சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாலத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ்பகுதி சீரமைப்புப் பணி முடிவுற்று தற்போது பாலத்தின் மேல்பகுதி சீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே செம்மண் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பாலத்தின் ஷட்டர் சீரமைக்கப்படுவதால் கீழணையிலிருந்து வீராணத்துக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கீழணை பாலம் சீரமைப்புப் பணி மார்ச் 31-ல் முடிவுற்று ஏப்ரல் முதல் வாரத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார். பாலத்தில் அடியோடு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பஸ்கள் அதிகம் வரவில்லை. இதனால், தஞ்சை, கும்பகோணம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு சென்று வர அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை தடத்தில் தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிர ஸ் மற்றும் விரைவு பாசஞ்சர் ரயில்கள் ஆகியவை தற்போது அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை, கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி:கொள்ளுமேடுஎக்ஸ்பிரஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக