சென்னை: நாட்டிலுள்ள ஊழல் மற்றும் மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டியிடுகிறோம் என எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கியுள்ள சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்.டி.பி.ஐ.), இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், வடசென்னை ஆகிய 3 தொகுதிகளில் தனித்துக் களம் காண்கிறது. அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவியைச் சந்தித்தோம்.
இந்தியாவில் எண்ண முடியாத அளவில் கட்சிகள் இருக்கின்றன. தேசிய அளவில் எஸ்.டி.பி.ஐ. எனும் கட்சி தொடங்க காரணம்?
‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் இங்குள்ள தலித்துகள், முஸ்லிம்கள், பழங்குடியின மக்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் வளர்ச்சி பெறுவதுதான். ஆனால் இன்றும் குறிப்பிட்ட சில சமூகங்களின் வாழ்க்கைத் தரம் என்பது பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
குறிப்பாக முஸ்லிம்களின் அவலநிலையைச் சொல்லலாம். சிறுபான்மையின் நலனுக்காக அரசே நிர்ணயித்த கமிஷன்களின் புள்ளிவரங்களும் இதனை வெளிப்படுத்தி இருக்கிறது. ராணுவம், காவல் உள்ளிட்ட துறைகளிலும் இவர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறார்கள். நாட்டில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியலிலும், அரசின் துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். இந்த நோக்கத்துக்காக கடந்த 2009 ஜூன் 2ஆம் தேதி சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி தொடங்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கிறீர்கள். மக்கள் மத்தியில் உங்கள் கட்சி வளர்ந்துள்ளதா?
‘‘கட்சி தொடங்கி ஐந்து வருட காலங்களில் முதலாவதாக தேர்தலைச் சந்திக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கிற கட்டமைப்பைப் பெற்றிருப்பதனால், இந்தியா முழுவதும் தனித்து நாற்பது தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இன்னும்கூட அதிக தொகுதிகளில் போட்டியிட்டிருக்கலாம். ஆனால் எங்களால் வாக்குகள் பிரிந்து அதன் காரணமாக மதவாத சக்திகள் வெற்றிபெறக்கூடிய சூழல் நிலவுவதால் அங்கு போட்டியிடவில்லை.
தமிழத்தில் பெரிய பெரிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன. நீங்களும் போட்டியிடக் காரணம்?
மாற்று அரசியல் சக்தியாகத்தான் எஸ்.டி.பி.ஐ.யை நாங்கள் பார்க்கிறோம். தற்போது மக்களிடம் தேர்தல், அரசியல் என்பது குறித்து விரக்தியான நிலைதான் உள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த தேர்தலை நினைக்கிறோம். இந்த நாடு எதிர்நோக்கி இருக்கிற இரண்டு மிகப்பெரிய அபாயமாக நாங்கள் நினைப்பது ஊழலும், மதவாதமும்தான்.
மதவாத சக்திகளோடு காம்ப்ரமைஸ் செய்வதற்குத் தயாராகத்தான் உள்ளார்கள். இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படவேண்டும், ஒழுக்கமான அரசியல் முன்வைக்கப்படவேண்டும். மக்களிடம் இதனைக் கொண்டுச் சேர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்தலை பயன்படுத்துகிறோம். அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம்.
எதன் அடிப்படையில் இந்தத் தொகுதிகளை தேர்வு செய்தீர்கள்?
நாங்கள் முதலில் 10 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அடையாளம் கண்டோம். அதன்பிறகு அதனை ஐந்து தொகுதிகளாகச் சுருக்கி நான்கு மாதங்களுக்கு முன்பே களப்பணிகளைத் தொடங்கிவிட்டோம். இந்த ஐந்தையும் மூன்றாகச் சுருக்கியது, இப்போதைய தேர்தலில் இருக்கிற பொருளாதாரப் பிரச்னைதான்.
இந்த மூன்று தொகுதிகளிலும் எங்களது வேட்பாளர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். மேலும் இங்கே மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் இங்கே வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம் வேறு காரணம் இல்லை. வடசென்னையில் முஸ்லீம் வேட்பாளர்கள் நின்றதே கிடையாது. இன்னொன்று இங்கே முஸ்லீம், முஸ்லீம் அல்லாதவர் என்று பார்க்கவில்லை. இங்கே கட்சி சார்பாக நிறைய வேலை செய்திருக்கிறோம், அதனால் இங்கு நிற்கிறோம். இப்போது மூன்று தொகுதிகளிலும் முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தியிருக்கிறோம். இன்னும் கட்சி வளரும்போது இந்த நிலை மாறும். அடுத்தடுத்த தேர்தல்களில் நிறைய இடங்களில் போட்டியிடும்போது எல்லா சமூக மக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்.
தேர்தலில் யாருடணும் கூட்டணி இல்லை என்று களமிறங்கிய நீங்கள், சமீபத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்களே?
எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு பேரிடமும் பேசினோம். அவர்களும் பேசினார்கள். எஸ்.டி.பி.ஐ. வளர்ந்திருக்கிறது என்பதை அவர்களும் தெரிந்துதான் பேச்சுவார்த்தை நடந்தது. கட்சி சார்ந்த கோரிக்கைகளையும், சமூகம் சார்ந்த கோரிக்கைகளையும் அவர்களிடம் தெரிவித்தோம். ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் பேச்சுவார்த்தை நீண்டுக் கொண்டே போவது போல் தெரிந்ததால், அதையும் கூட குறிப்பிட்ட ஸ்டேஜோடு நிறுத்திவிட்டு, தனித்துப் போட்டியிடுவதுதான் நல்லது என்பதைத் தீர்மானித்து அறிவித்துவிட்டோம்.
தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் மீது எந்த குற்றச்சாட்டையும் கூறாமல் அவர்களை குறை கூறாமல் இருந்தார்கள். கலைஞரும் தனிப்பட்ட முறையில் மோடி எனக்கு நண்பர் என்று கூறியிருந்தார். ஆனால் சமீப நாட்களாக ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் மதசார்பற்ற அணி என்பதை முன்வைத்து பேசி வருகிறார். தி.மு.க. முன்னணியினரும் பி.ஜே.பி.யின் குறைகளைப் பேசுகிறார்கள். நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய தி.மு.க. முன்னணியினரின் பேச்சும் எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது.
சமீபத்தில் தி.மு.க. கூட்டத்தில், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொணியில் பேசியிருக்கிறார். இந்த நிலைகளை மனதில் வைத்து, தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு போகும் வாய்ப்பில்லை என்னும் முடிவுக்கு வந்ததன் பேரில் அவர்களுக்கான ஆதரவுநிலையை எடுத்தோம். அதே நேரத்தில் அ.தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் தயாராக இல்லை. இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து நிற்கக்கூடிய தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளின் குறைகளையும் மக்கள் முன் பிரசாரமாக வைத்துக் கொண்டிருக்கிறோம், வைப்போம். மற்ற தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதால் அவர்களின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமில்லை. மதச்சார்பற்ற தன்மை என்னும் ஒற்றைப் பார்வையோடு மட்டுமே அந்த ஆதரவை முன்வைக்கிறோம்.
தேர்தல் வாக்குறுதி என்ன?
‘‘பசியற்ற இந்தியா, பயமற்ற இந்தியா’’ என்பதே எங்களின் தேர்தல் முழக்கம்.
அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த பொதுவிநியோகம், இலவச கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி, பெட்ரோல் விலை நிர்ணயத்தை அரசே செய்வது, வலுவான சட்டமியற்றி ஊழலற்ற நிர்வாக அமைப்போம். அரசு ஆதரவோடு இயங்கும் தனியார் துறைகளில் சிறுபான்மையினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்போம். கச்சத்தீவை மீட்டெடுப்பது, பஞ்சமி நிலத்தை மீட்பது, தாமிரபரணி நதியைக் காப்பது, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது, ஆபத்து மிகுந்த கூடங்குளம் அணு உலைத் திட்டம், விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், டெல்டா பகுதி விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவது எங்களின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானவை. தேர்தலில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வரவேண்டும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்தித் தரவேண்டும்.
மக்கள் களத்தில் உங்களின் நிலை என்ன?
தேசிய அளவில் பிரதமர் உள்ளிட்ட அதிகார வர்க்கங்களின் ஊழல் முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட லோக்பால் அமைப்பை போன்று, அதே அம்சங்களைக் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பை மாநிலத்தில் ஏற்படுத்த முதல் முதலில் குரல் கொடுத்து போராட்டம் செய்தது எஸ்.டி.பி.ஐ. கட்சிதான். அதேபோல் கட்சித் தொடங்கியதிலிருந்து இன்று வரை மீனவர்கள் நலனுக்காக நிறைய போராட்டங்களைச் செய்திருக்கிறோம். ஈழத்தமிழர் நலனுக்கான போராட்டங்களில் பங்கு பெற்றிருப்பதோடு நாங்களும் நிறைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இன்று வரை செயல்பட்டு வருகிறோம். காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கோரி அறப்போராட்டங்களை செய்துள்ளோம். விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியதோடு, கெயில் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறோம். கட்சி தொடங்கி ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் உரிமைச் சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளோம். தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னையான மது ஒழிப்பு குறித்து தொடர் போராட்டமே நடத்தியிருக்கிறோம். தாமிரபரணி நதியைக் காக்க வலியுறுத்தி 55கிலோ மீட்டர் நடைபயண பிரசாரத்தை நடத்தினோம். இது மக்கள் மத்தியில் நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள் மீது திணிக்கப்படும் கறுப்புச்சட்டங்களுக்கெதிராகவும், அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும், சாதி மோதல்களில் பாதிக்கப்படும் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், தர்மபுரி கலவரத்தில் தலித்துகளுக்காகவும், பரமக்குடியில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் முதலில் களமாடியது எஸ்.டி.பி.ஐ. கட்சிதான்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பலம் – பலவீனம் என்ன?
நாங்கள் பலமாக நினைப்பது, ஒழுக்கம், கட்டுப்பாடு, திட்டமிட்ட செயல்பாடுமிக்க வேட்பாளர்கள் எங்களிடம் இருப்பதைத்தான். இன்னைக்கு இளைஞர்கள் அதிகமாக வருகிற ஒரு அரசியல் கட்சியாக எஸ்.டி.பி.ஐ. மாறியிருக்கிறது. முஸ்லீம்கள் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று எல்லா சமூக மக்களும் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். எதையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இளைஞர் படை எங்களிடம் இருக்கிறது. இதைத்தான் எங்களின் பலமாக நினைக்கிறோம். அது இன்னும் அதிகமாகும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது. பலவீனம் என்பது என்பது கட்சியை வேகமாக வளர்க்கப் போதுமான பொருளாதார நிலை இல்லாததுதான். காரணம், நாங்கள் ஊழல் செய்வதில்லை, கமிஷன் வாங்குவதில்லை, தவறான நிறுவனங்களில் டொனேஷன் வாங்குவதில்லை. இது கட்சியின் பலமும் கூட. பொருளாதார பலம் இருக்குமானால் கட்சியை இன்னும் வேகமாகக் கொண்டு செல்ல முடியும்.
தேர்தலில் உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பொதுவாக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி வந்தது. யாராவது நம்பினார்களா? காங்கிரஸும் நம்பவில்லை, பாரதிய ஜனதாவும் நம்பவில்லை. ஆனால் நடந்தது. அதற்கு காரணம் ஆம் ஆத்மியின் தனிப்பட்ட பலமோ எதுவோ கிடையாது. மக்கள் அங்கு ஒரு மாற்றத்தை விரும்பினார்கள். மக்களின் விருப்பம், மக்களின் எழுச்சி, விழிப்புணர்வுன்னு வரும்போது பணபலமோ அல்லது வேறு எதுவுமோ தேவையில்லை. மக்கள் மனதில் இடம்பெற்றால் போதும். காங்கிரஸை எதிர்த்து திராவிட இயக்கம் தொடங்கியபோது உடனே பெரிய அளவில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை, அது மக்களின் எழுச்சி. எம்.ஜி.ஆர். பெருவாரியான வெற்றி பெற்றதும் அதுபோன்று மக்கள் அலைதான்.
இதேபோன்று ஒரு மக்கள் எழுச்சியில் எங்களின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெறலாம். அந்த வெற்றியானது இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் மக்களுக்கான வெற்றியாக இருக்கும். ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கும். எதிர்காலத்தில் நாமும் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும், பணபலத்தை நம்பாத, கொள்கைகளை மட்டுமே நம்புகிற மக்களுக்கு இது ஒருமிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெருவாரியாக போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவோம். அதற்கானத் திட்டமிடல்களை இப்போது தொடங்கிவிட்டோம்.
-எம்.செய்யது முகம்மது ஆஸாத்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக