கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

விஷம் கக்கும் விஸ்வரூபம்? : களம் இறங்கும் முஸ்லிம் சமூகம்!


உன்னைப்போல் ஒருவன்" படத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கிய கமலஹாசனின் சுயரூபம், தற்போது "விஸ்வரூபம்" எடுத்துள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் அமைப்புக்களின் "அவசர ஆலோசனைக்கூட்டம்" நேற்று சென்னையில் நடைபெற்றது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சித்தரிப்புகள் இருக்கின்றன, என்ற கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ள நிலையில், நேற்று மாலை 7 மணியளவில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் "அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கினைப்புக்கூட்டம்" நடந்தது.

ஜமாத்துல் உலமா தலைவர், மவுலவி அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையில், விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் எதிர்கொள்வது? என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட், ம.ம.க., தமுமுக, இ.த.ஜ, ஜமாத்தே இஸ்லாமி, ஜம்யியதுல் உலமா, தேசிய லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

2 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக்கூட்டத்துக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1.விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக வரும் தகவல்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட, உள்துறைச்செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை 20/12/12 அன்று நேரில் சந்தித்து மனு கொடுப்பது.

(துப்பாக்கி திரைப்பட சர்ச்சை வந்தபோது, விரைந்து செயல்பட்டு தீர்வை ஏற்படுத்திய தமிழக அரசு "விஸ்வரூபம்" விஷயத்திலும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், என பல தலைவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்)

2.இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில், 22/12/12 அன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காணவும், முடிவு செய்யப்பட்டது.

3.வழக்குப்பதிவு செய்த பிறகு, அன்றைய தினமே "பத்திரிக்கையாளர் சந்திப்பை" நிகழ்த்தி கூட்டமைப்பின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவது எனவும்  முடிவு செய்யப்பட்டது.

தமிழ் சினிமாக்களில், "பாகிஸ்தான்" முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போது, இந்தியாவில் "உங்கள் ஊரில் - உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் "ஸ்லீப்பர்" செல்களாக இருக்கலாம், என முஸ்லிம்களை காட்சிப்படுத்தியது, விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி.

தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் 'ரோஜா' (1992) முதன்முதலில் "விஷக்கருத்துக்களை" விதைத்தது.

"ரோஜா"வில் முஸ்லிம் வேடத்தில் இருக்கும் தீவிரவாதி ஒருவர், இந்திய "தேசியக்கொடி"யை எரிப்பது போலவும், பார்ப்பன வகுப்பைச் சார்ந்த கதாநாயகன், எரியும் கொடியின் மீது படுத்து தீயை அணைப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.

இந்த காட்சியின் மூலம் முஸ்லிம்கள் என்றால் இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்தையும், பார்ப்பனர்கள் என்றால் தேசத்தைக் காக்க உயிரையே பணயம் வைப்பவர்கள் போலவும் காண்பித்து முஸ்லிம்களை இழிவு படுத்திய அதே வேளையில், தான் சார்ந்த பிராமனீயத்தை போற்றி "விஷமம்" செய்திருந்தார்,மணிரத்னம்.

ரோஜாவுக்குப் பின் பம்பாய், பம்பாய்க்குப் பின் அதே பாணியில் விஜயகாந்தின் பல படங்கள், அர்ஜுனின் படங்கள், கமலஹாசனின் படங்கள் என முஸ்லிம் விரோத படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவு "விஸ்வரூபம்"
http://maruppu.in/

0 கருத்துகள்: