கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரேசன் அரிசி வழங்குகள்...!


         தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் வருடம் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதை முற்றிலும் நீக்கக் கோரி  தமிழ் திரையுலகினர் நேற்று சென்னையில் உண்ணா விரதம் இருந்தனர்.

முதலில் சேவை வரி குறித்து வினவில் வந்த  படித்து விடுங்கள். இந்தக் கட்டுரையை 94ல் 3 -4 வகைகளுக்கு இருந்த சேவை இன்று 120 வகைகளாக பெருகி அன்று 400 கோடி ரூபாயாக இருந்த வரி வருவாய் இன்று கிட்டத்தட்ட 1 இலட்சம் கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு வருமானம் தரும் அட்சய பாத்திரமாக வளர்ந்திருக்கிறது. இதை மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் அன்று கொண்டு வந்தார்கள். இன்று விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

சேவை வரியின் தேவை என்ன? முதலாளிகள் தரும் வருமான வரி முன்னர் 70-80 சதவீதமாக இருந்தது இன்று 33 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலாளிகளுக்கு பல்வேறு வரி சலுலகைகளும் உண்டு. மில்லியனிலும், பில்லியனிலும் இலாபம் பார்த்து வந்த முதலாளிகளை இப்படி குளிப்பாட்டியதால் ஏற்படும் வரி பற்றாக்குறையை ஈடு கட்டவே இந்த சேவை வரியைக் கொண்டு வந்தார்கள். இதன்படி மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.

எதெல்லாம் சேவை வரியில் அடங்கும்? இதை எதிர்மறையாக வைத்திருக்கிறார்கள். இன்னின்ன சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் சேவை வரிக்குள் வரும் என்று இலக்கணம் வைத்திருக்கிறார்கள். அதன்படி நமது கருமாதி தவிர அனைத்துக்கும் சேவை வரி கட்டவேண்டும். சேவைகள் கொடுக்கும் நிறுவனங்களும், முதலாளிகளும் சேவை வரியை மக்களிடமிருந்தே வசூலித்துக் கொடுக்கின்றன. இப்படித்தான் நம்மிடமிருந்து மறைமுகமாக சேவை வரி வசூலிக்கப்பட்டு செல்கிறது.

மேலும் சேவை வரியிலிருந்து பல்வேறு முதலாளிகள், நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சினிமாவை எடுத்துக் கொண்டால் கூட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு சேவை வரி கிடையாது. நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு மட்டும்தான் வரி உண்டு. இந்த வரியும் கூட சினிமா பிரபலங்களை குளிர்விக்கும் பொருட்டு நீக்கப்பட வாய்ப்பு உண்டு.

போகட்டும். மக்களை கசக்கி பிழியும் சேவை வரியை ரத்து செய்யவோ, குரல் குடுக்கவோ துப்பில்லாத தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வருமானத்தை காப்பாற்றிக் கொள்ளமட்டும் அக்மார்க் சுயநலத்தோடு இப்போது களமிறிங்கியிருக்கின்றனர். வருடம் ஓரிரு முறை மட்டும் வாய்ப்பு கிடைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடுத்தரமான நடிகர்களுக்கும் வேண்டுமானால் இந்த சேவை வரி கூடுதல் சுமையாக இருக்கும். ஆனால் முக்கிய நடிகர்கள் எவருக்கும் இது சுமை இல்லை என்பதோடு அப்படியே வரி கட்ட வேண்டியிருந்தாலும் அது அவர்களது சம்பளத்தோடு சேர்த்து பெறப்பட்டு கட்டப்படும்.

அதாவது நடிகரின் சேவை வரியை தயாரிப்பாளர் கொடுப்பார். அதன் பொருட்டு விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் கூடுதல் பணம் கொடுப்பார்கள். அந்தப் பணம் பிளாக் டிக்கெட் விற்பனை மூலம் நம்மிடமிருந்து பிடுங்கப்படும். அதன்படி நடிகர்களின் சேவை வரிக்கும் நாம்தான் அழ வேண்டியிருக்கும். கிடக்கட்டும்.

சேவை வரியை ரத்து செய்யாவிட்டால் திரையுலகில் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்று ரஜனியும், விக்ரமும் பச்சையாகவே மிரட்டல் விடுவிக்கின்றனர். வருமான வரி கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போட்டு தண்டிக்கலாமே, அதற்கு எதற்கு சேவை வரி என்று கேட்கும் ரஜினி ஒருவேளை கருப்புப் பணத்தில் ஊதியம் வாங்கும் நடிகர்களுக்கு ஆயுள்தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒவ்வொரு படத்திற்கும் தனது சம்பளம் இன்னதுதான் என்று வெள்ளையில் அறிவித்து வெள்ளையாக வாங்குவாரா?

மக்களுக்கு சேவை புரியும் நடிகர்கள் பதிலுக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பிடக்கூட முடியாமல் உடலை கச்சிதமாக வைத்திருக்க வேண்டிய சித்திரவதையை கூறி அடிமுட்டாள்தனமாக அனுதாபம் தேட முயன்றார் எஸ்.ஜே.சூர்யா. படப்பிடிப்பு நடக்கும் போது உச்சா போவதற்கும் ஓய்ந்தோ, போதையிலோ சாய்வதற்கும் ஏ.சி கேரவான் கேட்கும் நடிகர்களின் எளிமை நமக்குத் தெரியாதா என்ன?

அர்ஜூன் துவங்கி தங்கர் பச்சான் வரை சினிமாக்காரர்கள் மக்களுக்கு மாபெரும் சமூக சேவை செய்வதாக வெட்கமின்றி பேசினர். நாளையே சினிமா திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவித்து விட்டால் மக்கள் அனைவரும் தற்கொலை செய்து விடுவார்களா என்ன? நகர சுத்தி தொழிலாளி செய்வதுதான் சமூக சேவை, நடிகர்கள் செய்வது கலையின் பெயரால் நடத்தும் சுரண்டல் மட்டுமே.

சரி இந்த சமூக சேவை நமக்கு பிடிக்கவில்லை என்றால் நிறுத்துவதற்கு இவர்கள் தயாரா? ஒரு மொக்கை படம் நமது பொழுதை வீணாக்கி ரசனையை வீணடித்து விட்டது என்று சொன்னால் அந்த படத்துக்கு கொடுத்த டிக்கெட்டு பணத்தை திருப்பி அளிப்பார்களா என்ன? பாடல் வெளியீட்டு விழா, வெளிநாடுகளில் கலை விழா, விருது விழா, இசை விழா என்று ஏராளம் வழிகளில் சம்பாதிப்பதோடு, நாட்டு மக்களை கெடுத்து குட்டிச்சுவராக்கும் சினிமாவை சமூகசேவை என்று சொன்னால் அது உண்மையில் சேவை செய்பவர்களை இழிவுபடுத்தவில்லையா?

வெள்ளை வேட்டி கட்டிய தமிழன்தான் இந்தியாவை ஆள்வான் என்று ஆருடம் பேசிய ரஜினி அந்த வெள்ளை வேட்டி தமிழனான ப.சிதம்பரத்திடம் பேசி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அமீர் பேசினார். பிரபுவோ, அப்பாவின் தீவிர ரசிகர் சிதம்பரம் அவர்கள் கண்டிப்பாக வரியை ரத்து செய்வார் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். பாருங்கள், அவர்களது கோரிக்கைகளையெல்லாம் எவ்வளவு சுலபமாக தீர்க்க முடிகிறது!

சென்னையில் பார்வையற்றோர் போராடினால் ஒடுக்குவதற்கு வரும் ஏட்டையாவைத் தாண்டி ஒரு கவுன்சிலர் கூட எட்டிப்பார்க்க மாட்டார். ஆனால் அரிதாரம் பூசிய நட்சத்திரங்கள் தங்களது தேவைக்காக ஏதோ கால் டாக்சி புக் செய்வது போல ப.சிதம்பரத்திடம் பேசி தீர்த்து விடுகிறார்கள் என்றால் இங்கே யாருக்கு ஜனநாயகம் இருக்கிறது? வரும் பத்தாம் தேதி ரஜினி தலைமையில் இவர்கள் ப.சிதம்பரத்தை பார்க்கப் போகிறார்களாம். ஆண்ட பரம்பரையில் இருந்து வந்திருக்கும் ப.சிக்கு இந்த ஆடும் நட்சத்திரங்களின் வலி தெரியாமலா போய்விடும். ரத்து செய்தாலும் செய்வார்.

உண்மையில் இந்தப்பிரச்சினையின் மையம் என்ன? குறைந்த வருமானம் கொண்ட திரைப்பட கலைஞர்களுக்கு வரியை ரத்து செய்வதோடு அதிக வருமானம் கொண்ட நட்சத்திரங்களுக்கு 30 சதவீதம் சேவை வரியாவது போட வேண்டும்.

ஆனால் கருப்பிலும் கோடிகளிலும் புரளும் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள இதை பொதுப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். சரி, இவர்களுக்கு உண்மையிலேயே வருமானம் இல்லை என்றால், வாழ்க்கையை நடத்துவது பிரச்சினை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ரேசனில் 30 கிலோ அரிச வழங்க வேண்டும் என்று போராடியிருந்தால் அது நியாயம். அதை விடுத்து எதற்கு இந்த போங்காட்டம்?
source:http://www.vinavu.com/2013/01/08/tamil-film-industry-fasting-to-repeal-service-tax/

0 கருத்துகள்: