வாக்காளர் சீட்டு வழங்கும் பணி நேற்றுகாலை தொடங்கியது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்காளர் சீட்டுகளை வழங்கினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 17 லட்சத்து 77 ஆயிரத்து 11 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு நாளன்று வாக்களிப்பதற்கு வசதியாக வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணி இன்று(நேற்று) முதல் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதிக்குள் இந்த பணி முடிவடையும். வாக்காளர் சீட்டுகள் வழங்கும்போது அரசியல் கட்சிகளை சேர்ந்த முகவர்களும் உடன் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 2,056 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் சீட்டுகள் வீடு, வீடாக சென்று அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு தோறும் கொடுக்கப்படும் வாக்காளர் சீட்டில் பாகம் எண், வரிசை எண், பெயர், வாக்காளர் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அதை பத்திரமாக வைத்திருந்து வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவுக்கான ஆவணமாக வாக்குச்சாவடிக்கு எடுத்து வர வேண்டும். தற்போது வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் கூடுதலாக்கப்பட்டு அதாவது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும்
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பொதுவான ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து வீடு, வீடாக சென்று வாக்காளர் சீட்டுகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அடையாள சீட்டு பெற்று கொண்டமைக்கு ஒப்புகை கையெப்பம் பெற வேண்டும். எந்தவித புகார்களும் வராத அளவிற்கு வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் உள்ள அலுவலர்கள் பணிபுரிய வேண்டும். வருகிற 24-ந்தேதி அன்று நடைபெறும் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்களிக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 106 ஆண்களும், 22 ஆயிரத்து 103 பெண்களும் என மொத்தம் 42 ஆயிரத்து 214 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6-யை வழங்கி இருந்தனர். இந்த படிவம் பரிசீலனை செய்யப்பட்டு திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 3,947 பேரும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 6,755 பேரும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 4,364 பேரும், திருவையாறு சட்டமன்ற தொகுதியில் 4,188 பேரும், தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 9,168 பேரும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 3,955 பேரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 4,190 பேரும், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 2,683 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 250 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 18 ஆயிரத்து 761 பேரும், பெண்கள் 20 ஆயிரத்து 484 பேரும் அடங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக