முதலில் வித்திலிருந்து மரம் வந்ததா? அல்லது மரத்திலிருந்து வித்து வந்ததா?” என்று பலரும் கிண்டளாகக் கேட்பதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள். உண்மையில் வித்து விருட்சமாகி, விருட்சத்தில் பூப் பூத்து, பூ காயாகி, காய் பழமாகி, பழத்திலிருந்து வித்துருவாகி, அவ்வித்து மீண்டும் விருட்சமாகி... இத்தொடர் கதைக்கு முடிவே இல்லை. இக்கதை அல்லாஹ் இப்பூவுலகைப் படைத்தது முதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.
நாம் அன்றாடம் பலவிதமான சுவைகளிலும் வித்தியாசமான வடிவங்களிலும் அழகுமிகு நிறங்களிலும் பார்த்ததும் கண்கைளக் கவர்ந்து உமிழ் நீரை வாய் நிறையச் சுரக்கச்செய்கின்ற பழங்களைக் காண்கின்றோம். அவற்றைப் புசிக்கவும் செய்கின்றோம். மனிதன் உட்பட அனேகமான உயிரினங்கள் பழங்களை உண்பதில் அளாதியான விருப்பம் காட்டுகின்றன. இதற்கு அவற்றில் காணப்படும் கவரும் தன்மையும் சுவையுமே காரணமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரினதும் உடலாரோக்கியத்தில் பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பழங்களில் இரும்புச் சத்துடன் பொஸ்பரஸ், கல்ஸியம் என்பனவோடு இன்னும் ஏராளமான ஊட்டச் சத்துக்களும் விட்டமின்களுக் அடங்கியுள்ளன.
பழங்களில் மனிதனுக்கு அதிக விருப்பமுள்ளதனால்தான் சுவனத்திலும் பல்வேறு பழவர்க்கங்களை எமக்குத்தர அல்லாஹ் ஏற்பாடுசெய்திருப்பதாகக்கூறி மனிதர்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான். “அதில் அவர்களுக்கு விதவிதமான கனிவர்க்கங்களுண்டு, அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.” (43:73, 36:57, 55:11)
சிலபோது நாம் பழங்களை சுவைக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ உட்கொண்டாலும் அவற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்கின்ற போசனைகள் மிகப் பெறுமதியானவை. அந்தவகையில்தான் அல்லாஹ் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான போசனைப் பதார்த்தங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு காலவரையறையையும் வைத்துள்ளான். எனவே வருடம் முழுதும் ஏதோவொரு வகையில் ஏதாவதொரு பழத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
காய்களின் முதுமைக்காலமே கனியாகும். இவை கனியாகும் காலத்தில் காயினுள் பல இரசாயன மாற்றங்கள் உண்டாகி அவை சுவை மிக்கனவாக மாறுகின்றன. சர்க்கரை அதிகமாக உள்ள பழங்கள் சுவை மிக்கனவாகவும் அமிலம் அதிகமாக உள்ள பழங்கள் புளிப்பானவையாகவும் காணப்படுகின்றன. அனேகமாக தோடம் பழத்தில் அமிலம், சர்க்கரையும் சமமாக உள்ளன. இதனால்தான் நாம் அதனைப் புளிப்பானதாகவும் இனிப்பானதாகவும் உணர்கின்றோம். அனைத்துப் பழங்களும் தமது காய்ப்பருவத்தில் புளிப்பானவையாகவே இருக்கின்றன. காரணம் அவை தம்முள் அதிகமான அமிலத்ததைக் கொண்டிருப்பதனாலாகும்.
நீங்கள் ஒரேவகையான இரு பழங்களில் வித்தியாசமான சுவையினை உணர்ந்திருப்பீர்கள். உதாரணமாக ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு மாம் பழங்கள் ஒரே சுவையைக் கொண்டவை அல்ல. அவற்றின் சுவையில் சிறியதோர் மாற்றமேனும் இருக்கும். ஏனெனில் அவற்றுக்குக் கிடைக்கும் சில சூழற் காரணிகளால் அவை வித்தியாசப் படுகின்றன. உதாரணமாக மண்ணின் வகை, கால நிலை, நீர், உரம் என்பன போன்ற சில துணைக் காரணிகளின் அடிப்படையிலாகும். இக்காரணிகளில் கூடல் குறைவு நிகழும் போது பழத்தில் காணப்படுகின்ற கூட்டுப்பொருட்களிலும் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. சர்க்கரை (Fructose)> ஒருவகை அமிலம், விட்டமின், மாப்பொருள் (Starch)> புரோட்டீன் மற்றும் செலுலோஸ் போன்ற கூட்டுப்பொருட்கள் அனைத்தும் ஒன்றாகக் களக்கப்பட்டு கனிகளிலும் வித்தியாசமான அளவுகளில் கூட்டுப்பொருட்கள் சேரும் போது இச் சுவை மாற்றத்தை உணரலாம்.
இதனை அல்லாஹ் அல்குர்ஆனிலே இவ்வாறு கூறுகின்றான். “பூமியில் அடுத்தடுத்து பல பகுதிகள் காணப்படுகின்றன. (தாவரங்களுக்கு) ஒரே வித நீர் புகட்டப்படுகின்றது. (அவ்வாறிருக்க) சிலவற்றை, சிலவற்றைவிடச் சுவையில் நாம் மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம்.” (13:4)
இதுபோன்ற அமைப்பு சுவனத்திலும் உள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். எனினும் அது துணைக் காரணிகளில் நிகழும் கூடல் குறைவினால் ஏற்படும் சுவை மாற்றமல்ல. இயல்பிலேயே வித்தியாசமான சுவைகளை வழங்கக்கூடிய விதத்தில் அல்லாஹ் சுவனத்தில் அப்பழங்களை அமைத்துள்ளான். “ஈமான்கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சுவனங்கள் உண்டு. அவற்றுக்குக் கீழ்; ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்கு ஒரு கனி உணவாக வழங்கப்படும்போதெல்லாம் “முன்பும் இதைத்தான் நாம் கொடுக்கப்பட்டோம்” என்று கூறுவார்கள். அது பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றினாலும் (ருசியில் மாறுபட்டவையாகும்).”(2:25)
பழங்களில் போசனைப் பதார்த்தங்கள் காணப்படுவது போலவே அவை பல்வேறு நோய்களுக்கான நிவாரணியாகவும் திகழ்கின்றன. உதாரணமாக இங்கு சிலதை அவதானிப்போம்.
மாதுளம் பழம் (Pomegranate) சமிபாட்டுக் கோளாருகளின்போது இதனை மருந்தாகப் பயன்படுத்துவர். இதன் பழச்சாறு இதயம், குடல், சிறுநீரகம் என்பன சீறாக இயங்கத் துணை புரிகின்றது. அத்தோடு இப்பழத்தில் குளுக்கோஸ் சக்தி அதிகம் இருப்பதால் உடல் சோர்வை உடனடியாகப் போக்கமுடியும்.
தக்காளிப்பழத்தில் மனிதனுக்குத் தேவையான A>C விட்டமின்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவை பல புற்றுநோய்களுக்கும் நிவாரணியாகத் திகழ்கின்றன.
அப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருகின்றது. அத்தோடு அப்பிள் சாறு குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் குணமாக்குகின்றது.
ஆரஞ்சுப் பழம் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் வலுவையும் தருகின்றது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இது மகிவும் நல்லது.
திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயைக் குணப்படுத்துகின்றது. சிறுநீர்த் தாரைகளில் உண்டாகும் கல்லைக் கரைக்கின்றது.
அன்னாசிப் பழம் இதயநோய்க்கு மிகவும் ஏற்றமானது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசிப் பழம் பயன்படுகின்றது.
பப்பாளிப் பழம் அஜீரணத்தைக் குணமாக்க சிறந்த மருந்தாகும். அத்தோடு தேன் கலந்து உண்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாய்ப்பாலும் அதிகம் சுரக்கும்.
வாழைப் பழம் அஜீரணத்தைப் போக்குவதோடு உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளியேற்றிவிடுகின்றது.
நெல்லிக்கனி இதயநோய்க்கு மிகவும் சிறந்தது. ஒரு நெல்லிக்கனியில் 4 அப்பிள்களுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இன்று வியாபார நோக்கில் துரிதமாகக் காய்களை கனியச் செய்வதற்கும் பல நாட்கள் பழுதடையாதிருப்பதற்காகவும் இப்போசாக்குகள் நிறைந்த பழங்களின் மீது இரசாயனப் பதார்த்தஙகள் தெளிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் உள்ள போசனைக் கூறுகள் அழிகப்பட்டு தோற்றத்தில் மிக அழகானவையாகக் காட்சியளிக்கும். இதனால் சிலபோது உடல் உபாதைகளே ஏற்படுகின்றன.
எனவே பழங்களை அதிகம் உண்பதனூடாக எமது உடலாரோக்கியத்தைப் பேன முடியும். கற்கும் பருவத்தில் அதிகம் பழங்கள் உண்பது சிறந்த ஞாபக சக்தியையும் தருகின்றது. பல்வேறு போசாக்குகளையும் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொண்டுள்ள இப்பழங்களை எமக்கு உணவாகத் தந்நதவன் வல்லவன் அல்லாஹ்வே! “அவனே உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிவித்து அதனைக்கொண்டு கனி வகைகளிலிருந்து உணவை வெளிப்படுத்தினான்.” (2:22)
வல்லவன் அல்லாஹ் அல்குர்ஆனிலே பழங்களைப் பற்றிக் கூறிவிட்டு அதனை மனிதன் உண்டு விட்டு சும்மா இருக்காது என்றும் அவனுக்கு நன்றியுடன் இருப்பதோடு இவை பற்றி ஆராயுமாறும் கூறுகின்றான். “இதில் சிந்தித்திது அறியும் மக்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன” (13:4) எனவே எமது ஆராய்ச்சிகளைத் தொடர்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)நன்றி:அலீ ஆலிஃப்.blogspot
0 கருத்துகள்:
கருத்துரையிடுக