ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஒரு முஸ்லிம் தனது அடுத்த சகோதரனுக்கு கண்ணாடியைப் போன்றவன்" என்று கூறினார்கள்.
அது தன் முன் யாரும் நின்றால் அவரின் தோற்றத்தையே பிம்பமாகக் காட்டும். மாறாக வேறொருவரது தோற்றத்தை அதில் புலப்படுத்தாது. இவ்வாறுதான் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமிடத்தில் விளங்கவேண்டும். ஒருவரிடத்தில் ஏதும் குறைகளைக் கண்டால் அவரிடமிருக்கும் குறைகளை மட்டுமே சொல்லவேண்டும். மற்றவர்களின் குறைகளையும் குப்பைகளையும் இவர்மீது சுமத்தி விரக்திக்குள்ளாக்கி விடக்கூடாது.
உண்மையில் இது வெறும் வார்த்தைகளல்ல. அதில் ஊறியிருக்கும் ஆழ்ந்த கருத்துக்களும் தத்துவங்களும் மகத்தானவை. அதன் கருத்தாழத்தை நன்கு புரிந்து கொண்டமையால்தான் அன்றைய ஸஹாபாக்கள் ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தார்கள். இன்றும் திகழ்க்கிறார்கள்.
ஒரு முஸ்லிம் கண்ணாடிக்கு உவமிக்கப்பட்டுள்ளான் என்றால் அதனை விளங்க அக்காண்ணாடிக்கிருக்கும் முக்கிய பண்புகளைப்பற்றி சற்று விளங்கிக்கொள்ளவோம். கண்ணாடிக்கு முக்கியமான மூன்று பண்புகள் காணப்படுகின்றன.
ஒன்று : முன்னிருக்கும் தோற்றத்தை அப்படியே பிரதிம்பப்படுத்தும்.
இரண்டு : தோற்றத்தில் உள்ளதை உள்ளபடியே பிரதிபலிக்கும்.
மூன்று : அதனைவிட்டும் மீண்டு சென்றால் விம்பமும் மறைந்துவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியை இப்பண்புகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் அன்னார் கூறிய வார்த்தைகளின் தாத்பரியத்தை விளங்கமுடியும். ஒரு முஸ்லிம் இப்பண்புகளை அணிகளனாகக் கொள்ள வேண்டுமென்பதே உயரிய எதிர்பார்ப்பும் கூட.
கண்ணாடியின் முதற் பண்பு: அது தன் முன் யாரும் நின்றால் அவரின் தோற்றத்தையே பிம்பமாகக் காட்டும். மாறாக வேறொருவரது தோற்றத்தை அதில் புலப்படுத்தாது. இவ்வாறுதான் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமிடத்தில் விளங்கவேண்டும். ஒருவரிடத்தில் ஏதும் குறைகளைக் கண்டால் அவரிடமிருக்கும் குறைகளை மட்டுமே சொல்லவேண்டும். மற்றவர்களின் குறைகளையும் குப்பைகளையும் இவர்மீது சுமத்தி விரக்திக்குள்ளாக்கி விடக்கூடாது.
அதன் இரண்டாவது பண்பு:
உள்ளதை உள்ளபடியே பிரதிபலிக்கும். கூட்டல் குறைத்தல்கள் செய்யக்கூடாது. இவ்வாறுதான் ஒரு முஸ்லிம் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும். தனது சகோதரனிடத்தில் உள்ள குறைகளை உள்ளபடியே சொல்லவேண்டும். குறைகளைக் குறைகளாகவும் நிறைகளை நிறைகளாகவும் அழகான முறையில் விமர்சிக்க வேண்டும். இல்லாத குற்றங்களைச் சாட்டவோ அல்லது இருக்கும் குறைகளை மறைத்து அதள பாதாளத்தில் தள்ளவோ முயலக்கூடாது.
மூன்றாவது பண்பு:
கண்ணாடியை விட்டும் சென்றுவிட்டால் அதிலிருந்த பிம்பமும் மறைந்துவிடும். முஸ்லிமும்கூட தவறு புரிகிறவனிடத்தில் மாத்திரமே அத்தவறுகளைச் சுட்டிக்காட்டுவான். அத்தவறுகளை மற்றவர்களிடம் கூறித்திரிய மாட்டான். ஏனெனில் "கோள்சொல்லி, புறம் பேசித்திரிபவர்களுக்குக் கேடுதான்" என்ற அல்குர்ஆன் வசனத்தை நன்கு விளங்கிவைத்துள்ளான்.
பாம்பைக் கண்டால் தலையையும் மீனைக் கண்டால் வாலையும் காட்டும் விலாங்கு மீனைப்போன்று இரு முகமுடையவனாக இருக்கமாட்டான். ஒருவர் முன்னால் அழகாகப் பேசிவிட்டு அவரில்லாத இடத்தில் அவர் குறைகளை மற்றொருவரிடம் சிலாகிக்க மாட்டான். ஏனெனில் அல்குர்ஆன் கூறுவதுபோல் "தன் இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்ண ஒருபோதும் விரும்ப மாட்டான்." ஒரு கண்ணாடியைப் போன்றிருப்பான்.
உண்மையில் மேற்கூறிய கண்ணாடிக்கிருக்கின்ற மூன்று பண்புகளையுமே இஸ்லாம் ஒரு முஸ்லிமிடம் எதிர்பார்க்கின்றது. எம்மிடம் இருக்கும் குறைகள் அல்லது தவறுகள் எமக்குப் புலப்படுவதில்லை. நாம் நல்லதென்று நினைத்துக்கொண்டு செய்பவை சிலசமயம் பிறர் பார்வையில் விரும்பத்தகாததாக இருக்கலாம். எனவே தவறென்று கருதுபவர் சொன்னாலன்றி அது அவருக்கு விளங்கப்போவதில்லை.
ஒருவர் தன் முகத்தில் அழுக்கு படிந்த நிலையில் செல்கிறார். தான் சுத்தமாகவும் சீராகவும் இருப்பதாக அவர் கருதுகிறார். ஏன் என்றால் தன் முகத்திலிருக்கும் அழுக்கை அவரோ அறியாதிருக்கிறார். அச்சமயம் ஒரு கண்ணாடி எவ்வாறு அவர் முகத்தில் உள்ள அழுக்கைக் காட்டிக்கொடுத்து உதவிபுரியுமோ அவ்வாறுதான் ஒரு முஸ்லிமும் குறைகளுடன் இருக்கும் தன் சக முஸ்லிமோடு நடந்துகொள்ளவேண்டும். இவ்வாறு ஒருவர் தன் சகோதரனின் குறையை, தவறைச் சுட்டிக்காட்டி திருத்திவிட்டு நன்மைக்கு வழிகாட்டுவாராயின் அவர் அந்நன்மையைச் செய்யும் காலமெல்லாம் இவருக்கும் நன்மை கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மற்றொரு விடயத்தையும் நன்கு கவனத்திற்கொள்ள வேண்டும். அதாவது தனது அழுக்குகளைக் கண்ணாடி காட்டுகிறதே என்று யாரும் கண்ணாடியை உடைத்து நொறுக்கினால் அவரது முகத்திலுள்ள அழுக்கு ஒருபோதும் நீங்கப்போவதில்லை. அவ்வாறுதான் பிழைகளை எமக்குத் தெளிவுபடுத்தும் ஒருவரை எதிர்த்தால் நஷ்டமடைவது நாம்தான். கண்ணாடியோடு எவ்வாறு மென்மையாக நடக்கின்றோமோ அதேபோன்று எமக்கு வழிகாட்டுபவருடனும் நிதானமாக நடக்கவேண்டும். எமது தவறுகளைப் பணிவோடு ஏற்று எம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்.
அடுத்து, ஒரு குறையைக் கண்ணாடி எவ்வாறு தெளிவாகவும் சலனமின்றி நிதானமாகவும் காட்டுகின்றதோ அதேபோன்றுதான் குறையைச் சுட்டிக்காட்டுபவர் கவனமாகவும் தெளிவாகவும் நிதானமாகவும் அழகாகவும் சுட்டிக்காட்டவேண்டும். எடுத்த எடுப்பில் குத்தல் வார்த்தைகளால் அவரது மனதைப் புண்படுத்திவிடக் கூடாது.
எனவே குறையுள்ளவரும் அதனைச் சுட்டிக்காட்டுபவரும் இவ்வாறு ஒரு கண்ணாடியைப் போன்று நடந்துகொள்ளவேண்டும். இப்பூவுலகில் ஒருவன் தன் சகோதரனின் குறைகளைப் பிறரைவிட்டும் மறைத்தால் அவனது குறைகளை அல்லாஹ் தீர்ப்பு நாளிலே மறைத்து மன்னித்துவிடுவான் என முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்குக் கண்ணாடியைப் போன்றவன் என்று கூறியதன் தாத்பரியத்தைப் பாருங்கள். நாம் ஒவ்வொருவரும் கண்ணாடிகளாகத் திகழ்வோமென்றால் தீமைகள் தளைத்தோங்க முடியுமா?
- ஆலிஃப் அலி
source: http://aliaalifali.blogspot.com
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக