கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கடன் வாங்கி கடன் கொடுத்து....


தங்க நகைகளை இரவல் வாங்கி தன்னை அலங்கரித்து செல்வது
தலைப்பிற்கும் சொல்ல வந்த விசயத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் படிப்பவர்களுக்கு தோனலாம். கீழே உள்ளதை படித்து கூட்டிக்கழித்து பார்த்தால் சம்மந்தம் ஆகிவிடும்.

ஊரில் சக நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், நாமும் பல முறை கண்ணில் கண்டதன் விளைவாகவும் இது பற்றி எழுத நேரிட்டது.

ஊரில் பெரும்பான்மையான பெண்கள் தன் குடும்பத்தில், தெருவில் நடக்கும் கலியாண வைபவங்களுக்கும், இன்னும் பிற விசேச காரியங்களுக்கும் மார்க்க வரம்பிற்குட்பட்டு தன்னை அலங்கரித்து பெண்கள் ஒன்றுகூடுமிடம் செல்வதில் தவறில்லை என்ற போதிலும் போதிய தங்க நகைகள் தன்னிடம் இல்லை என்ற காரணத்திற்காக அக்கம்பக்கத்து வீட்டில் தங்க நகைகளை இரவல் வாங்கி தன்னை அலங்கரித்து செல்வது ஊரில் பரவலாக இருந்து வரும் வழக்கமாக உள்ளது.

இது முற்றிலும் தவறானதும் தடுக்கப்பட வேண்டிய விஷயமும் ஆகும். காரணம் அப்படி இரவல் (கடனாக) வாங்கி நகைகள் அணிந்து செல்லும் பொழுது அது வழியில் எங்கேனும் தவறி விழுந்து விட்டாலோ, திருடப்பட்டு விட்டாலோ, உடைந்து பகுதி விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் அதற்கு சேதாரம் ஏற்பட்டு விட்டாலோ நாம் அதை உடமைக்காரருக்கு உரிய முறையில் வாங்கிய படி திருப்பி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா?

இன்றைய சூழ்நிலையில் பணங்காசுகள் இல்லாமல் தானே நாம் போதிய நகைகள் வாங்க இயலாமல் போய் விட்டது. அப்படி இருக்கும் பொழுது மற்றவர்களின் விலையுயர்ந்த நகைகளை ஒரு மணி நேரம் (அ) இரண்டு மணி நேர தேவைக்காக இரவல் வாங்கிச்செல்வதால் மேற்சொன்னபடி ஏதேனும் நடக்கக்கூடாத/எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து விட்டால் (அப்படி ஏதேனும் நடக்காமல் இறைவன் நம்மை பாதுகாக்க வேனும்) அதை நம்மால் திருப்பி கொடுக்க முடியுமா? அல்லது அதன் தொகையை உடனே ஏற்பாடு செய்து உரியவருக்கு திருப்ப முடியுமா? நகை இரவல் தந்தவள் உடன்பிறந்தவளாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் சும்மா இருந்து விடுவாளா? அவள் சும்மா இருந்து விட்டாலும் அவள் கணவன் தான் சும்மா இருப்பானா? அதனால் நமக்கு வரும் பிரச்சினைகள், சண்டை, சச்சரவுகள் என்ன, என்ன? என்று நம் வீட்டு பெண்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

நம்மிடம் உள்ள நகைகளை மட்டும் அணிந்து சென்று விட்டால் கலியாணப்பந்தல் நம்மை திருப்பி அனுப்பி விடுமா? அல்லது உண்ட சோறு தான் செரிக்காமல் நின்று விடுமா?

இன்று 1 பவுன் விற்கும் விலைக்கு தேவையற்ற பிரச்சினைகளை நாம் ஏன் தேடிப்பிடித்து பெற வேண்டும்?

குடும்பத்தை நிர்வகிப்பது பெரும்பாலும் பெண்களாக இருந்தாலும் சம்பாதித்து கொடுப்பது ஆண்களல்லவா?

எங்கோ நடக்கும் தவறுகளுக்கு அப்பாவி எவனோ ஒருவன் ஏன் பொறுப்பேற்க வைக்க வேண்டும்?

இது போன்று அன்றாடம் நாம் ஆங்காங்கே படிக்கும் நல்ல பல விழிப்புணர்வு கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு வருவதால் "கப்பலுக்கு போன மச்சான் கண்ணு ரெண்டு ஆசை வச்சான்" சோகக்கதைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. உலக ஆசாபாசங்களை அடக்கிய எதிலும் சிக்கனம் பேணும் நல்ல பெண் கிடைத்து விட்டால் "கப்பலுக்கு போன மச்சானை, கப்பலையே வாங்க வச்சாள்" என்று திருப்பி பாட வைத்து விடுவாள்.

ஒரு காலத்தில் இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களெல்லாம் தோன்றும் முன் மனதில் தோன்றும் நல்ல பல கருத்துக்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தது. பல விசயங்களை பகிர்ந்து கொள்ள இயலாமல் மனதிற்குள் புழுங்கி பூட்டி வைத்து மாண்ட நல்ல மனிதர்கள் எத்தனையோ. அல்ஹம்துலில்லாஹ் இப்படி வலைப்பூக்களில் எழுத நமக்கெல்லாம் வாய்ப்பளித்துள்ள அந்த வல்லோனுக்கே எல்லாப்புகழும்.

"நல்ல குடும்பம் ஒரு சிறந்த பல்கலைக்கழகம்" (அதுக்குத்தான் எல்லோரும் தம்மால் ஆன முயற்சிகளை செஞ்சிக்கிட்டு இருக்கிறோம்)

விழிப்புணர்வுகள் தத்தமது வீடுகளிலிருந்து புறப்படட்டும்......

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.


0 கருத்துகள்: