காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். “என்னடா கனகவேல் எப்படியிருக்க…’ எனக் கேட்ட காமராஜர்.
“நல்லா இருக்கேன் தாத்தா… எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு… நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்’ என்றார் அந்த இளைஞர்.
அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர். அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, ‘மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை’ என்று முகவரி எழுதப்பட்டிருந்தது. “என் பேரை எதுக்கு எழுதினே…’ காமராஜரின் குரலில் கோபம் இருந்தது. “இல்லை தாத்தா… மெட்ராஸ் முகவரி கேட்டாங்க… எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்” என்றார் அந்த இளைஞர்.
உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து, “கனகவேலு… இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு… அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே.
“இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது’ என்று பதில் சொல்லி அனுப்பினார்.
கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர், காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன். இதெல்லாம் அந்தக் காலம்…!
நன்றி;செம்பருத்தி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக