
இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு மனித சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொண்டதாக ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
சிறுநீரகத்தின் செயல்களை எண்ணிப் பார்த்தோமானால் நமக்கு இறைவனின் மீது நிச்சயம் ஒரு மதிப்பு வரும். அந்த அளவிற்கு சிறுநீரகத்தின் பணி அமைந்துள்ளது.
உடலில் பல்வேறு நடவடிக்கைகளை கவனிக்கிறது இந்த சிறுநீரகங்கள். பொதுவாக ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஆனால் ஒரு மனிதன் வாழ ஒரு சிறுநீரகமே போதுமானதாகக் கருதப்படுகிறது.
உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டி அதில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுகிறது. உடலக்குத் தேவையான நீர்ச்சத்து சம அளவில் இருக்கவும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. உடலில் அமில - காரத் தன்மையை சமநிலையில் வைக்கிறது.
இதுமட்டுமல்ல், உடலில் சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதாவது, உடலில் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எத்தோபாய்ட்டின் என்ற ஹார்மோனை சிறுநீரகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் குறை ஏற்படும் போதுதான் ரத்த சோகை என்ற வியாதி ஏற்படுகிறது.
இப்படி சிறுநீரகத்தின் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை மட்டும் வேலை செய்யாமல் போனால் உடல்நிலை எவ்வாறு பாதிக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே உடல் முழுவதும் பரவும். ரத்தத்தில் தேவையற்ற உப்பு, தாதுப் பொருட்கள் தங்கிவிடும். இதனால் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு ரத்த சோகை ஏற்படும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் சமச்சீர் நிலையை இழந்து மரணம் ஏற்படும்.
இப்படி நாளெல்லாம் நமக்காக பாடுபடும் சிறுநீரகம் சீராக செயல்பட வேண்டும் எனில் நாம் செய்ய வேண்டியது என்ன? தினமும் உடலுக்குத் தேவையான நீரை அருந்தி வர வேண்டும். உடலுக்குத் தேவையான நீரை நாம் அருந்தும் போது சிறுநீரகத்தின் வேலை எளிதாகிறது. தினமும் உடலுக்குத் தேவையான அளவுக்குக் குறைவாக நீர் அருந்துவதாலோ, நீர் அருந்தாமல் இருப்பதாலோ சிறுநீரகத்திற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று எண்ணினால் அது விரைவில் நிரந்தர ஓய்வை எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
http://tamil.webdunia.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக