கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலம் ஓராண்டு நீட்டிப்பு


தமிழ்நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதி முடிய மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் நீட்டிப்பு

தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதி முடிய மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படுகிறது. ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், அவற்றிற்கு உள்தாளினை அச்சடித்து ஒட்டவும், உள்தாளில் ஒருபக்கம் 2013–ம் ஆண்டிற்கான (12 மாதங்கள் அடங்கிய) கலங்களுடனும், மறுபக்கத்தில் 2014–ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையிலும் உள்தாளை அச்சடிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

முகவரி மாற்றம் உள்ளிட்ட இதர மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவுகள் மேற்கொள்ளவும் இணைப்பில் உள்ளவாறு ஒரு கோடி படிவங்களை அரசு அச்சகத்தில் அச்சடித்து, ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கவும், அவற்றின் அடிப்படையில் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பில் தேவையான பதிவு மாற்றங்களை செய்து கொடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மின்னணு ரேஷன் கார்டு

தமிழ்நாட்டில் தற்போது உடற்கூறு முறையிலான தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு செய்துள்ள கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் ஒரு முன்னோடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு (ஸ்மார்ட் கார்டு) ரேஷன் கார்டுகள் வழங்கவும், இது போல பிற மாவட்டங்களிலும் உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்புப் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்தப்பணி முழுமையாக முடிந்து தகவல் தொகுப்பினை பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது. அதனால் தான் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 1–ந் தேதிக்கு மேல் உள்தாள் ஒட்டும் பணி

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதிக்கு மேல் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைவரும் அவரவர் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டிக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கூட்ட நெரிசலைத்தடுக்க நடவடிக்கை

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உள்தாள் ஒட்டி ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும். தேவைப்பட்டால் இந்தப்பணிக்கு கால நீட்டிப்பு செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டிக்கொடுப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நாளை (26–ந் தேதி) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
http://www.dailythanthi.com/

0 கருத்துகள்: