கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

படைத்தவனை நோக்கி …!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை காலைக் கதிரவன் எழுப்பினான். சில மணித் துளிகளில் வியாபாரமும் பணிகளும் அவனை விரைவாக அழைத்துச் சென்றன. இலாப, நஷ்ட கணக்குகளுடன் மாலையில் களைப்புடன் வீடு திரும்பியவன், தொலைக்காட்சியில் சற்றுப் பொழுதைப் போக்கி விட்டு
 உறங்கச் சென்றான்.
அவன் வாழ்வில் ஒரு நாள் விடைபெற்றது. இதுதான் பெரும்பாலானோரின் வாழ்க்கை. ஒரு முஸ்லிமின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமா?! என்றால் நிச்சயமாக இல்லை.
தினமும் நடைபெறும் ஆன்மீக வியாபாரம்!
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரி (ரலி), நூல்: முஸ்லிம் 381)
முஸ்லிம் ஓர் இலட்சியவாதி. அவனுடைய வாழ்க்கை, படைத்தவனை நோக்கிய இலட்சியப் பயணமாக இருக்கும். அன்றாட வியாபாரத்தை விட அன்றாட ஆன்மீக வியாபாரமும் அதன் நன்மைகளுமே அவனுடைய குறிக்கோளாய் திகழும். மனிதன் மரணிக்கும் வரை அவனுக்கும், அவனைப் படைத்த அல்லாஹ்வுக்கும் இடையே நொடி தவறாமல் தினந்தோறும் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.
முஃமின்களே! கடுமையான வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்ற (அல்குர்ஆன் 61:10) வசனங்களும், முஃமின்களின் உயிர்களையும் பொருட்களையும் சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான் என்ற (அல் குர்ஆன் 9:111) வசனமும் அல்லாஹ்வுடன் நடைபெறும் ஆன்மீக வியாபாரத்திற்கு தகுந்த சான்றுகளாய் அமைந்துள்ளன.
அல்லாஹ்வுக்காக தன்னை அற்பணித்துக் கொள்ள விரும்புபவன் உலகியல் ரீதியான அனைத்து அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.வெளிப்படையான இணைவைப்புக் கடவுள்களிடமிருந்தும் ஷிர்க்கான கொள்கைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற முஸ்லிம் மறைந்திருக்கும் மனக் கடவுளுக்கு அடிமையாகிக் கிடக்கின்றான். இரட்கன் யார்? அல்லாஹ்வா? மனோஇச்சையா? என்பதை முடிவு செய்யாதவரை அவன் யாருக்கு அடிமை? என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.
(நபியே!)தன்னுடைய மனோ இச்சையை தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டவனை நீர் கண்டீரா? (அவன் வழிகெடுவதற்கு தகுதியானவன் என்று) அறிந்தே அவனை அல்லாஹ் அவனை வழிகேட்டில் ஆக்கி விட்டான். அவனது செவியின் மீதும் அவனது இதயத்தின் மீதும் முத்திரையிட்டுவிட்டான். அவனுடைய பார்வையின் மீது திரையையும் ஏற்படுத்தி விட்டான். அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யார்? எனவே நீங்கள் உணர்வு பெறவேண்டாமா? என்று (அல்குர்ஆன் 45:23) வசனம் கூறுகிறது.
மனோஇச்சையை பின்பற்றியவனை அல்லாஹ் ஒரு நாய்க்கு உவமையாகக் கூறுகிறான். அதனை விரட்டினாலும் நாக்கை தொங்க விடுகிறது. விரட்டாதுவிட்டாலும் நாக்கை தொங்க விட்டுக் கொள்கிறது (அல்குர்ஆன் 7:176) என்றும், மனோஇச்சையை பின்பற்றுபவனின் இதயங்கள் அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பி விடப்படும். அவனுடைய காரியங்கள் வரம்பு மீறியதாகவே அமையும். (அல்குர்ஆன் 18:28) என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
எனவே அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணிக்க நினைக்கும் ஒருவர் தன் உள்ளே குடிகொண்டிருக்கும் மனோ இச்சைக் கடவுளை முதலில் நிராகரிக்க வேண்டும். மனோ இச்சை ஷிர்க்கிலிருந்து விடுபட வேண்டும். அவ்வாறு விடுபட்டால் மட்டுமே உலக சக்திக்கும் கவர்ச்சிக்கும் அடிமைப் படாமல் தன்னைக் காத்துக் கொள்ளமுடியும். உலக இன்பங்கள் அனைத்தும் மனதின் மூலமாகத்தான் மனிதனுள் நுழைகின்றன. ‘உள்ளம் அல்லாஹ்வுக்காக’ என்றாகி விடும் போது உள்ளத்தினுள் நுழைய முடியாமல் வெறுமையாகி உலகம் தோற்று நிற்கும். ஒருவன் தன் உயிரையும் பொருளையும் வாழ்வையும் மரணத்தையும் அல்லாஹ்வுக்காக விற்று முடித்து விட்டதற்குப் பிறகு கவர்ச்சிகர உலகம் அவனிடம் வந்து எதனை வாங்கமுடியும்?!
உலகம் அது காசாகவோ, பணமாகவோ, பதவியாகவோ, பெண்ணாகவோ, அச்சுறுத்தலாகவோ, ஆசையாகவோ எந்த தோற்றத்தில் தோன்றினாலும் அதனை முறியடிக்கும் போதனையை நபி (ஸல்) அவர்கள் ஆழமாகப் போதித்தார்கள்.
யாருக்கு அடிமை?
பொற்காசின் அடிமையும், வெள்ளிக்காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்ப்பாக்கியவான் ஆவான். அவனுக்கு செல்வம் கிடைத்தால் திருப்தி அடைவான். செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபம் அடைவான். அவன் துர்பாக்கியவான் ஆகட்டும். அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லமால் தவிக்கட்டும்.
அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்திட தன் குதிரையின் கடிவாளத்தை கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதிபடிந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் படையின் முன்னணிக் காவல் அணியில் நியமிக்கப் பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான். பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்பு மின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு, அனுமதி தரப்படாது. அவன் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2887)
பணமும் பதவியும் இரு ஓநாய்கள்!
பசியுடன் திரியும் இரண்டு ஓணாய்கள் ஒரு ஆட்டைக் கண்டால் அதை எப்படி குதறிவிடுமோ அதைவிடவும் மோசமாக, பணத்தாசையும் பதவி மோகமும் கொண்டவன் கோரத்தனமாக நடந்து கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (கருத்து) (அறிவிப்பவர்: இப்னு கஃப் மாலிக் அல்அன்ஸாரி(ரலி), நூல்: திர்மிதி 2298)
இது போன்ற போதனைகளைச் சுமந்த நபித் தோழர்கள் சாமானியர்களாகவே வாழ்ந்தார்கள். ஆனால் சாதனையாளர்களாகத் திகழ்ந்தார்கள். உலக அழிவு நாள் வரை தோன்றும் மனித இனத்திற்கு முன்மாதிரிப் பயிற்சி பட்டறையானார்கள்.
அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களில் சிலவற்றை நினைவூட்டலுக்காக இங்கே காணலாம்.
தன்னை விற்றவர்!
ரோமாபுரியைச் சார்ந்த ஸுஹைப் இப்னு ஸினான் அர்ரூமி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்காவில் இருந்து மதீனாவிற்கு நான் ஹிஜ்ரத் (நாடு துறந்து) புறப்பட்டபோது, என்னை வழிமறித்த குரைஷி எதிரிகள், ஸுஹைபே! செல்வமற்றவராக எங்களிடம் வந்த நீர், செல்வத்துடன் இங்கிருந்து வெளியேறுகின்றீரா? அது நடக்காது! என்றனர். என்னுடைய செல்வங்களை உங்களிடம் ஒப்படைத்துவிட்டால் என்னை (அல்லாஹ்வின் பாதையில்) வெளியேற விட்டு விடுவீர்களா? என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சம்மதித்தனர். என்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மதீனா வந்தடைந்தேன். என்னைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அபூயஹ்யாவே! உன்னுடைய வியாபாரம் மிகவும் இலாபகரமானது! என்று மூன்று முறை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு முன்னர் யாரும் என் தகவலை தங்களுக்கு கொண்டு வரவில்லையே! ஜீப்ரீல் (அலை) அவர்கள்தான் நடந்தவைகளை உங்களுக்கு அறிவித்திருக்கவேண்டும் என்று ஸுஹைப் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடியவர்களாக தங்களையே விற்றவர்களும் மனிதர்களில் உள்ளனர்’ என்ற (அல்குர்ஆன் 2:207) வசனத்தை அல்லாஹ் இவர்கள் தொடர்பாகவே இறங்கிவைத்தான். (நூற்கள்: தப்ரானீ, ஹாகிம், பைஹகீ)
தன்னையே சல்லடையாக்கி
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பவர்களுடன் தாங்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை. இணைவைப்பவர்களுக்கு எதிரான போரில் அல்லாஹ் என்னை பங்கு பெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போராடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான் என்றார்கள். பின்பு உஹுதுப் போரின் போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணை வைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கு எதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கின்றேன் என்று கூறிவிட்டு, (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார்கள்.
சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரக் கண்டு, சஅத் பின் முஆதே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாசனையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன் என்று கூறினார்கள். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரே! அவர் செய்த போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை என்றார்கள்.
வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த என்பதுக்கும் மேற்பட்ட காயங்களை அவர் உடலில் நாங்கள் கண்டோம். மேலும் எதிரிகள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியை தவிர வேறெவரும் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது சகோதரி கூட அவரது விரல் (நுனி)களை வைத்துத்தான் அவரை அடையாளம் காணமுடிந்தது.
அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறை நம்பிக்கையாளர்களிடையே உள்ளனர். அவர்களில் சிலர், தம் இலட்சியமான மரணத்தை அடைந்து விட்டனர். அவர்களில் இன்னும் சிலர் (அதனை) எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் ஒரு போதும் மாறிவிடவில்லை என்ற (அல்குர்ஆன் 33:23) வசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும்தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.
நூல்: புகாரி 2805
வீரமரணத்தை தேடித் தந்த பாவமன்னிப்பு!
சலமா பின் அல்அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி போருக்காகப் புறப்பட்டோம். அப்(பயணத்தின்) போது, என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் பின்வரும் கவிதையைப் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் மட்டும் இல்லாவிட் டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம், தான தர்மம் செய்திருக்க மாட்டோம். தொழுதிருக்கவும் மாட்டோம். (இறைவா!) நாங்கள் உன் கருணையிலிருந்து தேவையற்றவர் அல்லர். (போர் முனையில் எதிரிகளை) நாங்கள் சந்திக்கும் போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்கள் மீது அமைதியைப் பொழிவாயாக!
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் ஆமிர் என்றார்கள். உம்முடைய இறைவன் உமக்கு மன்னிப்பளிப்பானாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்காக (போரில் தனிப்பட்ட முறையில்) அவரது பெயர் குறிப்பிட்டு பாவமன்னிப்பு வேண்டுவார்களேயானால், அவர் (அப்போரில்) வீரமரணம் அடையாமல் இருந்ததில்லை. ஆகவே, உமர் (ரலி) அவர்கள், தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு, அல்லாஹ்வின் தூதரே! ஆமிர் (நீண்ட நாள் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களைப் பயனடையச் செய்யக் கூடாதா? என்றார்கள்.
பிறகு நாங்கள் கைபர் சென்றடைந்ததும் கைபர்வாசிகளின் மன்னன் மர்ஹப் என்பவன் தனது வாளை மேலும் கீழுமாக அசைத்துக் கொண்டே, கைபருக்குத் தெரியும் நான் தான் மர்ஹப் என்று, (போருக்கு ஆயத்தமாய் என்றும்) முழு ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று. போர் மூண்டு கொழுந்துவிட்டு எரியும் போது, (சில நேரம் நான் ஈட்டியெறிவேன், சில நேரம் நான் வாள் வீசுவேன்) என்று பாடினான்.
அப்போது என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் முன்னே வந்து, கைபருக்குத் தெரியும் நான் ஆமிர் என்று, போர்த் துன்பங்களை எதிர்கொள்ளும் ஆயுதங்கள் தரித்த சரியான வீரன் என்று. என பாடினார். பிறகு இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது மர்ஹபின் வாள், ஆமிர் (ரலி) அவர்களின் கேடயத்தைத் தாக்கியது. ஆமிர்(ரலி) அவர்கள் (குனிந்து) அவனது கீழ் பகுதியில் (தமது வாளால்) வெட்ட முயன்றார்கள். ஆனால் அவரது வாள் அவரையே திருப்பித் தாக்கி அவரது கை நரம்புகளை துண்டித்துவிட்டது. அதிலேயே அவரது இறப்பும் ஏற்பட்டது.
அப்போது ஆமிரின் நற்செயல்கள் அழிந்து விட்டன. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று நபித் தோழர்களில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். உடனே நான் அழுது கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஆமிரின் நற்செயல்கள் அழிந்து விட்டனவா? என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்வாறு) யார் சொன்னது? என்றார்கள். தங்களின் தோழர்களில் சிலர் என்றேன். அதற்கவர்கள், இவ்வாறு சொன்னவர் பொய்யுரைத்து விட்டார். அவருக்கு அவரது நன்மை இரு முறை கிடைக்கும் என்று கூறினார்கள்.
போர்க்களச் சிங்கம்!
பிறகு கண் வலியுடன் இருந்த அலி (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவர) என்னைஅனுப்பினார்கள். (என்னை அனுப்புவதற்கு முன்) நான் (நாளை இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள் என்று கூறினார்கள்.
நான் அலி (ரலி) அவர்களிடம் சென்று கண் வலியுடனிருந்த அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தேன். அவர்களின் கண்களில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தார்கள். கண்கள் குணமடைந்தன. பிறகு அவர்களிடம் இஸ்லாமிய (சேனையின்) கொடியைக் கொடுத்தார்கள். கைபர் மன்னன் மர்ஹப் மீண்டும் புறப்பட்டு வந்து, முன்னர் பாடிய அதே கவிதையை பாடினான்.
அதற்கு அலி (ரலி) அவர்கள், என் தாயாரால் ஹைதர் (சிங்கம்) எனப் பெயர் சூட்டப் பட்டவன் நான். கடுந்தோற்றம் கொண்ட அடர்வனத்தின் சிங்கம் நான். சந்தர் எனும் பேரளவையால் அளப்பதைப் போன்று அவர்களைத் தாராளமாக அளந்திடுவேன். (எதிரிகள் பலரை வெட்டி வீழ்த்திடுவேன்) என்று பாடிக் கொண்டே, மர்ஹபின் தலையில் ஓங்கி அடித்து, அவனை வீழ்த்தினார்கள். பிறகு அலி (ரலி) அவர்களின் கரங்களாலேயே (கைபாஜீன்) வெற்றியும் கிடைத்தது. (நூல்: முஸ்லிம் 3695)
சொர்க்கத்தில் நபிகளாருடன்…!
அனஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ நேசித்தவர்களுடன் (மறுமையில்) நீ இருப்பாய்! என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய் என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் அவர்களை நேசித்த காரணத்தினால் (மறுமையில்) அவர்களுடன் நான் இருப்பேன் என்று நம்புகிறேன். (நூல்: புகாரி 3688)
- ஹவ்வா மைந்தன்
நன்றி:சமுதாய ஒற்றுமை

0 கருத்துகள்: