கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சமுதாயதலைவர்களே… ஜமாஅத் நிர்வாகிகளே…

மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிய சமுதாயதலைவர்களுக்கும்…
முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும்
எனது இம்மடல் ஏக இறையவனின் சாந்தியோடும் சமாதானத்தோடும்
பூரண உடல் நலத்துடனும் உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற ஒரே தலைவர்
எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலான துஆ பரக்கதுடனும்
சந்திக்கட்டுமாக…
மரியாதைக்குரியவர்களே…
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் இன்ஷாஅல்லாஹ் விரைவில்
நடைபெற உள்ள இத்தருணத்தில் நமது சமூகத்தின் நலனை
அரசியல் அங்கிகாரத்தை முன்னெடுத்து செல்வது மிகமுக்கியமென
கருதியே எழுதுகிறேன்…

இந்திய அரசியல் வரலாற்றில் அதிகாரத்திற்கு அழகு சேர்த்தவர்கள் நாம்…
இன்று அதிகாரத்தை வெற்றிடமாக்கிவிட்டு மூன்றாம்தர குடிமக்களாக
ஆளும் வர்க்கத்தால் நடத்தபடுகிறோம். நமக்கு ஏன் இந்த நிலை வந்தது
என்பதை சிந்திக்கவேண்டிய கட்டாயமும் கடமையும் நாம் அனைவருக்கும் உள்ளது.
நமது நாடு சுதந்திரமடைந்து அதன் பிறகு பாக்கிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது.
நாட்டின் சுதந்திர வரலாற்றின் பெரும் பங்காற்றியவர்கள் நமது முஸ்லிம்கள்
என்பதை ஆதிக்கசக்திகள் மறைத்து வந்தாலும் முதுகெலும்பின் முதிர்ச்சியுடன்
அன்றைக்கு ஆங்கிலையனுக்கு எந்த சூழலிலும் வளைந்துகொடுக்காத முஸ்லிம்களின்
தியாக வரலாற்றை அவர்களின் அரசியல் பேரியக்கமான முஸ்லிம்லீக்கின்
செயல்பாட்டை எவனாலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ஒட்டுமொத்த ஊடகங்களும் அதிகாரவர்க்கமும்
முஸ்லிம்லீக்கை கலைத்துவிட வேண்டும் என்கிற முழக்கத்தை முன்னெடுத்து
வைத்தபோது அதனை வீரியமாக மறுத்து எம்மக்களின் ஜீவாதார உரிமைகளை பேண
முஸ்லிம்லீக் தொடர்ந்து செயலாற்றும் என இந்திய அரசியல் அரங்கை அதிர வைத்தவர்
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்கள்… இவ்வளவு ஏன்… அன்றைக்கு தமிழகத்தை
ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களை வீழ்த்தி திமுகவை ஆட்சிகட்டிலில்
அமர்தியதே முஸ்லிம்லீக்கின் வியுகம் என்பதை இன்றைய திமுக ஆட்சியாளர்களே
மறுக்க முடியாது.
இப்படி ஆட்சியாளர்களையே உருவாக்கிய சமூகம் இன்று அரசியல் அடிமைகளாக
நடதபடுவதை நம்மால் ஏற்றுகொள்ள முடியுமா…? 1960களில் எவ்விதமான போதிய
வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்திலேயே வீரியமாக வெற்றிகொள்ள முடிந்த நம்மால்
இன்று ஏன் முடியவில்லை…? இன்று நமது சமூகத்து இளையர்கள் எவருக்கும் சலைத்தவர்கள் இல்லை…
கல்வியிலும் தொழில்துறைகளிலும் நம்மவர்கள் இல்லாத இடங்களை இன்று காண்பிக்க முடியுமா…?
எந்த சமுதாய மக்களுக்கும் கிடைக்கபெறாத விவேகமான தலைவர்கள் நமது சமூக அமைப்புகளின்
தலைவர்கள் என்பதை மறுக்கமுடியுமா…?
கொள்கைகளாலும் அமைப்புகளாலும் பிரிந்திருந்தாலும் ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு
தனி சிறப்பை அல்லாஹ் கொடுத்துள்ளான். ஆயிரக்கணக்கான தமிழக முஸ்லிம்களை பல்லாயிரம்
மைல்களுக்கு அப்பால் அழைத்து சென்று இட ஒதுக்கீட்டிற்காக
நாட்டின் தலைநகரத்தையே அதிரவைத்த தலைவர்கள் நம்மில் இல்லையா…?
தமிழ் மண்ணிலேயே லட்சோபலட்ச மக்களை திரட்டி அரசுகளுக்கு நமது வலிமையை
காட்டிய தலைவர்கள் நம்மில் இல்லையா…? இறையவன் இல்லத்திற்கு எதிரான
அநீதிதீர்ப்பை கண்டித்து கைது செய்யப்பட்டு காலவரையற்ற சிறை கம்பிகள் சீதனமாய்
கிடைக்கும் என்பதை அறிந்தும் நாட்டிலேயே முதலில் களமிறங்கியதும் நமது தமிழக
தலைவர்கள் இல்லையா…?
இத்தனை வலிமைகள் இருந்தும் நமது வலிமையை நாமே இன்னும் உணரவில்லை என்பதுதான்
கவலைக்குரிய வருத்தம்… இந்த வருத்தங்களை கலைந்து நமது அடுத்த தலைமுறைக்கான
வலிய செயல்திட்டங்களை வடிவமைக்ககூடிய காலகட்டம் இதோ தேர்தல் களமாக நம் முன்னாள்…
இந்த தேர்தலில் நாம் என்ன செய்யபோகிறோம் போன தேர்தல் மாதிரியே எதாவது ஒரு கட்சிக்கு
வாக்களித்துவிட்டு கைகளில் இடப்படும் கருப்பு மைகளுடன் நிற்க்கபோகிறோமா..? அல்லது
அதிகார பகிர்விற்கான அடித்தளத்தை அமைக்க போகிறோமா?
மரியாதைக்குரிய சமுதாய தலைவர்களே
நீங்கள் அனைவருமே எதாவது ஒரு கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டீர்கள்
இந்த தேர்தல் நெருங்கிவிட்ட காலகட்டத்தில் அதனை மாற்ற வேண்டுமென்பது
அறிவுக்கு உகந்தது அல்ல.. ஆனால் நாம் பல்வேறு கூட்டணிகளில் அங்கம் வகித்தாலும்
ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிபடையில் நமது சமூகத்தின் பிரதிநிதிதுவதை
வரும் சட்டமன்றத்தில் அதிகபடுத்த ஒருங்கிணைந்து களமாடலாம் அல்லவா…
அரசின் கணக்கு அடிபடையில் நமது சமூக மக்கள் தமிழகத்தில் பத்து சதவிகிதம் அதாவது
சுமார் அறுபத்தைந்து லட்சமாக அறியபடுகிறது. இதில் உண்மையில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்…
அரசின் கணக்குபடியே பார்த்தாலும் தமிழக மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் இருக்கும் நாம்
தமிழக சட்டமன்றத்தில் குறைந்தபட்சம் 24 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய சட்டமன்றத்தில் வெறும் 7 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுருக்கிறோம்.
ஆக நமது இடங்களில் 17 வேறு சமூகத்தால் களவாட பட்டுள்ளது. இந்த நிலையை நாம் இந்த தேர்தலில்
வேரறுக்க வேண்டும்.
பெரிய கட்சிகள் அனைத்துமே நம்மை ஒரு சீட் இரண்டு சீட் எனகொடுத்து ஓரங்கட்டதான்
பார்ப்பார்கள் இதில் கலைஞரோ ஜெயலலிதாவோ ஒருத்தருக்கு ஒருத்தர் சலைத்தவர்கள் அல்லர்.
இப்படிப்பட்ட சூழலில் நாம் எந்த செயல்திட்டத்தின் அடிபடையில் ஒருங்கிணைந்து வெல்வது…!
இங்குதான் நாம் சாதுரியமாக காய்களை நகர்த்தி களமாட வேண்டும்.
ஆம் வேறு எந்த சமூகத்திற்கும் இல்லாத மிகப்பெரிய வலிமை நமக்கு உண்டு அதுதான்
நமது முஹல்லாஹ் ஜமாத்துக்கள், ஜும்மா மேடைகள். பாரம்பரியமிக்க ஜமாத்துகளின்
தலைமை பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் அதன் வலிமை உணராததின் விளைவுதான்
அந்த தலைமை பொறுப்புகள் வெறும் அலங்கார பொறுப்பாகவே அடையாளைபடுதபட்டுவிட்டது.
முஹல்லாஹ் ஜமாஅத் தலைவர்களே
நீங்கள் அல்லாஹுவின் அமானிதத்தை வைத்துள்ளீர்கள் அதனை முறையாக பயன்படுத்த
வேண்டியது உங்கள் கடமை. அந்தந்த முஹல்லாஹ் மக்களின் வாழ்வாதாரத்தையே தீர்மானிக்க
கூடிய வல்லமை உங்களுக்கு இருந்தும் ஏன் தாழ்வு மனப்பான்மையில் மூழ்கி நமது சமூக
எதிர்காலத்தை கேள்விக்குறியாக வேண்டும். தயவு செய்து சற்று சிந்தியுங்கள் முஸ்லிம்களின்
பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரும் எந்த கட்சியின் வேட்பாளரும் எந்த சமூகத்தின் வேட்பாளரும்
முதலில் சந்திப்பதே ஜமாஅத் நிர்வாகத்தைதானே.
ஆக நமது சமுதாயத்தின் உரிமைகளை வெல்ல பயன்பட வேண்டிய துருப்பு சீட்டுகளே நீங்கதானே.
இன்ஷாஅல்லாஹ் கடந்த கால கசப்புகளை புறம்தள்ளிவிட்டு எதிர்கால வென்றுரெடுப்பு பணிகளுக்கு
ஆயத்தமாகுங்கள்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த சட்டமன்ற தேர்தலின் நமது இலக்கு முஸ்லிம்கள் குறைந்தபட்சம் 24 பேர்களாவது
சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில்
நாம் சுமார் 60 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிரணயிக்கும் சக்தி என்பதை
மறக்ககூடாது. 20 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து நின்றே வெல்லகூடியவர்கள் என்பதையும்
மறக்ககூடாது. அரசியல் கட்சிகள் நமது பிரதிநிதிதுவதை வேரறுக்க விபரமாக விளையாடுவார்கள் அதனை
நாம் விவேகமாக வியுகமமைத்து வென்றால்தான் நமது இலக்கை அடைய முடியும்.
வரும் தேர்தலில்
போட்டியிடக்கூடிய முஸ்லிம்களை அவர் எந்த அமைப்பை கட்சியை சார்ந்தவர் என்கிற பேதமில்லாமல்
ஒருங்கிணைந்து ஆதரிக்க வேண்டும் குறிப்பாக முஸ்லிம்கள் வாக்குவங்கி வலிமையாக உள்ள இடங்களைத்தான்
அரசியல் கட்சிகள் நமக்கு ஒதுக்குவார்கள் ஆம் முஸ்லிம் வேட்பாளர்களை நேரடியாக மோதவிடுவார்கள்
அதில் நிச்சயமாக ஒருவர்தான் வெல்வார் மற்றொருவர் தோல்வியடைவார் ஆக நமது சமுதாயதிற்குதான்
ஒரு சட்டமன்ற உறுப்பினர் இழப்பு… அதனை தவிர்க்க வேண்டும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும்
முஸ்லிம் நேரடியாக மோதவிடகூடாது. முதலில் அறிவிக்கப்படும் கூட்டணியின் வேட்பாளருக்கு அடுத்து
அறிவிக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர் போட்டியாளராக வரக்கூடாது. அதனை அந்த பகுதிகளில் உள்ள
ஜமாதார்கள்தான் தடுக்க முடியும்.
உதாரணமாக மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு
முதலில் அறிவிப்பு வெளியானால் அடுத்து திமுக கூட்டணியில் அதே தொகுதி முஸ்லிம்லீக்கிற்கு ஒதுக்கபட்டால்
மறுத்து மாற்று தொகுதிகோர வேண்டும். இயலாவிட்டால் தொகுதியே தேவை இல்லை என்கிற நிலையை
எடுத்து நமது வலிமையை பெரிய கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும். அப்படி உணர்தியத்தின் விளைவு
வெற்றியானால் அடுத்த தேர்தலில் அரசியல் கட்சிகள் நமக்கு பின்னால் வருவார்கள். இன்ஷாஅல்லாஹ்…
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாத முஸ்லிம்களின் தொகுதிகளில் தொகுதிக்கு உட்பட்ட அணைத்து
முஹல்லாஹ் ஜமாத்துகளும் அணைத்து சமுதாய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான
முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த வேண்டும். சமுதாய மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் நமது முஸ்லிம் வேட்பாளருக்கே
கிடக்க வேண்டிய வேலையை கடந்த காலங்களில் யார் யாருக்கோ வீதி வீதியாக ஓட்டுகேட்டு உயர்ந்த பதவிகளை
மற்றவர்களை அமரவைத்து அழகு பார்த்த சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும்
செய்யவேண்டும்..
இவைகள் சாத்தியமா என்கிற கேள்விகளை கேட்டு நம்மை நாமே மேலும் வலுவிழக்க செய்யும் வேலைகளை
பார்க்க வேண்டாம்… சாத்தியமில்லை என்கிற வார்தைதவிர அனைத்துமே அல்லாஹ் நாடினால்
சாத்தியமாகும்…
அசாத்திய நம்பிக்கையுடன் அரசியல் களம் கண்ட விஜயகாந்த் இன்று தமிழக அரசியலில்
தவிர்க்க முடியாத சக்தி… சில மாவட்டங்களில் மட்டுமே வாழும் கொங்கு வேளாள மக்களை
பிரதிநிதிக்கும் கொங்கு முன்னேற்ற கழகம் இன்று அணைத்து கூட்டணிக்கும் தேவைப்படும் வாக்கு வங்கி…
நாடாரின மக்களின் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டுள்ள நடிகர் சரத்குமாரின்
சமத்துவ மக்கள் கட்சி அதன் வரவை திமுக அதிமுக இரண்டு கூட்டணிகளுமே எதிர்பார்க்கிறது…
ஆளே இல்லாத நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி 10 தொகுதிகள் கேட்டு பேரம் பேசுகிறது…
இவர்களிடமெல்லாம் சாத்தியமா…? என்கிற கேள்வி இல்லை சாதிக்க வேண்டும் என்கிற வெறிதான் உள்ளது.
அடிபடையில் வலிமையான மக்கள் கட்டமைப்பைகொண்ட நம்மால் சாதிக்க முடியாதா…?
அறிவார்ந்த இளைஞர்களும் ஆளுமைதிறன் படைத்த தலைவர்களும் மனிதனை நெறிபடுத்தும் மார்க்கமேதைகளான
உலாமா பெருந்தகைகளும் உள்ள நமது சமுதாயத்தாள் சாதிக்க முடியும் இன்ஷாஅல்லாஹ்…
குறிப்பு: காலத்தின் கட்டாயம் கருதி இந்த எனது கடிதம் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கும்
நமது முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் கொண்டு செல்லுங்கள் அல்லாஹ் நமது தலைமுறைக்கான
வெற்றியை எளிதாக்க இணைந்து துஆ செய்வோம்…
சமுதாய சகோதரன்
வேங்கை.சு.செ.இப்ராகிம்
http://vengai2020.blogspot.com/

0 கருத்துகள்: