கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பிஞ்சுகள் மனதை வஞ்சிக்கலாமா?

பாத்திமா ஷஹானா கொழும்பு.

குழந்தை செல்வம் என்பது அல்லாஹ் நமக்குத் தந்த பேரருள். குழந்தை செல்வமானது குடும்ப வாழ்க்கைக்கான ஒரு சிறந்த பொக்கிஷம். 

குழந்தைப் பாக்கியத்தின் மூலம் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு வைத்துள்ளான். ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று அக்குழந்தையை இஸ்லாம் காட்டித் தந்த வழியில் வளர்த்து ஆளாக்குவதிலிருந்து ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான். 

மக்கள் நபி(ஸல்)அவர்களிடம் மக்கள் அல்லாஹ்வின் தூதரே செல்வந்தர்கள் நன்மையால் எங்களை முந்தி விடுகிறார்கள்.நாம் தொழுவதைப் போல் அவர்களும் தொழுகிறார்கள். நாம் நோன்பு நோற்பதைப்போல் அவர்களும் நோன்பு நோற்கிறார்கள்.அவர்களின் அதிகப்படியான செல்வத்தை தர்மம் செய்கிறாகிறார்களே? என்று கேட்டார்கள். அல்லாஹ் உங்களுக்கு தர்மம் செய்ய (வழியை)ஏற்படுத்த வில்லையா? ஒவ்வொறு முறை சுப்ஹானல்லாஹ் சொல்வது தர்மம்.ஒவ்வொறு முறை அல்லாஹ{அக்பர் சொல்வதும் தர்மம்.ஒவ்வொறு முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்வதும் தர்மம்.ஒவ்வொறு முறை லாஇலாஹஇல்லல்லாஹ{ சொல்வதும் தர்மம்.நல்லதை ஏவுவது தர்மம்.தீயதை தடுப்பது தர்மம்.இல்லாறத்தில் ஈடுபடுவதும் தர்மம் ஆகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் இச்சையை தனிக்கதானே வருகிறார் அதற்கும் அல்லாஹ் கூலி வழங்குவானா?தடுக்கப்பட்ட முறையில் இல்லாறத்தில் ஈடுபட்டால் பாவமாக அமைந்து விடாதா? அதேபோல் தான் அனுமதிக்கப்பட்ட முறையில் இல்லாறத்தில் ஈடுபட்டால் நன்மை இருக்கிறது என்று இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள். 
(முஸ்லிம் 1674) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. 1.நிலையான அறக்கொடை 2.பயன் பெறப்படும் கல்வி 3.அவனுக்காகப் பிரார@த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா
நூல்: முஸ்லிம் 3358

அதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அருளைப் பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடகையில்,

“யார் இரு பெண் குழந்தைகளை பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும், நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம் 5127

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள்இ “இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள் எனக் கூறினார்கள் (புஹாரி 1418)

தாய்மார்களின் கவனத்திற்கு.

முதலில் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கக்கூடிய தாய்மார்களான நாம் அல்லாஹ் காட்டித் தந்த வழியில் நடக்கக்கூடியவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழில் பழமொழி சொல்வார்கள் தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை| என்று. இது உண்மையில் பொருத்தமான பழமொழி தான். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார் (புஹாரி 1385)

தாய்மார்கள் முதலில் இஸ்லாம் மார்க்கத்தை தம் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும். இன்னொருவருக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மனப்பக்குவத்தில் அவர்கள் இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தம் குழந்தைகளை மேலைத்தேய கலாச்சாரத்திலேயே வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அதில் தான் மதிப்பும், சமூக அங்கீகாரமும் உள்ளதாக நினைக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் தம் குழந்தைகளை சிறிய வயதிலேயே இசை, நடன வகுப்புகளிற்கு அனுப்பும் அளவிற்மு மேலைத்தேய கலாச்சாரம் இவர்களை ஆட்டிப் படைக்கின்றது. அத்துடன் தாய்மார்கள் வீட்டில் பெரும்பாலான நேரங்களை தொலைக்காட்சியின் முன் கழிப்பதால் குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை பழகுகின்றார்கள். சில வீடுகளில் தாய்மார்கள் குழந்தைகள் அழாமல், எந்த வித கஷ்டத்தையும் அவர்களுக்கு தராமல் இருப்பதற்காக வேண்டியே தொலைக்காட்சியின் முன் குழந்தைகளை அமர வைக்கிறார்கள். இதனால் குழந்தைக்கு பாட்டு, படம், கூத்து, நடனம் எல்லாம் அத்துப்படி. குழந்தைகள் சினிமா பாட்டு பாடி நடிகர்கள் போல் நடனம் ஆடினால் பல தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குழந்தைகளின் ஆபார திறமை என்று மெச்சிக்கொள்வார்கள். 

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியானது இரண்டரை முதல் ஜந்து வயது வரை அதி தீவிரமாக இருக்கும். இந்த வயதெல்லையில் குழந்தைகள் அதிகமான அளவு கேள்வி கேட்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அத்தோடு எல்லா விஷயங்களையும் துரித கதியில் கிரகிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். எனவே, இந்த வயதில் தான் பெற்றோர்கள் தம் குழந்தைகளை சரியான பாதைக்கு கொண்டு வர வித்திட வேண்டும். 

அதாவது, இந்த வயதில் குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் விதமாக அல்லாஹ்வைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பற்றியும் ஸஹாபாக்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்கள் பற்றியும் கதை சொல்வதுபோல் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வன்னம் கூற வேண்டும். இதனால் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்பார்கள். அவை அனைத்திற்கும் அவர்களுக்கு புரியும் வன்னம் பதில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் கேள்வி கேட்கும் திறன் அதிகரிக்கின்றது என்றால் அர்த்தம் அக்குழந்தையின் மூளையின் செயற்பாடு அதாவது சிந்திக்கும் திறன் அதிகரிக்கின்றது என்பது. ஆனால் நிறைய தாய்மார்கள் குழந்தைகள் கேள்விகள் கேட்பதை வெறுக்கிறார்கள். இதனால் குழந்தைகளைத் திட்டுகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதனால் இவர்களே இவர்களின் குழந்தையின் சிந்திக்கும் திறனிற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகின்றார்கள். 

மேலும் தாய்மார்கள் குர்ஆனை, துஆக்களைக் பொருள் விளங்கக் கற்றுக் கொடுத்து அவற்றை மனனம் செய்ய பிள்ளைகளைத் தூண்ட வேண்டும். 

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே அல் முஹ்கம் அத்தியாயங்களை மனனம் செய்தி ருந்தேன்  என்று  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம், அல்முஹ்கம் என்றால் என்ன? என்று கேட்டேன். அவர்கள் அல்முஃபஸ்ஸல் தான் (அல்முஹ்கம்) என்று (பதில்) சொன்னார்கள் (புஹாரி 5036)

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையி-ருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக.... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்.... கூறுகிறார் என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப் பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்) என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்கüடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா? என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (புஹாரி 4302)

நாம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். தீய பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களை பேணிக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானித்த வன்னமாக இருக்க வேண்டும். குழந்தைகள் தவறு செய்தால் கண்டிப்பவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். அல்குர்ஆனில் அல்லாஹ் நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்த உபதேசங்களைக் குறிப்பிடுகின்றான். 

“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தை தேர@வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது" என்று இப்ராஹீமும், யஃகூபும் தமத பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்கள். (அல்குர்ஆன் 2:132)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது, “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)

பெரும்பாலான தாய்மார்கள் பிள்ளைகளை எந்த நேரமும் திட்டியவர்களாகவே இருப்பார்கள். பிள்ளைகளை அதட்டி ஒரு காரியத்தை செய்ய வைப்பதை விட அன்பால் செய்ய வைக்கக்கூடியவர்களாக தாய்மார்கள் இருக்க வேண்டும். அப்போது பிள்ளைகள் தாயின் பாசத்தை விட வேறு எந்த பாசமும் பெரிதில்லை என்பதை படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிள்ளைகள் மீது அன்பு காட்ட வேண்டி வலியுறுத்தியுள்ளார்கள். 

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி  நபி (ஸல்) அவர்கüடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்  உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.     (புஹாரி 5998)

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரானன உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக! என்றார்கள் (புஹாரி 6003)

அடுத்து பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது விளையாட்டு. இன்று பெரும்பாலான பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் சந்தர்ப்பங்களை இழந்தவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு ஓடியாடி விளையாட விருப்பம் இருந்தாலும் தாய்மார்கள் விளையாட அனுமதிப்பதில்லை. இதுவும் பிள்ளைகளின் மனநிலை பாதிப்படைய காரணமாக அமையும். இன்று தொழினுட்ப முன்னேற்றத்தின் காரணமாக உருவான வீடியோ டீவி கேம்ஸ், பிளே ஸ்டேஷன் ஆகிய வினோத விளையாட்டு உபகரணங்களின் மூலம் பிள்ளைகள் ஓரே இடத்திலேயே இருந்து விளையாடுவதால் இவர்களின் அங்க அசைவுகள் மூலமான இரத்த ஓட்டம் தடைப்பட்டு சோம்பேறிகளாக மாறும் சூழ்நிலை உருவாகின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர@களும் பிள்ளைகள் விளையாடி மகிழ்வதை அனுமதித்துள்ளார்கள். 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒழிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடு வார்கள். (புஹாரி 6130)

தாய்மார்கள் பிள்ளைகளை நல்லமல்கள் செய்வதற்கு அவர்களுடன் சேர்ந்து பழக்க வேண்டும். குறைந்தது கடமையாக்கப்பட்ட வணக்கங்கள், அமல்கள் பற்றிய அறிவை சிறு வயதிலிருந்தே ஊட்ட வேண்டும். பருவ வயதை அடைவதற்கு முன்பே நல்ல விதமாக அவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் பழக்க வேண்டும். அப்போது தான் பருவ வயதை அடையும்போது அவர்கள் கடமையான வணக்கங்களை உரிய முறையில் நிறைவேற்ற அவர்களுக்கு இலகுவாக அமையும். 

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷ_ரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்! என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம் எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம் அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (புஹாரி 1960)

எனவே, தாய்மார்களான நாம் நம் வாழ்வை இஸ்லாம் காட்டித் தந்த வழியில் சீராக அமைப்பது மட்டுமல்லாமல் நம் பிள்ளைகளையும், குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்இ கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.  (அல்குர்ஆன் 66:6)

நாம் நம் பிள்ளைகள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கின்றோம் என்றால் அவர்களுக்கு சுவர்க்கத்திற்கான வழியையே நாம் காட்ட வேண்டும். நாளை பெற்றோர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் குழந்தைகளாக வளர்க்க வேண்டும். இவை அனைத்தும் ஒரு தாயின் கையில் தான் பிரதானமாக உள்ளது. 

எனவே, தாய்மார்கள்  தம் குழந்தை செல்வங்களை அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய, முஹம்மது நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய, அல்லாஹ்விற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யக்கூடிய வீரர்களாக வளர்ப்போமாக. 

0 கருத்துகள்: