சென்னை: “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்த விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘அங்குசம்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ், “சுதந்திரத்திற்காக பாடுபட்டோரின் குடும்பங்கள் ஆதரவற்று இருக்கும் நிலையில் விடுதலையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது யார் ?” என கேள்வி எழுப்பினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
தகவல் அறியும் உரிமைச் சட்டம், சாதாரண மக்கள் கையில் கிடைத்திருக்கும் அசாதாரண ஆயுதம். இச்சட்டத்தின் வலிமையை, திரை வழியாக மக்களுக்கு உணர்த்திட முயன்றிருக்கும் இயக்குனர் மனுக்கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப நிலை:
மதுரையில் மனு நாள் முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியதுதானே என்றேன். கூட்டமாக இருந்தது அய்யா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்று சொல்ல வேண்டியதுதானே என்றேன். காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன்தான் என்று சொல்ல வேண்டியதுதானே என்றேன்.
உதவாத சட்டம் எதற்கு?
நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார். என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்ட வீரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.
அவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது; விதிகள் இல்லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம். நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம்? அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன்.
விடுதலையின் பலனை அனுபவிப்பது யார்?
3 மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை. கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை? என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?
இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.
http://www.thoothuonline.com/
http://www.thoothuonline.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக