கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது..!


‘எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள்? அவன் குற்றவாளிதான் என்றால் தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபணமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா?’

இப்படிக் கேட்பவர்கள் அப்துந் நாஸர் மஅதனியின் தந்தை டி.எ. அப்துஸ்ஸமத் மாஸ்டரும் அவருடைய மனைவி அஸ்மாபீவியும்தான்.

“கோவையில் விசாரணைக் கைதியாக எங்கள் மகனை ஒன்பதே கால் வருடம் சிறையில் அடைத்திருந்தார்கள். இறுதியில் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் பெங்களூரு போலீஸ்  வந்து அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டது. பிணையில்கூட விடுவிக்காமல் அவனை ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள்? படைத்தவனே, இந்த உலகில் எந்தத் தாய்க்கும் எந்தத் தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்-கூடாது..”

எழுபத்து இரண்டு வயதான சமத் மாஸ்டரும் அஸ்மாபீவியும் மனம் உடைந்து அழுது பிரார்த்திக்கிறார்கள். ஓடித் தளர்ந்த இயந்திரம் போல் உள்ளார் இந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகனுக்கு நீதி வேண்டி ஆண்டுக்கணக்கில் அதிகாரிகளின் அரண்மனைக் கதவுகளைத் தட்டிய சமத் மாஸ்டர், பக்கவாதம் வந்துபடுத்த படுக்கையில் ஆகிவிட்டார்.

அதனால் அப்துந்நாஸர் மஅதனியை பெங்களூரு போலீசார் அழைத்துச் சென்றதைக்கூட பல மாதங்களுக்குப் பின்புதான் அறிந்தார்.

கோவை சிறையில் மஅதனி இருந்தபோது நீதிக்கான போராட்டத்தில் சமத் மாஸ்டர் முன்னணியில் இருந்தார்; ஆனால் இன்று நாற்காலியில் தளர்ந்தமர்ந்து கண்ணீர் விடத்தான் முடிகிறது.

அடக்குமுறைகள், அநீதிகள் எனும் எத்தனையோ ஆழிப்பேரலைகளை எதிர்கொண்டதுதான் இந்தக் குடும்பம்.

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை ஒட்டி மஅதனியின் ஐ எஸ் எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது மாஸ்டரும் மனைவியும் தங்களின் பாரம்பர்ய வீட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்தது.

வடமாநிலத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல்துறை அதிகாரியின் தலைமையில்தான் இவர்கள் வீட்டை விட்டு விரட்டப்-பட்டார்கள். அந்த வீடு பிறகு போலீஸ் கேம்ப் ஆக மாற்றப்பட்டது. அந்தக் கொடுமையை சமத் மாஸ்டர் நினைவு கூர்கிறார்:

“டிசம்பர் 13ஆம் தேதி போலீஸ் திடீரென்று வந்து வீட்டில் ரெய்டு நடத்தியது. நாற்காலிகளும் துணிகளும் தவிர வேறு எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டு போனது. பள்ளிக்கூடத்தில் நடந்த பேச்சுப்-போட்டிகளில் வெற்றி பெற்று அப்துந் நாசிர் வாங்கிய பரிசுப்பொருள்கள், சான்றிதழ்கள் எல்லாவற்றையும் போலீஸ் சின்னாபின்னமாக்கியது. இளைய மகன் அன்வர் ஹுசைனுக்கு அன்று ஒரு வயது. குழந்தையையும் தூக்கிக் கொண்டு உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி அவர்கள் அஸ்மாபீவியை அச்சுறுத்தினர்.

“மஅதனி தவிர ஏழு மக்களுடன் நாங்கள் அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடு ரோட்டுக்கு வந்து விட்டோம். வீட்டை அன்று இரவே போலீஸ் சீல் வைத்து-விட்டது. கேம்ப் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன.

“பிறகு நான்கு ஆண்டுகள்  சொந்தக்காரர்கள் பலருடைய வீடுகளில் அபயம் தேடினோம். 1997இல் வீடு திரும்பக் கிடைத்தபோது ஒரு போர்க்களம் போல் இருந்தது. போலீசார் எங்கள் வீட்டுப் பரம்பைச் சின்னாபின்னப்படுத்தி இருந்தார்கள். தென்னை மரங்கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. காவல்துறையினரின் கலப்படமற்ற பொய்ச் செய்திகள் குறித்து எந்தப் பத்திரிகையும் ஊடகமும் கண்டுகொள்ளவே இல்லை. அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. எங்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் எண்ணிப் பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை.” சமத் மாஸ்டர் குரல் தழுதழுத்தது.

“1998 மார்ச் 31 அன்று ஆட்சேபணைக்குரிய வகையில் பேசினார் என்று கூறி கோழிக்கோடு கசபா காவல் துறையினர் மஅதனியைக் கைது செய்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு பிணையில் வர அனுமதிக்காமல் ஒன்பது ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறையில் கழிந்தது.

அச்சுதானந்தனும் உம்மன் சாண்டியும் வயலார் ரவியும் அவரவரின் தளங்களில் மஅதனி அனுபவிக்கின்ற எல்லையற்ற சிறைவாசப் பிரச்னையில் தலையிட்டனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில்  கோவை அமர்வு நீதிமன்றம் மஅதனி குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.

“அவனுடைய இளமைக்காலம் எல்லாம் சிறையிலேயே கழிந்தது.  இதோ, இப்போது மீண்டும் அவனைக் கைது செய்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்டு 17ஆம் நாள் அவனை பெங்களூரு போலீஸ் கொண்டு சென்றது. 47 வயதுதான் ஆகிறது என்றாலும் இன்று அவன் ஏராளமான நோய்களால் தாக்கப்பட்டுள்ளான். படைத்த இறைவன் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் எங்களைக் காப்பாற்றிவருகிறது.

“நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது பக்கவாதம் வந்து வீழ்ந்த அன்று காலையில்தான். அவனுடைய உம்மா அவனைப் பார்த்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மஅதனியின் கண்பார்வை கிட்டத்தட்ட முழுவதுமாகப் போய்விட்டது என்று சொல்கிறார்கள். நீதி கிடைப்பதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதைக் குர்ஆன் தடுத்திருக்கிறது. இல்லையெனில் நாங்கள் எப்போதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்போம்.” ஆதரவற்ற இந்த முதிய தாய் தந்தையரின் கண்ணீருக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

நன்றி - சமரசம்

0 கருத்துகள்: