பெண் எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்?. இது, தமிழ்நாட்டில் எந்த திருமண பேச்சு நடந்தாலும், பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்கும் முதல் கேள்வி. பெண் வீட்டுக்காரர்களும் சளைத்தவர்கள் அல்ல. எங்கள் பெண்ணுக்கு இவ்வளவு நகை போடுகிறோம். நீங்கள் எத்தனை பவுனில் தாலிச்சங்கிலி போடுவீர்கள்?
என கேட்பார்கள். ஆக, பெண் தங்கமான மனது கொண்டவள். அப்படி இருக்க தங்க நகை இவ்வளவு எதற்கு? என்ற உணர்வு மக்களிடம் மங்கிக்கொண்டு வருவதை யாராலும் மறுத்துவிடமுடியாது.
என கேட்பார்கள். ஆக, பெண் தங்கமான மனது கொண்டவள். அப்படி இருக்க தங்க நகை இவ்வளவு எதற்கு? என்ற உணர்வு மக்களிடம் மங்கிக்கொண்டு வருவதை யாராலும் மறுத்துவிடமுடியாது.
தமிழ்நாட்டில்தான் தங்க நகை மோகம் அதிகமாக இருக்கிறது. சில சாதிகளில் நூற்றுக்கணக்கான பவுன் தங்க நகை கேட்டு, பெண்ணை பெற்றவன் என்றாலே, ஏதோ பரிதாபமான ஜந்து என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள். இவ்வளவுக்கும் திருமணத்தன்று போடும் நகைகள் எல்லாம், நிச்சயமாக தினமும் போட்டுக்கொண்டு இருக்க எந்த பெண்ணாலும் முடியாது. அந்த ஒரே நாளோடு பீரோவுக்குள்ளேயோ, பெட்டிக்குள்ளேயோ, வங்கி லாக்கருக்குள்ளேயோ போய்விடுகிறது. இந்தியாவில் உள்ள வீடுகளில் மட்டும் 20 ஆயிரம் டன் தங்க நகைகள் முடங்கிக்கிடப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படி, பயனற்று கிடக்கும் தங்க நகைகளில் முதலீடு செய்வதைவிட, வேறு வகைகளில் முதலீடு செய்யலாமே? என்று ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். ஆனால், இன்றும் கிராமப்புறங்களிலும், விவசாயிகள் வீடுகளிலும் ஆத்திர அவசரத்திற்கு தங்க நகைகளை ஈடுவைத்துத்தான் உடனடி செலவுக்கு பணம் புரட்டும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், இங்கே பெரிய அளவில் தங்க சுரங்கம் கிடையாது. நமது தேவைக்கு வெளிநாடுகளில் இருந்துதான் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பெருகிவரும் தங்கத்தின் தேவையால், இறக்குமதிகளின் அளவும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. 2007-2008-ம் ஆண்டில் 537 டன் தங்கம்தான் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டில் 1,004 டன்னாக தங்க இறக்குமதி அளவு உயர்ந்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மூலம் கிடைக்கும் அன்னிய செலாவணியைவிட, இறக்குமதி செய்வதற்காக நாம் செலவழிக்க வேண்டிய அன்னிய செலாவணியின் அளவு அதிகமாக இருக்கும் நிலையில், தங்க இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவுகளை குறைக்கும் வகையில், இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் கடந்த ஓராண்டில் மட்டும் 3 முறை உயர்த்திவிட்டது. 2012-ல் ஒரு சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, பின்னர் 2 சதவீதம், 4 சதவீதம் என்று உயர்த்தப்பட்டு, தற்போது 6 சதவீதமாக உயர்ந்து நிற்கிறது. இதனால், இறக்குமதி அளவு வேண்டுமானால் குறையலாமே தவிர, கள்ளக்கடத்தல் கண்டிப்பாக ராக்கெட் வேகத்தில் உயர்த்திவிடும். ஒரு கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் என்ற நிலையில், வெளிநாட்டிலுள்ள தங்கத்தின் விலைக்கும், இந்தியாவிலுள்ள தங்கத்தின் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கில் எடுத்தால், கடத்தல்காரர்களுக்கு கொள்ளை லாபம் என்ற முறையில் பல வழிகளில் கடத்தல் தங்கம் உள்ளே நுழைந்துவிடும்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நகை மீது உள்ள மோகம் மட்டும் காரணமல்ல. தங்கத்தைப்போல ஒரு சிறந்த முதலீடு வேறுஎதுவும் இல்லை என்ற உணர்வு மக்களிடம் பெருகிவிட்டது. பணவீக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பும் குறைந்துகொண்டே இருக்கும் நேரத்தில், என்னதான் வங்கியில் பணத்தை முதலீடு செய்தாலும், அதிகபட்சமாக 8 சதவீதம் வட்டிதான் கிடைக்கிறது. ஆனால், தங்கத்தில் முதலீடு செய்தால் மதிப்பு மளமளவென்று உயர்வதால், தேவையான நேரத்தில் விற்று வருமானம் ஈட்டமுடிகிறது. எடுத்துக்காட்டாக, 2006-ம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.6,160 ஆகத்தான் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூ.448 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.23,328-க்கு விற்றது. அரசாங்கத்தின் எந்த சேமிப்பு திட்டங்களிலோ, அல்லது வங்கியில் எந்த சேமிப்பு திட்டங்களிலோ பணத்தை முதலீடு செய்திருந்தாலும், இந்த அளவுக்கு எந்த திட்டமும் வருமானம் ஈட்டித்தரவே முடியாது. எனவே, தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க சமுதாய உணர்வுகளும் மாற்றப்படவேண்டும். தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளைவிட, நாங்கள் அதிக வருமானத்தை வட்டியாக தருகிறோம் என்று அரசாங்க சேமிப்பு திட்டங்களும், வங்கிகளும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதுதான் சிறந்த வழியாகும்.
thanks:http://www.dailythanthi.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக