தமிழ்நாட்டில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியில் 2,342 காலி இடங்கள் உள்ளன. இந்தக் காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் போதிய தமிழ் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும். பார்வையற்றோர், காது கேளாதோர் இந்தப் பணியில் சேருவதற்கான தேர்வை எழுத விண்ணப்பிக்க முடியாது.
தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி 21 வயது ஆகி இருக்க வேண்டும். அதேசமயம், 40 வயதுக்கு மேற்படக்கூடாது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாநில, மத்திய அரசில் முறையாக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இந்தப் பணிக்கு உரிய வயது வரம்புக்குள் இருந்தாலும் ஏனையோர் (அதாவது தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. டான்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஆட்குறைப்புக்குள்ளான தொழில்நுட்பத் தகுதியுள்ள மற்றும் தொழில்நுட்பத் தகுதியில்லாத பணியாளர்கள், அரசு நிறுவனங்கள், அரசின் ஆளுகைக்குட்பட்ட நிறுவனங்களில் இதுவரை பணியில் அமர்த்தப்படாமல் இருப்பவர்கள், இந்தப் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு தவிர, அனைத்துத் தகுதிகளும் இருந்தால் விஏஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விஏஓ எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?
விஏஓ தேர்வில் புதிய மாற்றங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிராம நிர்வாக நடைமுறைகள் குறித்த பகுதி இத்தேர்வில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்வு ஜூன் 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் 10-ஆம் வகுப்புத் தரத்தில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும்.கிராம நிர்வாக நடைமுறைகளில் 25 வினாக்களும் திறனறித் தேர்வில் 20 வினாக்களும் கேட்கப்படும். வினாத்தாள் இரண்டு மாதிரிகளில் இருக்கும்.
பொது அறிவு (75 வினாக்கள்), கிராம நிர்வாக நடைமுறைகள் (25 வினாக்கள்), திறனறித் தேர்வு (20 வினாக்கள்), பொதுத் தமிழ் (80 வினாக்கள்) என்கிற முறையில் ஒரு வினாத்தாளும் பொது அறிவு (75 வினாக்கள்), கிராம நிர்வாக நடைமுறைகள் (25 வினாக்கள்), திறனறித் தேர்வு (20 வினாக்கள்), பொது ஆங்கிலம் (80 வினாக்கள்) என்கிற முறையில் ஒரு வினாத்தாளும் இருக்கும். பொது அறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், திறனறித் தேர்வு ஆகியவற்றில் கேட்கப்படும் 120 கேள்விகள் தவிர மீதமுள்ள 80 வினாக்களுக்கு பதிலளிக்க பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதற்கான பாடத்திட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200.இத்தேர்வில் தகுதி பெற குறைந்தது 90 மதிப்பெண்களாவது பெற வேண்டும்.
இந்தப் பணிக்கு எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களது மாவட்டங்களின் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நியமன இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கிராம நிர்வாக அலுவலர் பணி நியமனத்துக்கு மாவட்ட வாரியாக இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும். 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். அந்தச் சலுகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அவர்களுக்கான காலி இடங்கள், தமிழ் வழியில் படிக்காத அந்தந்த வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படும். இதேபோல, தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் அதே வகுப்பைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
மாற்றுத் திறனாளிகளில் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை கை, கால் இயக்கத்தில் குறை உள்ளவர்களில் எழுதுவதில் எந்தவிதத் தடையும் இல்லாதவர்கள் மற்றும் உடல் இயக்கத்தில் குறைந்த அளவு இயலாமை உள்ளவர்களுக்கு மட்டும் காலிப் பணி இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட 3 சதவீத இடஒதுக்கீடு செய்யப்படும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கும் இந்த நியமனத்தில் ஒதுக்கீடு உண்டு. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அந்தப் பணிக்கான உடல் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். கண் பார்வை குறைபாடுடைய விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த கண் மருத்துவ நிபுணரிடம் கண் பார்வைத் தகுதிச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியில் சேர்ந்த ஒரு மாதத்துக்குள் ரூ.2 ஆயிரம் பணிப் பிணையமாக செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பணியில் சேரும்போது ஆயிரம் ரூபாய் பணிப் பிணைத் தொகையாகச் செலுத்த வேண்டும். தாழ்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் பணிப் பிணையம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) முன்னுரிமை வரிசை அடிப்படையில் அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட பிறகும், அந்த வகுப்பினரில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருந்தால், அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படுவர். தாழ்த்தப்பட்ட அருந்ததியருக்காக ஒதுக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணியிடங்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பில் பணி அமர்த்தப்படும் ஒவ்வொருவரும் பதவிப் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில், பணிக்காலம் வரை தொடர்ந்து வசிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கிராம நிர்வாக அதிகாரி பணிகளில் சேர விரும்புபவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125. அதாவது விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குக் கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவக் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது, நிரந்தரப் பதிவு முறையில் (One Time Registration)ஏற்கெனவே பதிவு செய்து ரூ.50 பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு எண் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்வாணையம் அறிவிக்கும் எந்தப் பணிக்கும் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. ஆனால், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் அல்லது கட்டணம் செலுத்தும் முகமை ஆகியவைகளுக்கான சேவைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். டிமாண்ட் டிராப்ட், அஞ்சல் காசோலை போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாக தேர்வுக் கட்டணம் செலுத்துபவர்கள் அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் தொடர்பான விவரங்களை இணைய வழி விண்ணப்பத்தில் நிரப்பியதும் சர்வரிலிருந்து தகவல் வரும் வரை காத்திருக்கவும். இரட்டிப்பாகச் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் Back அல்லது Refresh பட்டனை அழுத்தக் கூடாது. விண்ணப்பித்ததும், விண்ணப்பதாரர்களின் தொடர் பயன்பாட்டிற்காக பதிவு எண்ணையும் பாஸ்வேர்டையும் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.
இந்தியன் வங்கி அல்லது குறிப்பிட்ட தபால் நிலையங்களில் நேரடியாகவும் கட்டணத்தைச் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைச் சமர்ப்பி (சப்மிட்) என்பதை கிளிக் செய்யவும். விண்ணப்பதாரர்களுக்கு ஒரு விண்ணப்ப எண்ணும் ஒரு பாஸ்வோர்டும் வழங்கப்படும். இதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் தோன்றும் செலானை பிரிண்ட் அவுட் எடுத்து அருகில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக்கோ அல்லது தபால் நிலையத்துக்கோ சென்று கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர், அந்தச் செலானை வாங்கி, அதில் முறையாக ஒப்பமிடப்பட்டுள்ளதா, நடவடிக்கை எண், கிளையின் பெயர், டி.பி. குறியீட்டு எண், பணம் செலுத்திய நாள் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் தபால் நிலையத்திலோ அல்லது இந்தியன் வங்கியிலோ கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே விண்ணப்பதாரரின் விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படும். தகுதி, வயது மற்றும் கட்டணச் சலுகைகள் குறித்த விவரங்கள் கட்டணம் செலுத்தும் முறைகள் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அண்மையில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பங்களை ஸ்கேன் செய்து அதன் நகல்களை சிடி, டிவிடி அல்லது பென் டிரைவில் சேமித்து வைத்திருக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய சரியான இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் அவசியமானது ஆகும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை, இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண்ணைப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
விஏஓ எழுத்துத் தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட், அழைப்புக் கடிதம் மற்றும் குறிப்பாணைகள், விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது கைபேசி எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பணி விவரங்கள், இனம், பிறந்த தேதி, முகவரி, இ-மெயில் முகவரி, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள் இறுதியானதாகக் கருதப்படும். இணைய வழி விண்ணப்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குப் பிறகு, இதில் எந்தவித மாறுதலும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனமாக நிரப்ப வேண்டும்.
விண்ணப்பித்தபிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை பிடிஎஃப் வடிவில் சேமிக்கலாம். அத்துடன் பிரிண்ட் அவுட் செய்தும் வைத்துக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பிரிண்ட் அவுட்டையோ, செலான் நகலையோ, பிற தொடர்புடைய ஆவணங்களையோ தேர்வாணையத்துக்கு அனுப்பத் தேர்வையில்லை. அதாவது, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்துக்குத் தகுதி பெறும் நிலையில் மட்டுமே அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இணைய வழி விண்ணப்பத்தில் மாறுதல்கள் இருந்தால், அவற்றைத் திருத்திக் கொள்ளும் வகையில் இணைய வழி விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத்தில் உள்ள விவரங்களில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டியிருந்தால் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வரை மாறுதல் செய்துகொள்ளலாம். அதன் பிறகு, மாறுதல் செய்ய முடியாது என்பதை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 15-04-2014 (இரவு 11.59 மணி வரை) வங்கி அல்லது தபால் அலுவலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 17-04-2014
தேர்வு நடைபெறும் நாள் 14-06-2014
தேர்வு குறித்த சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள கட்டணமில்லா சேவை எண்: 1800 425 1002
தொலைபேசி எண்: 044-25300300
விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
நன்றி:புதியதலைமுறை
நன்றி:புதியதலைமுறை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக