கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

எனது அன்பான கணவனுக்கு!


எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).

எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன்.

என்னை நம்புங்கள்! நான் எப்படி இதை எழுதுவது? நாம் இப்படிஒருஇக்கட்டான சூழ்நிலையை அடைந்த பின்னரும என்னால் எப்படி எனது உளக்குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். இது ஏனென்று உங்களுக்கு தெரியுமா? நாமிருவரும் ஓருடலும் ஈருயிருமாக அல்லவா இருந்தோம்? எதற்காக எமது வாழ்வு இப்படியான ஒரு அவல நிலையை அடைந்தது? நமது வாழ்க்கையை வழப்படுத்த வேண்டிய சுபிட்சத்தை நாம் ஏன் இழந்தோம், நாமிருவரையும் பிரித்து வைப்பதில ஷைத்தான் வெற்றி பெற்றுவிட்டான். ‘உனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறிய உனது மனைவி எந்தப்பயனும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்க காரணமாக இருந்து விட்டாள்’ என்று உங்களை நம்பவைத்து விட்டான் அந்த ஷைத்தான்.

உங்களது இரண்டாவது வாரிசான பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? அப்போதே நான் நினைத்தேன் இது பெண் குழந்தை என்பதற்காகத் தான் நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. ஒரு பெண் அந்த நேரத்தில் படும் வேதனையை நீங்கள் நன்றாக அறிந்திருந்தும் என்னை ஆறுதல் படுத்துவதற்காவது நீஙகள் வரவில்லை. ஒவ்வொரு மனைவியும் அந்த நேரத்தில் கணவனின் வருகையை எதிர்பார்ப்பாள். ஆனால் அந்தப்பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை அது என்னை பெரிதும் பாதித்தது.

நான் உங்களிடம் மனம் வருந்திய போது நான் நினைத்திருக்கவில்லை நாம் இன்றைக்கு வாழும் நெருக்கடி மிக்க வாழ்க்கைக்கு இது தான் ஆரம்பம் என்று! என்றாலும் பின்னர் நீங்கள் இதை எண்ணி வருந்தினீர்கள். எனது உணர்வை புரிந்து கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நமக்கு அல்லாஹ் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பாக்கியமாக தந்த போது நான் அவமானத்தையும், இளிவையும், பரிகசிப்பையும் தவிர வேறு எதையும் பெறவில்லை. நீங்கள் ஒரு நாள் சொன்னீர்கள் உனக்கு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கத்தான் தெரியும் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு இந்த வீட்டில் எந்த உரிமையுமில்லை என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தில் ஈட்டியால் குத்திய வார்த்தைகளாகும். அந்த வார்த்தைகளை நீங்கள் மறந்திருந்தாலும் எனது உள்ளத்தை விட்டு அவைகள் மறைந்து விடவில்லை. என்னைப் பெற்றெடுத்த எனது அன்பு தந்தை மரணிக்கும் வரை நோயிலே இருந்தார். அவரை இறுதி வரையிலும் பார்க்க விடாமல் என்னை தடுத்தீர்கள்…

என் அன்புக் கணவரே! உங்களுக்கு ஏன் இந்த கல் மனம்? உங்களின் இந்தக் கோபத்தையும் அடக்கு முறையையும் என்னால் தாங்க முடியுமா என்ன?

எனது அன்புக் கணவரான உங்களின் மேலான கவனத்திற்கு நான் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்த போது அது ஆண் குழந்தை இல்லை என்ற உடன் உங்களைவிட அதிகம் நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் அது பெண் குழந்தை என்பதற்காகவோ அல்லது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறைகாண வேண்டும் என்பதற்காகவோ அல்ல! மாறாக உங்கள் மீது எனக்குள்ள இரக்கத்தினாலும் உங்களின் உணர்வைப் புரிந்துகொண்டதாலும், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவும் தான். இதனை நீங்கள் என்னை சொல்லாலும், செயலாலும் நோவினை செய்த போதெல்லாம் நான் பொறுமை காத்ததன் மூலம் நீங்கள் மிக தெளிவாக புரிந்திருப்பீர்கள்…

உண்மையில் என்னை நம்புங்கள்! நான் ஏதோ ஒரு பாவம் செய்தவிட்டேனோ தவறிழைத்து விட்டேனோ என்றெல்லாம் எண்ணினேன். சில வேளை உங்களது கவலைக்கும் மன உளைச்சலுக்கும் நான் தான் காரணமோ, என்னை நம்புங்கள்! ஆண் பிள்ளை பெற்றெடுக்க வேண்டுமென்ற உங்களின் கனவுக்கு நான் தான் தடைக்கல்லாக அமைந்து விட்டேனோ என்று கூட நான் எண்ணியதுண்டு. உங்களது உணர்வு இப்படி ஆனதனால் உங்களது உரிமை விஷயத்தில் நான் ஒரு பாவியாகி விட்டேனா என்று எண்ணிய சந்தர்ப்பங்களும் உண்டு…

எனது அன்பான கணவரே! நீங்கள் எண்ணுவது போன்றுமல்ல, நான் அதற்குக் காரணமும் அல்ல… இவை அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடும். அவனின் விருப்பமும் அவனது களா கத்ருமாகும். எதற்காக நீங்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை என்றால் அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை?

சில நேரம் இதற்கெல்லாம் நீங்கள் கூட காரணமாக இருக்கலாமல்லவா? அல்லது ஆணையோ பெண்ணையோ பெற்றெடுக்க முடியாத மலடனாகவோ அல்லது மூளை குறைபாட்டுடனோ, அல்லது அங்கவீனமான பிள்ளைகளையோ தந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது ஆண் பிள்ளைகளைத்தான் தந்த பின்னர் அப்பிள்ளைகள் பெற்றோருக்கு நோவினை செய்கின்ற கேடு கெட்ட பாவிப்பிள்ளைகளாக அவர்கள் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அதிக மனிதர்கள் இவை அனைத்தையும் அனுபவிக்க அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் இம்மகத்தான அருட்கொடைக்கு ஏன் அவனை புகழக்கூடாது?

இந்த அருளுக்கு ஏன் நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடாது? அல்லாஹ் அவனது திருமறையில்,

(வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயகாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய ஆற்றலுடையவன்). (அஷ்ஷுரா-49.50).

நிச்சயமாக பெண் பிள்ளைகள் அல்லாஹ் அருளிய மிகப்பெரும் கொடை! யார் அப்பெண் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்களோ அல்லாஹ் அவர் மீது அருள் புரிகிறான் என்று நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லவில்லையா?

(தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை பரிசளிக்கிறான்) என்றால் பெண் மட்டுமே என்றும் (தான் நாடியவர்களுக்கு ஆண் மக்களை பரிசளிக்கிறான்) என்றால் ஆண் மட்டுமே (அல்லது ஆண் பெண் இருவரையும் என்றால்) சிலருக்கு ஆண் பெண் இரு சாராரையும் கலந்தும் என்றும் (தான் நாடினால் மலடாக்குவான் என்றால்) அவர்கள் யாரையுமே பெற முடியாதவர்களாக்கி விடுவான் என்பது கருத்தாகும்.

நிச்சயமாக அறிந்தவன் சக்திபெற்றவன் என்றால்) அனைத்தையும்) அறிந்தவன் யாவற்றையும் செய்பவன் அவனேயாவான்.

எனது அன்புக்குரிய கணவரே! எந்த சக்தியுமற்ற எதையுமே செய்ய முடியாத மிகவும் பலவீனமான என் மீது ஏன் இவ்வளவு கோபத்தை கொட்டுகிறீர்கள்?

எதற்காக பெண் பிள்ளைகளினால் எந்த மரியாதையையும் அடைய முடியாது என்று எண்ணி அவர்களை வெறுத்தொதுக்கிய (ஜாஹிலிய்யா) அறியாமை கால மக்களுக்கு ஒப்பாகிறீர்கள்?

அப்பெண்கள் அவமானத்தையும் இழிவையும் தருவார்கள் என்று எண்ணினார்கள். அல்லாஹ் அவனது திருமறையில்

(இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாரயங் கூறப்பட்டால். கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க. அவன் முகம் (துக்கத்தால்) கறுத்தாக ஆகி விடுகிறது.) அந்நஹ்ல்-58.59.

எனது அன்பு கணவரே! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்த அறியாமைக்கால (ஜாஹிலிய்யா) மக்களுக்கு ஒப்பாகுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

நபி மொழிகளில் (சுன்னாவில்) பெண் மக்களின் சிறப்பு:
நல்ல (சாலிகான) மனிதர்களுடன் சுவர்க்கத்திலே கொண்டு போய் உங்களைச் சேர்ப்பிப்பதற்கு காரணமான பெண் பிள்ளைகளை ஏன் வெறுக்கின்றீர்கள்? ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் வெட்க உணர்வு மிக்கவர்களாகவும் கட்டிக்காத்து அழகிய (இஸ்லாமிய) முன்மாதிரி மிக்க பயிற்ச்சி வழங்கினால் நல்ல மனிதர்களுடன் சுவர்க்கம் செல்ல முடியும் என்பதை பின்வரும் நபி மொழிகள் உணர்த்துவதை நீங்கள் அறியத் தவறிவிட்டீர்கள்.

1) அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் ஒரு பெண் தனது இரு பெண் பிள்ளைகளுடன் அவர்களுக்கு எதையாவது (உண்ணக்) கொடுக்குமாறு கேட்டவளாக வந்தாள். ஆனால் ஒரு பேரிச்சம் பழத்தை தவிர வேறு ஏதும் என்னிடத்தில் இருக்கவில்லை. அதை அவளிடத்தில் கொடுத்தேன். அவள் அதில் எதனையும் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்தாள். பின்னர் அப்பெண் அங்கிருந்து சென்றதன் பின்னர் நபிகளார் ( ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். இச்செய்தி பற்றி அவர்களுக்கு சொன்ன போது சொன்னார்கள்.

‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள’ (அறிவிப்பவர்; ஆயிஷா( ரழி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).

இமாம் திர்மிதியின் ஒரு அறிவிப்பில், ‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் (அப்பெற்றேர்) சோதிக்கப்படும் போது அதை பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள்’

2) மேலும் ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக ‘அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் என்றார்கள்.’ (ஆதாரம் முஸ்லிம்).

3) நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’ அறிவிப்பவர் (அனஸ் (ரழி), ஆதாரம் முஸ்லிம்).

இமாம் திர்மிதிக்குரிய ஓர் அறிவிப்பில்’ எவரொருவர் இரண்டு அடிமைப் பெண்களை பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கிறார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று தனது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் ஒன்றாக சேர்த்து காட்டினார்கள்.’ இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹான தரத்தையுடைய ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

4) ‘எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்’ என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி).

இப்னு மாஜாஹ், ஹாகிம், இமாம் முன்திர் அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.

5) ‘எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்;மிதி).

இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹ் என்கிறார்கள்.

6) ‘எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விட்டது’ என்று நபிகளார் சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா? ஆம் இரண்டு இருந்தாலும் என்றார்கள் தோழர்கள கேட்டார்கள் ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே! என்ற உடன் ஆம் ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் (றழி), ஆதாரம்: அஹ்மத்.

இதை இமாம் அல்பானி (ரஹ்) இன்னும் சிலர் ஸஹீஹ் என்கின்றார்கள்.

எனது அன்புக் கணவரே! பெண் பிள்ளைகள் அல்லாஹ்வின் அருளும், அவனது பரிசுப் பொருளுமாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா?

உங்களுக்குத் தெரியாதா?

- அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று.

- அவர்கள் தான் நபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவர்க்கத்திலே உங்களை சேர்ப்பித்து அவர்களுக்கும், உங்களுக்கும் இரு விரல் இடை வெளிதான் இருக்கும் என்றளவுக்கு பதவிகளை உயர்த்துவார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா?

கொஞ்சம் சிந்தியுங்கள்! எமது பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு அதில் இரக்கம் நிரம்பியுள்ளது! எவ்வளவு கள்ளங் கபடமற்ற தூய்மையான மனது!!?

இதை இன்னும் இளகுவாக நீங்கள் புரிந்து கொள்வதாயின், நீங்கள் நோய் வாய்ப்பட்டு கட்டில் படுக்கையாக கிடந்த போது எவ்வளவு அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்?

சிந்தித்தீர்களா?

- உங்களது தேவைகளையும் நிறைவு செய்து, உங்களுக்கு எவ்வளவு அழகாக பணிவிடை செய்தார்கள்? என்பதை.

- வீட்டுப் பணிகளில் எனக்கு எப்படி பக்க பலமாக உதவுகிறார்கள்? என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

- அவர்களது கல்வித் திறமையையும், அவர்களது வெட்க உணர்வையும் ஹிஜாப் அணிவதில் அவர்களது ஆர்வத்தையும் பார்த்தீர்களா?

- உங்களுக்கு எவ்வளவு வெட்க்கப்பட்டு அவர்கள் வழங்கும் மரியாதையைப் பார்க்கவில்லையா?

இறுதியாக எனது அன்பான கணவருக்கு நீங்கள் அல்லாஹ்வின் அருளில் இருந்து தூரமாவதை விட்டும் எச்சரிக்கை செய்கிறேன். மாறாக அல்லாஹ்வின் பால் ஒதுங்கி விடுமாறு கேட்கிறேன். அவனது அன்பின் பால் சாய்ந்துவிடுங்கள். அல்லாஹ்விடம் அஞ்சிக் கெஞ்சி துஆ கேடபவர்களின் துஆவை கேட்கவும் உங்களது துஆவுக்கு அல்லாஹ் பதில் அளிப்பான். நீங்கள் நம்பிக்கை இழந்திருக்கும் அவனது அருளில் உங்களுக்கு அருள் புரிவான். அவன் கூறுகிறான்,

(மேலும் (நபீயே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக,) நிச்சயமாக நான் , (அவர்களுக்கு) மிகச்சமீபமாகவே இருக்கிறேன். அழைப்பவரின் அழைப்புக்கு- அவர் என்னை அழைத்தால் நான் பதில் அழிப்பேன்., ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் எனக்கு பதில் அளிக்கவும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.(ஆல்பகரா,186)

எல்லாம் வல்ல அல்லாஹ் ஸாலிஹான பிள்ளைகளை அருளி, பெண் பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் நமக்கு கண் குளிர்ச்சியை தருவானாக!

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துஹூ

இப்படிக்கு உங்களது இஃலாஸான மனைவி.

மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
சுவனத்தென்றல்.காம்

0 கருத்துகள்: