் தொலைக்காட்சி (Press TV) சேவை 2007ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று விதந்துரைக்கத்தக்க முஸ்லிம் ஊடகங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய ஒரு பின்புலத்தில் தமிழ்நாட்டில் 13.7 சதவீதமும், இலங்கையில் 7.6 சதவீதமும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கென்று தனியான முழுநேர செய்தி ஊடகமொன்றின் தேவை பரவலாக உணரப்பட்டு வருவதையும் அதற்கான முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். என்றபோதிலும் ஒருங்கிணைக்கப்பட்டதும், பரவலாக மக்களைச் சென்றடையக்கூடிய சக்திவாய்ந்ததுமான தமிழ் முஸ்லிம் ஊடகமொன்றை உருவாக்கி வளர்க்கும் நம்முடைய நெடுங்காலக் கனவு இன்னும் முழுமை பெறவில்லை என்றே கூற வேண்டும். அந்தக் கனவை நனவாக்கும் முதற்கட்ட முயற்சியென்ற வகையில் "நமக்கென்று ஒரு நாளிதழ்" குறித்து சிந்திப்பதும் திட்டமிட்டு செயற்படுவதும் அதனை நோக்கி இடையறாது பாடுபடுவதும் தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய நமது இன்றியமையாத சமூகப் பணியாகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த நற்கூலிகள் உள்ளன. அந்த அடிப்படையில், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டங்களை முறியடிப்பதற்குரிய மிகப் பிரதான ஆயுதமான ஊடகமொன்றைக் கட்டமைத்து அதனை ஸ்திரமடையச் செய்வதும் ஜிஹாதின் ஒரு பகுதியே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில்,

"அவர்(நிராகரிப்பாளர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது." (8:60)
என்ற அல்குர்ஆன் வசனத்தின் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்ளத்தக்க எல்லா வகையான போர் சாதனங்களையும் சித்தப்படுத்தி தயாராக வைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தத் திருமறை வசனம் இன்றைய ஊடகப் போருக்கும் பொருந்தி வரும் என்பதில் ஐயமில்லை. இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கு மலையாளத்தில் தேஜஸ், மாத்யமம் எனும் நாளிதழ்களும் தமிழில் மணிச்சுடர் எனும் நாளிதழும் முக்கியமானவை. அவ்வாறே இலங்கையைப் பொறுத்தவரையில், நவமணி வாரமிருமுறை இதழாக வெளிவந்து அண்மைக்காலமாக வாரமொருமுறை மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவை தவிர மறுமலர்ச்சி வாரப் பத்திரிகை, எங்கள் தேசம் மாதமிருமுறைப் பத்திரிகை என்பனவும் குறிப்பிடத்தக்கவையே.

1. பிரச்சினைகளும் சவால்களும்எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காண வேண்டுமானால், அது தொடர்பான பிரச்சினைகள், சவால்களை இனங்காண்பதோடு, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவதும், தக்க அணுகுமுறைகளைக் கையாண்டு செயற்படுத்துவதும் முக்கியமானதாகும். அந்த வகையில், நமக்கான ஊடக உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் குறித்து நோக்குவது பொருத்தமானதே!

1.1 நமக்கான ஊடகம் எனும் எண்ணக்கருவின் தத்துவார்த்தப் பின்புலத்தை (The Background of Conceptual Criteria) வரையறுப்பதிலுள்ள சிக்கல்கள்

நம்மவர் மத்தியில் நமக்கான ஓர் ஊடகம் இருக்கவேண்டியதன் இன்றியமையாமை குறித்த விழிப்புணர்வு தோன்றியிருப்பது ஓர் ஆரோக்கியமான அம்சமே. எனினும், அதனைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சிகள் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவை இடையிலேயே நின்று போயின. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த செய்தி ஊடகம் என்றளவில் முன்னோடி முயற்சியாக ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சி இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றது. இதற்கான மிகப் பிரதானமான காரணங்களாக நாம் பல்வேறு அம்சங்களை அடையாளப்படுத்தலாம். என்றபோதிலும், இவ்விடயம் தொடர்பாக நாம் மிக முக்கியமானதோர் அம்சம் குறித்து நமது கவனத்தைத் திருப்புவது இன்றியமையாததாகின்றது. அதாவது, நமக்கான ஊடகம் ஒன்றை வரையறுப்பது குறித்து சில அடிப்படையான கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. அவை வருமாறு:

அ) நமக்கான ஓர் ஊடகம் என்பதன் உட்கருத்து என்ன?

ஆ) அந்த ஊடகத்தின் பேசுபொருள் வெறுமனே முஸ்லிம்களின் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் குவிமையப் (focus)படுத்தியதா?

இ) அதன் இலக்கு வாசகர்கள் யாவர்?

நமக்கான ஊடகம் எனும்போது அது, நம்முடைய பிரச்சினைகளை நாம் பேசுவதற்கானதா அல்லது நம்மிடமிருந்து மனிதகுல மேம்பாடு கருதி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தக் கூடியதும், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் குரல் கொடுப்பதாகவும், நம்முடைய சமுதாயம் பற்றிய விசாலமான பார்வையை சகோதர சமுதாயத்தவரிடம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையத்தக்க ஒரு பொது ஊடகமா என்பதை வரையறுப்பதில் முதலாவது கேள்வி முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இதற்கான விடையை வரையறுக்கும் போது ஏனைய இரண்டு கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் கிடைத்து விடுகின்றது.

ஏனெனில், முதலாவது வகைமையைப் (category) பொறுத்தவரையில், இன்று நம்மிடையே உள்ள அனேகமான மாத, வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவ்வகையைச் சேர்ந்தவையே. இவை முஸ்லிம் உலகின் பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதோடு, சன்மார்க்கப் போதனைகள், உள்ளக சமூக-கலாசார சீராக்கம் (inter socio-cultural reform) பற்றிய விழிப்புணர்வு ஊட்டுவதாகவுமே அமைந்துள்ளன. எனவே, தவிர்க்க முடியாதவாறு முஸ்லிம்களே இவற்றின் இலக்கு வாசகர்களாக உள்ளனர்.

இந்நிலையில், நம்முடைய பிரச்சினைகளை நமக்குள் நாம் பேசிக்கொள்வது, விசனப்படுவது என்ற நிலையிலிருந்து மாறி, அடுத்தகட்ட நகர்வாக, நம்முடைய பிரச்சினைகளை மற்றவர்கள் மத்தியிலும் கொண்டு சென்று, பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் வெற்றிகரமாகத் திருப்புவது, தாக்குதிறன் கூடியதாக (effectively) நம்முடைய நியாயமான கோரிக்கைகளை, போராட்டங்களை முன்னெடுப்பது, சமூக-தேசிய மேம்பாடு தொடர்பான நம்முடைய காத்திரமான பங்களிப்பை வழங்குவது முதலான அம்சங்களை உள்வாங்கியதாக நம்முடைய ஊடகம் அமைவதே மிகப் பொருத்தமானது. எனவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காகவும், நமக்கெதிரான சவால்களை முறியடிப்பதற்காகவும் மட்டுமின்றி, நீதியை நிலைநிறுத்த வேண்டிய நடுநிலைச் சமுதாயத்துக்குரிய (உம்மத்தன் வஸத்) பணியைத் திறம்படச் செய்வதற்காகவும் அத்தகைய ஒரு பொது ஊடகத்தை நோக்கி நகர்வது காலத்தின் தேவையாக உள்ளது.

2. ஏனைய சவால்கள்2.1 நிதிப் பிரச்சினை (Financial Problem)
ஒருசில தன்னார்வமுள்ளோரால் அல்லது துடிப்புமிக்கதோர் இளைஞர் குழுவினரால் சமுதாயத்துக்காகப் பணியாற்றும் தீராத தாகத்தோடு ஆரம்பிக்கப்படும் இதழியல் முயற்சிகளைப் பொறுத்தளவில் அவை பாரியளவு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்படுவதில்லை. பத்திரிகையின் விற்பனை சூடு பிடிக்கும் வரையும் பிரசுரத்துக்காகச் செலவிட்ட பணத்தை விற்பனை வருமானம் மூலம் மீளப் பெற முடியாத நிலையிலும் தளராது நட்டத்துடனேனும் தொடர்ச்சியாகப் பத்திரிகையை வெளியிடுமளவுக்குத் தேவையான நிதி இன்மை அனேகமான பத்திரிகைகள் இடையிலேயே நின்று போவதற்கான பிரதான காரணமாக உள்ளது. புதிதாக அறிமுகமான பத்திரிகை என்ற நிலையில் போதிய விளம்பரங்கள் கிடைக்காமை, விற்பனை முகவர்களிடமிருந்து முறையாகப் பணம் வசூலிப்பதிலுள்ள இடர்பாடுகள், நம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் இன்மையால் விற்பனை வருமானத்தை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலைமை என்பன இந்த நிதிப் பிரச்சினையை பூதாகரமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் மிகையில்லை. இத்தனையையும் தாண்டி குறித்த பத்திரிகையை நடப்பு நட்டத்தைத் தாங்கிக்கொண்டே தொடர்ச்சியாக வெளியிடக்கூடிய நிலை வெகு அரிதானதாகும்.

2.2 வளப் பற்றாக்குறை (Resource Constraint)
இது பன்முகப்பட்டதாகும். அதாவது, வளம் எனும்போது அதற்குள் தொழிநுட்பம் மற்றும் உடைமைகள் சார்ந்தவை, மனித அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தவை என்று பல வகைப்பட்ட வளங்களிலுள்ள பற்றாக்குறை நிலைமைகளும் உள்ளடங்குகின்றன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற செய்தியாளர்கள், பத்திரிகையின் வடிவமைப்பு முதலான தொழினுட்பம் சார்ந்த துறைசார் நிபுணர்கள், அச்சக வசதி, போதிய ஊழியர் படை, பரவலான விநியோகத்துக்குத் தேவையான வாகன வசதி, நாடெங்கிலும் நேர்மையான முகவர்கள் அல்லது விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் என்று பல்வேறுபட்ட அடிப்படை அம்சங்கள் இந்த வளப் பற்றாக்குறை என்பதோடு தொடர்பு படுகின்றன. இவை அனைத்தும் சரிவர அமைதல் என்பது மிகச் சிக்கலான ஒன்றாகும் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

2.3 நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் (Administrative Issues)
நாம் மேலே குறிப்பிட்டுள்ள முதலிரண்டு பிரச்சினைகளுக்கு சற்றும் முக்கியத்துவம் குறையாத ஓர் அம்சமாக முகாமைத்துவம் சார்ந்த பிரச்சினைகள் திகழ்கின்றன. ஏனைய துறைகளைப் போலவே ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்திலேயே சரியானதும் நுணுக்கமானதுமான திட்டமிடல் இன்றியமையாததாகும். அந்த வகையில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதெனில், பத்திரிகையின் பிரதான கொள்கையை வரையறுத்தல், இலக்கு வாசகர் வட்டத்தை நிர்ணயித்து அதற்கேற்ப பத்திரிகையை வடிவமைத்தல், பத்திரிகையை இலாபத்தை எதிர்பார்க்காமலும் நட்டத்தை எதிர்கொண்டவாறும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதற்கு எந்தளவு மூலதனம் தேவை, ஊழியர் படை மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைப்பது எப்படி முதலான தீர்மானங்கள் மிகத் துல்லியமாக அமைதல் இன்றியமையாததாகும். இதற்குக் கருத்தொருமித்த நிர்வாகக் குழுவொன்று இருப்பது கட்டாயமானதாகும். அதாவது, மிகச் சிறப்பானதொரு நிர்வாகக் குழு இல்லாத பட்சத்தில் வெற்றிகரமானதொரு பத்திரிகையை வடிவமைத்தல், இருக்கின்ற நிதியை முறையாகக் கையாளுதல், போதியளவு நிதியைப் பெருக்கிக் கொள்ளுதல், விற்பனை சார்ந்த பிரச்சினைகளைத் திறம்படக் கையாளுதல் முதலான இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்துவது சாத்தியமற்றதாகும். எனவே, ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது சிறந்த நிர்வாகத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.

2.4 முஸ்லிம் மக்களிடம் போதிய வாசிப்புப் பழக்கமின்மைஇந்திய - இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். அதிலும், எத்தனையோ வீண் ஆடம்பரங்களுக்காகப் பணத்தை அள்ளியிறைக்கும் நம்மவர்கள் ஒரு சிறு தொகைப் பணத்தை புத்தகமொன்றை, பத்திரிகையொன்றை வாங்குவதற்காகச் செலவழிப்பதை பெரும் சுமையாகக் கருதும் மனப்பாங்கே மேலோங்கியுள்ளது எனலாம். தொலைக்காட்சி, இணையம் என்று இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட சூழ்நிலையில் நாளாந்த, வாராந்த பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கம் நம்மவர் மத்தியில் மிக அரிதாகி வருகின்றது. இந்நிலையில், நம்முடைய இலக்கு வாசகர்கள் யார் என்று தீர்மானித்து அதற்கேற்ப பத்திரிகையின் உள்ளடக்கத்தை வடிவமைக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஜனரஞ்சகமான பத்திரிகைக்குரிய அம்சங்களை இணைத்து சகல தரப்பினரையும் உள்வாங்குவதானது வெற்றி வாய்ந்த ஒரு நாளிதழுக்குரிய அடிப்படையாகத் திகழ்ந்தாலும், மிக இறுக்கமான மனப்போக்குடைய நம்முடைய உலமா பெருமக்களுக்கிடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகள், சர்ச்சைகள், மார்க்கம் சார்ந்த விடயங்களை ஒற்றைத் தன்மையோடு அணுகும் போக்கு என்பன மிகப் பெரும் தடைக்கற்களாக அமைந்துள்ளன எனலாம். உதாரணமாக, ஒரு பக்கக் கட்டுரை மூலம் விளக்கக்கூடிய ஓர் ஆழமான அரசியல் செய்தியை ஒரேயொரு அரசியல் கார்ட்டூன் மூலம் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில், உருவம் வரைவது கூடுமா கூடாதா என்ற சர்ச்சைக்குள்ளேயே தசாப்த காலமாய் அமிழ்ந்து கிடக்கும் அவல நிலை இன்னும் முற்றாக அகன்று விடவில்லை என்பதைக் குறிப்பிடலாம்.

3. சில தீர்வு முன்மொழிவுகள்
நாம் தொடர்ந்து பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றோம். அன்றாடம் எதிர்கொண்டு வருகின்ற சவால்களைப் பற்றி மணிக்கணக்காய் கலந்துரையாடுகின்றோம். நம்முடைய நிலைமை என்ன என்பதைத் தெளிவாக அறிவதற்கு அதெல்லாம் மிக அவசியம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதுதான். என்றாலும், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, அதாவது நாம் இதுவரை இனங்கண்டுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டவாறு முழு முனைப்போடு நம்முடைய ஊடக இலக்கினை அடைவதற்கு என்னென்ன தயாரிப்புகளை செய்து வைத்துள்ளோம் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். எனவே இனி நாம் வெற்றிகரமான ஒரு செயற்திட்டத்தை (Project) முன்னெடுப்பதற்கான தீர்வு வழிவகைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானதே!

3.1 நிதியீட்டலும், நிதியைப் பெருக்குதலும்ஆழமறிந்து காலை வைத்தால் மூழ்கிச் சாகாமல் பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போல, அதிக மூலதனமொன்று தேவைப்படும் இந்த முயற்சியில் இறங்கும் நாம், அவசரப்பட்டு காரியமாற்றாது போதிய நிதியினைச் சேகரித்துக்கொள்வது மிக இன்றியமையாததாகும். இதற்கான முயற்சியில் ஒருசில வருடகாலமேனும் செலவிட்டு உரியளவு நிதியைச் சேகரிப்பதோடு, அதில் கணிசமானதொரு பகுதியை இலாபகரமான தொழிற்துறைகளில் முதலீடு செய்யவோ அல்லது நிரந்தர வருமானம் தரத்தக்க சொத்துக்களாக மாற்றவோ முனையலாம். இதனூடாகக் கையிருப்பில் போதிய நிதிவளத்துடன் நாளிதழ் முயற்சியில் இறங்கலாம். அது மட்டுமன்றி, பல்வேறு தொழிற்துறைகளில் முன்னணியிலுள்ள நம்முடைய வர்த்தகப் பெருமக்களை அணுகி, நம்முடைய பொதுநல நோக்கை விவரிப்பதன் மூலம் முன்கூட்டியே தொடர் விளம்பரங்களைப் பெறுவதற்கான கள வேலைகளில் ஈடுபடலாம். அவ்வாறே, சமூக நோக்குடைய இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோரின் உதவியோடு நாட்டின் அனேக பகுதிகளில் தேவையான விற்பனை முகவர்களை ஏற்பாடு செய்துகொள்வதன் மூலமும், உரிய விளம்பரங்கள் பள்ளிவாசல் ஊடான பிரச்சாரம் என்பனவற்றின் மூலமும் தொய்வற்ற முறையில் பத்திரிகை விற்பனை நடைபெறுவதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிகளில் இறங்கலாம்.

3.2 வளவாளர்கள் (Resource Persons) உருவாக்கம்இந்தியாவின் தமிழ் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இன்று நம்மிடம் மணிச்சுடர் என்றொரு நாளிதழ் வெளிவந்துகொண்டு இருப்பது சற்றே ஆறுதல் தரும் விடயமே. எனின், இதனை இன்னும் சற்று ஜனரஞ்சகப்படுத்தி, ஒரு சக்தி வாய்ந்த செய்தி ஊடகமாக மெருகேற்றுவதற்கேற்ற முறையில் உரியவர்களிடம் கலந்தாலோசித்து உரிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் முனையலாம். அவ்வாறே, நமக்கான ஓர் அச்சுக்கூடமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் படிப்படியாக ஈடுபடலாம். ஊடக யுத்தத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நடுநிலைச் சமுதாயம் அல்லாஹ்வின் பெயரால் இந்த உலகில் நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் ஆனந்தத்தையும் நிலைநிறுத்தும் மகத்தான இப்பணியை நிறைவேற்றுமுகமாக ஸகாத் பணத்தில் ஃபீஸபீலில்லாஹ் என்ற அல்லாஹ்வின் பாதையில் முயற்சிப்போருக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

அது மட்டுமன்றி, நாளைய தலைமுறையினரில் நாம் கனவு காணும் ஒருங்கிணைந்ததும் சக்திவாய்ந்ததுமான தமிழ்-முஸ்லிம் நாளிதழுக்கான வளவாளர்களை உருவாக்கும் திட்டவரைபொன்றை ஏற்படுத்தலாம். இதை நிறைவேற்றுவது எப்படி?

நமக்கென்று ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நம்முடைய நிர்வாகக் குழுவினர் தாம் திரட்டுகின்ற நிதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பின்வரும் நடவடிக்கைகளின் பொருட்டும் ஒதுக்கலாம்:

அ) இதழியல் பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்இதழியல் (Journalism) துறையில் தமிழ் முஸ்லிம்கள் தேர்ச்சி பெறுதல் இன்றியமையாததாகும். எனவே, இதன் பொருட்டு இத்துறை சார்ந்த நிபுணர்களை உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ தருவித்து ஆர்வமும் திறமையும் உள்ள நம் இளைஞர் யுவதியருக்கான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தலாம். இம்முயற்சியில் சமீப காலமாக 'மனிதநீதிப் பாசறை'யினர் ஈடுபட்டு வருவதாக அறியக் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய இம்முயற்சியின்போது தகுதி வாய்ந்த பிற சமயம் சார்ந்தவர்களின் உதவியையும் அறிவுத் திறனையும் மூலவளமாகப் (resource) பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயங்கக் கூடாது. உதாரணமாக, ஹிந்து சமயத்தவரான ஒரு பேராசிரியர் மாஸ் மீடியா துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று இனம் கண்டால், அவரை அழைத்து வந்து, அவருக்குரிய வசதிகளைச் செய்து கொடுத்து நம்முடைய கருத்தரங்கில் உரையாற்றவோ பயிற்சியளிக்கவோ சந்தர்ப்பம் வழங்கத் தயங்கவே தேவையில்லை. யார் இடித்தாலும் நெல் அரிசியானால் சரிதான் என்ற நாட்டார் பழமொழிக்கேற்ப, எங்கே வளம் இருந்தாலும் நம்முடைய தூய நோக்கத்துக்காக அதனை உரிய முறையில் பெற்றுப் பயன்படுத்தத் தவறக் கூடாது.

).இதழியல்,வெப்டிசைனிங் முதலான துறைகளில் உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்குவித்தலும் பயிற்றுவித்தலும்

முதலில் இதழியல் முதலான துறைகளில் உயர்கல்வி வாய்ப்புள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்தல் இன்றியமையாததாகும். இதில், குறித்த பல்கலைக்கழகத்தின் தரம், பாடநெறிக்கான கால எல்லை, செலவு விபரம் முதலான அனைத்தும் அடங்கும்.

அவ்வாறே, ப்ளஸ் டூ படிப்பில் மிகத் திறமையான பெறுபேறுகளைப் பெற்ற நமது மாணவர்களில் மேற்படி துறைகளில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ளவர்களை கேள்விக்கொத்து, நேர்முகப் பரீட்சை என்பன மூலம் 20-100 பேர் வரை தெரிவு செய்து, அவர்களின் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் (scholarship) வழங்கும் திட்டமொன்றை அமுல் நடாத்தலாம். இதற்கு முன், குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் தனித் தனியே சந்தித்து முழுமையான விளக்கமளிப்பதோடு, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் 2-4 வருட காலத்துக்கு குறித்த சம்பளத்தில் நம்முடைய பத்திரிகைக்காகப் பணியாற்றுவது கட்டாயமானது, தவறும் பட்சத்தில் புலமைப் பரிசிலாகப் பெற்ற மொத்தத் தொகையோடு கால விரயத்துக்கான நட்ட ஈட்டுத்தொகையையும் சேர்த்து திருப்பிச் செலுத்துதல் வேண்டும் என்ற சட்ட ரீதியான ஒப்பந்தத்துக்கு அவர்களை உடன்படச் செய்தல் வேண்டும். நமது பத்திரிகைக்காக அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே ஒருவரின் கீழ் பத்து தன்னார்வத் தொண்டர்களைக் குறித்த துறையில் பயிற்றுவிக்கும் பொறுப்பும் வழங்கப்படுதல் வேண்டும். இந்தச் சங்கிலித் தொடர் மூலம் நாம் நம்முடைய நாளிதழுக்கான தகுதியும் நிபுணத்துவமும் வாய்ந்த வளவாளர்களை உருவாக்கவும், இன்று இருப்பதை விட நாளை நம்முடைய நாளிதழ் மேலும் சக்தி வாய்ந்ததாக, மெருகு கூடியதாக, பரவலானதாக வளரவும் வழியமைக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. அவ்வாறே, இன்றைய நாளிதழை நடத்தும் நாம் நாளை கண் மூடிவிட்டால் நாம் தொடக்கி வைத்த அந்த முயற்சி மண் மூடிப் போகாமல் முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பரம்பரையையும் உருவாக்கியவர்களாவோம். இதன் மூலம் அல்லாஹ்விடத்தில் நிரந்தர நன்மைக்குப் பாத்தியதை பெற்றவர்களாகவும் நாம் மாறிவிடுகின்றோம் அல்லவா?

இ) முஸ்லிம் ஊடகவியலாளரை ஒருங்கிணைத்தல்ஊடகத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையில் உள்ள "முஸ்லிம் மீடியா ஃபோரம்" (Muslim Media Forum) இத்தகைய முயற்சியின் விளைவால் தோற்றுவிக்கப்பட்டதே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பினூடே ஊடகவியலாளரின் நலன்கள், உரிமைகள் பேணப்படுவது, அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பன தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பரஸ்பரம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
முடிவுரைஅற்பமான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இடைவிடாத சர்ச்சைகளுக்குள்ளேயே அமிழ்ந்து போய் நூற்றாண்டு கால பின்னடைவுக்குள் சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான நிலையில் ஆழ்ந்திருக்கும், தனக்குரிய சுய அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் நம்முடைய சமுதாயம் வீறு கொண்டு எழுந்து மாண்டு போன சரித்திரக் கீர்த்தியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு முதற்படியாக நமக்கென்று ஒரு சக்தி வாய்ந்த நாளிதழ் என்று தொடங்கி, வானொலி, தொலைக்காட்சி என்று படிப்படியாக முன்னேற வேண்டியுள்ளது.

செயற்கைக் கோள் எனும் செட்டலைட் வரை விண்ணோக்கி உயர்ந்து நம்முடைய முஸ்லிம் நாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்க்கும் நவீன தொழினுட்பத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள், இஸ்லாத்தின் எதிரிகள். ஆனால், உலகுக்கே வாழும் வழிமுறை வகுத்துக் கொடுத்த ஓர் ஒப்பற்ற மார்க்கத்துக்குச் சொந்தக்காரர்களாகிய நாமோ இன்னும் கார்ட்டூன் வரைவது கூடுமா, கூடாதா என்றும், புகைப்படம் எடுப்பது ஹலாலா, ஹராமா என்றும் வாத விவாதங்களில் மூழ்கிக் கிடக்கின்றோம். இத்தகைய கடும் இறுக்கமான ஒற்றைத் தன்மையோடு மட்டுமே சிந்திக்கத் தெரிந்த நம்முடைய இந்தத் தலைமுறை உலமா பெருமக்களை வெறுமனே பதிலுக்கு விமர்சித்துக் கொண்டிருப்பதைக் கைவிட்டு, புதுயுகம் படைக்கும் உத்வேகத்தோடும், அல்லாஹ்வின் மார்க்கத்தை அகிலத்தில் மேலோங்கச் செய்வதற்குரிய எல்லா வியூகங்களையும் அமைத்துப் போராடத்தக்க தணியாத தாகத்தோடும் விவேகமும் தியாக சிந்தையும் கடும் உழைப்பும் தளராத மனோதிடமும் கொண்ட நவயுக முஸ்லிம் இளைஞர் அணியொன்று முன்வரவேண்டும்.

அவர்கள் இன்று செய்கின்ற, செய்யப் போகின்ற இடையறாத இப்பணியின் பயனாய் நாளைய நம் சமுதாயமாவது புதிய விடியல் காணட்டும்! காண வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நிறைவு செய்கின்றேன். அருளாளன் அல்லாஹ் நம் அனைவரின் எண்ணங்களையும் பணிகளையும் பொருந்திக்கொள்வானாக!

உசாத்துணைகள்:
Hugh Miles, (2005) Al-Jezeera: How Arab TV news Challenged the World, Brettenham House: London.
http://en.wikipedia.org/wiki/Mass_media
http://en.wikipedia.org/wiki/Mass_media
http://dharulathar.com/
http://tamilnirubar.org/
http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=Fjpiu&B2=NjLf

அன்புடன்,இஸ்லாமிய சகோதரி,

லறீனா அப்துல் ஹக்.

0 கருத்துகள்: