கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

  அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான்.
 படைத்தல்,பரிபாலித்தல்,போஷித்தல், ஆட்சி செய்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், அருட்கொடைகளை வழங்குதல், சிலதை சிலருக்கு வழங்காது விடல், கண்ணியப்படுத்துதல், சிறுமைப்படுத்துதல் இவையாவும் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தவன். இருள்களையும், பிரகாசத்தையும் உண்டாக்கியவனும் அவனே !  (அல் அன் ஆம் : 1)
  மற்றுமொரு வசனத்தில் கூறுகிறான். (நபியே) நீர் கூறுவீராக எங்கள் அல்லாஹ்வே ! சகல அதிபதியே ! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியை கொடுக்கின்றாய், நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய், நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய், நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய், நன்மைகள் யாவும் உன் கையில்தான் இருக்கின்றன. நிச்சயமாக நீயே யாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (ஆல இம்ரான் : 26)
  மேலே குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து தெளிவான பல உண்மைகளை விளங்க முடிகின்றது. மனிதர்களை படைத்து பரிபாலித்து போஷிப்பதுடன் தான் யாரை நாடுகின்றானோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றான் மேலும் யாரை அவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவர்களை செல்வந்தர்களாக ஆக்குகின்றான். யாரை அவன் கண்ணியப்படுத்த விரும்புகின்றானோ அவர்களை கண்ணியப்படுத்துகின்றான். இவ்வனைத்துப் பண்புகளும் நம்மை படைத்த ரப்புல் ஆலமீனின் கருணையில் உள்ளதாகும். இது போன்றே அல்லாஹ் தன் அடியார்களின் மீது அன்பையும் அருளையும் பல பரிணாமத்தில் வெவ்வேறு முறையில் படைப்பினங்களின் மீது எந்த நேரத்தில் எப்படிப்பட்ட அன்பையும் தன் அருளையும் வழங்க வேண்டுமோ அதை அப்படியே கூடுதல் குறைவின்றி வழங்கிக் கொண்டே இருக்கின்றான். படைத்தவனின் அன்பும் கருணையும் நமது எண்ணத்திலோ அல்லது எண்ணிக்கையிலோ ஒருபோதும் கணக்கிடவே முடியாது. ஏனென்றால் அவன் நம்மை படைத்ததோடு நமக்கு தேவையான எத்தனையோ நிஃமத்துகளை நாம் கேட்காமலும் நாம் கேட்ட அனைத்தையும் அள்ளி வழங்கியவன் தான் அல்லாஹ், அவன் தன் திருமறை வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான் (இவையின்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்கு கொடுத்தான் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் ”எண்ணி” முடியாது            (சூரா இபுராஹிம் :34)
  எனதருமை சகோதரர்களே ! அவனின் (அல்லாஹ்வின்) அருட்கொடைகளில் எதைக் கூறுவது, மனிதர்களுக்கு அவன் வழங்கிய உடலைக் கூறுவதா, உடல் ஆரோக்கியத்தை கூறுவதா? உடல் உறுப்புகளின் அமைப்பை கூறுவதா? நாம் ஒவ்வொருவரும் (படைக்கப்பட்ட அத்துனை உயிர்களும்) மூச்சை உடலின் உள்ளே இழுத்து வெளியிடும் சுவாசத்தைக் கூறுவதா? இன்னும் ஏராளம் ! ஏராளம் ! இவ்வளவு அருளும் அன்பும் நமது எண்ணிக்கையிலோ அல்லது எண்ணத்திலோ அடக்கிவிட முடியுமா? முடியவே முடியாது.
  இவைகள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு நமது சகோதரர் களில் சில பேர், சில கேள்விகளையும் கேட்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆலிம்களிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். அது என்னவென்றால், ஆலிம் அவர்களே ! நான் இறைவனின் வழிபாடுகளில் எந்த குறையும் வைப்பதில்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டும் அடிபணிந்தும் வாழ்ந்து வருகின்றேன். மேலும், தொழுகையில் எந்த வக்தையும் தவர விடுவதில்லை. அது போன்று சரியான முறையில் ஒவ்வொரு வருடமும் நோன்பு வைத்து வருகிறேன் என்றாலும் எனக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனை, துக்கத்துக்குமேல் துக்கம் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இதற்கு நேர் மாறாக தொழுகாதவன், நோன்பு வைக்காதவன், வட்டி வாங்கியும், கொடுத்துக்கொண்டிருப்பவன் என் கண்ணெதிரேயே நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறான் என்று மனது நொந்து கேட்கின்றனர். சிலபேர் கேட்டு விடுகின்றனர். பலபேர் மனதில் இவ்வாறான எண்ணத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர்.
  எனதருமை முஸ்லீம் சகோதரர்களே ! மேலே கூறப்பட்ட இறை வசனங்களை நன்றாக படித்து நமது சிந்தனையை இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளின் பக்கம் திருப்புங்கள் உண்மை புரியும் நம்மை படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்விற்கு தெரியாதா? யாருக்கு எதை எந்த நேரத்தில் என்ன கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை படைத்தவன் அறியக்கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஆழமாக விளங்குவதற்காக ஒரு உதாரணத்தை கூறுகின்றேன். ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது அவர்கள் வீட்டில் நன்றாக சமைத்து மட்டன் பிரியாணியோ அல்லது சிக்கன் பிரியாணியோ சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் செல்லக் குழந்தை பக்கத்தில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த அக்குழந்தை, அம்மா சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில் கைவைக்கின்றது. அம்மா கையை தட்டி விடுகின்றாள் அக்குழந்தை மீண்டும் உணவிலே கை வைக்கின்றது. அம்மாவாகிறவள் நீ இதை சாப்பிடக்கூடாது என்று கூறி அக்குழந்தையை தூக்கி தூரமாக வைத்து விட்டு இவர்கள் சாப்பிடுகின்றனர். அக்குழந்தை மீண்டும் மீண்டும் உணவில் கை வைக்கும் பொழுது அந்தத் தாய் தன் குழந்தையை அதட்டி அடித்தும் விடுகின்றாள் குழந்தை கதறி அழுகின்றது என்றாலும் அவ்வுணவிலிருந்து எந்த பருக்கையையும் கொடுக்க வில்லை. நன்றாக கவனியுங்கள். அதே குழந்தை பிரியாணி கிடைக்காமல் அடிவாங்கிய அதே குழந்தைக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது பூர்த்தியாகின்றது தாய் கூறுகிறாள் மட்டன் பிரியாணி சமைத்து வைத்துள்ளேன் சாப்பிடு உடம்புக்கு நல்லது சத்தான உணவு என்று கூறுகின்றாள் பையன் வேண்டாம் என்று கூறுகின்றான் தாய் பையனை அதட்டி சாப்பிடச் சொல்கிறாள் பையன் வேண்டாம் என்று மறுக்கும் போது எந்தத்தாய் தன் பிள்ளை குழந்தையாக இருக்கும்போது சாப்பிடக்கூடாது என்று அதட்டி அடித்தாளோ அதே தாய் இன்று சாப்பிடச் சொல்லி அடிக்கின்றாள் நண்பர்களே சற்று யோசனை செய்ய வேண்டும் ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கு எந்த வயதில் எதைக் கொடுக்க வேண்டும், என்ன கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கின்றாள் என்றால், நம்மையெல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீனுக்கு தெரியாதா? யாருக்கு எதை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று எனவே அல்லாஹ்வின் அருள், அன்பு, பாக்கியம் என்பது பூமியில் நிறைந்து கிடக்கின்றது. சோதனையும் வேதனையும் எனக்கு மட்டுமே வருகின்றது என்ற எண்ணத்தை கைவிட்டு நன்மையும் தீமையும் கவலையும் சந்தோஷமும் இறைவனின் கையில் உள்ளது. அவனின் நாட்டம் எதுவோ அதுதான் நடக்கும் என்று எண்ணினாலே நாம் பாதி நிம்மதியை அடைந்து விடுவோம்.
  அல்லாஹ்விடம் நூறு அருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள், புழுப்பூச்சிகளுக்கிடையே இறக்கி வைத்துள்ளான். அந்த ஒரு பங்கின் காரணமாகத்தான் ஒருவர் மற்றவருடன் மென்மையுடனும் ,இரக்கத்துடனும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாகவே காட்டு விலங்குகள் தமது குட்டிகளுடன் பாசம் கொள்கிறது. மீதமுள்ள தொன்னூற்றொன்பது அருள்களை தன் வசம் வைத்துள்ளான் (கியாமத் நாளில் தன் அடியார்களின் மீது பொழிவதற்காக) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்)
  ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமூகத்தில் கைதிகள் சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தனது குழந்தையை காணாது அங்கும் இங்கும் பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்தாள் குழந்தை கிடைத்ததுமே அதை வாரியெடுத்துத்தன் வயிற்றோடு அனைத்துக்கொண்டு அதற்கு பாலூட்டினாள். இக்காட்சியை கண்ட நபி (ஸல்) அவர்கள் இப்பெண் தன்னுடைய குழந்தையை நெருப்பில் எரிந்துவிடுவாள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று எங்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவள் எரிய மாட்டாள். அவள் நெருப்பில் எரியாமல் இருப்பதற்கும் சக்தி பெற்றவள் வல்லமை பெற்றவள் (எரிய வேண்டும் என்ற எவ்வித நிர்பந்தம் இல்லை) என்று கூறினோம். இந்தப் பெண்தன் குழந்தையிடம் வைத்திருக்கும் பாசத்தை விடப் பன்மடங்கு பாசத்தை அல்லாஹுத்தஆலா தனது அடியார்களிடம் பாசம் வைத்துள்ளான்
என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
  நண்பர்களே அல்லாஹ் நம்மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளான் என்பதை நபிகள் நாயகமே தெளிவாக உதாரணத்துடன் அறிவித்துத் தந்துள்ளார்கள். இறைவனின் பாசமும் அன்பும் நமது எண்ணத்திலோ, எண்ணிக்கையிலோ அடங்கி விட முடியாது. படைத்தவனின் அன்பே பெரியது எங்களை படைத்து பரிபாலிக்கும் பேரிறைவா ! எங்களின் பாவங்களை மன்னித்து எங்கள் மீது உன் வற்றாத அருள் மழையை பொழிவாயாக ! ஆமீன் வஸ்ஸலாம்     
         மெளலவி ஆலிம் J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
நன்றி:முதுகுளத்தூர்.காம்

0 கருத்துகள்: