மக்காவே சிறந்தது:
நபி(ஸல்) அவர்களது அடக்கஸ்தலம் மதீனாவிலிருப்பதால் மதீனாவே சிறந்தது என நினைக்கின்றனர் சிலர். மற்றும் சிலர் நபி(ஸல்) அவர்களது ரவ்ழா, அர்ஷை விடச் சிறந்தது என அச்சமற்றுப் பேசுகின்றனர்.
ஆனால் மதீனாவை விட மக்காவே சிறப்பால் உயர்ந்தது. மதீனா இரண்டாவது புனிதத் தலமாகும்.
அப்துல்லாஹ் இப்னு அதீ இப்னுல் ஹம்றா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்யும் போது, ‘நிச்சயமாக நீ அல்லாஹ்வின் பூமிகளில் சிறந்தது. அல்லாஹ்வின் பூமிகளில் அவனுக்கு விருப்பமான இடம். உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாவிட்டால் நான் (உன்னை விட்டும்) போயிருக்க மாட்டேன்!” எனக் கூறினார் கள். (திர்மிதீ 3925, இப்னுமாஜா 3108, அஹ்மத்)
எனவே மதீனாவை விட மக்கா சிறந்தது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை நபி(ஸல்) அவர்களது கப்றைக் காரணம் காட்டி மாற்றக் கூடாது. மக்காவில் புனித கஃபதுல்லாஹ் இருப்பதை மறந்து விடலாகாது.
மதீனா ஹரம்:-
மக்காவும், மதீனாவும் ‘ஹரமைன்’ இரண்டு புனிதத் தளங்கள் என அழைக்கப் படுகின்றன. ‘ஹரம்’ என்றால் தடுக்கப்பட்டது, புனிதமானது என்பன அர்த்தங்களாகும். ஹரம் எல்லையில் வேட்டையாடுவது, உயிர்களைக் கொல்வது, மரங்களை முறிப்பது போன்றவை தடுக்கப்பட்ட வையாகும்.
நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் கஃபாவைக் கட்டி விட்டு,
‘என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக!” (2:126) எனப் பிரார்த்தித்தார்கள். அதனை அல்லாஹ் அங்கீகரித்தான்.
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அவர் கள் அறிவிக்கிறார்கள்.
‘இப்றாஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமாக்கி அதற்காகப் பிரார்த்தனையும் புரிந்தார்கள். இப்றாஹீம் நபி மக்காவுக்காகப் பிரார்த்தித்தது போன்று மதீனாவைப் புனிதமாக்கி அதன் அளவையின் அபிவிருத்திக்காக நானும் பிரார்த்தித்தேன்!” எனக் கூறினார்கள்.
(பார்க்க: புகாரி 2129, முஸ்லிம் 454)
ஹரம் புனித பூமியெனும் போது அது மஸ்ஜிதுந்நபவீயை மட்டும் குறிக்காது. நபி(ஸல்) அவர்கள் மதீனா என்று நகரத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். இன்று மதீனா நகர் விஸ்தரிக்கப்பட்டு ஹரம் எல்லையைத் தாண்டியும் அது சென்று விட்டது. இருப்பினும் எல்லாத் திசைகளிலும் ஹரம் எல்லைகள் அடையாளமிடப்பட்டுள்ளன. அந்த எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பிரதேசங்களும் ஹரம் எனும் புனிதப் பிரதேசமாகும். நபி(ஸல்) அவர்கள் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட இடமனைத்தும் (ஹரம்) புனித இடமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
ஈமானின் ஒதுங்குதளம்:
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘பாம்பு தன் பொந்துக்குள் ஒதுங்கு வது போல் ஈமான் மதீனாவுக்குள் ஒதுங்கி விடும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 1876, முஸ்லிம் 1777)
மதீனாவில் இஸ்லாத்தின் சுடர் பிரகாசிக்கும் என்பதற்கும், உலகம் அழியும் காலம் வரை மதீனாவில் ஈமானிய ஜோதி பிரகாசித்துக்கொண்டிருக்கும் என்பதற்கும் இது ஆதாரமாக அமைகின்றது.
வெற்றிகொள்ளும் பூமி:
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘யத்ரீப்’ எனும் ஏனைய நகரங்களைச் சாப்பிட்டுவிடக் கூடிய இந்த (மதீனா) நகருக்கு (ஹிஜ்ரத்) செய்யுமாறு நான் ஏவப்பட்டேன்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 1871, முஸ்லிம் 488, 3419)
ஏனைய நகரங்களைச் சாப்பிடும் நகரம் என நபி(ஸல்) அவர்கள் அற்புதமான முன்னறிவிப்பைச் செய்தார்கள். இதைச் சொல்லும் போது மதீனாவில் உண்ண உணவு இருக்கவில்லை. முஸ்லிம்கள் மிக பலவீனமாக இருந்தனர். இந்த மதீனாவைத் தலைமையகமாகக் கொண்ட இஸ்லாமிய ஆட்சி வெற்றி வாகை சூடும். ஏனைய நகரங்களை இந்த மதீனா வெற்றிகொள்ளும். ஏனைய நாடுகளில் இருந்தெல்லாம் இந்த மதீனாவுக்கு கனீமத்தும், ஜிஸ்யாவும் கொண்டு வரப்படும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள், ‘மதீனா நகர் ஏனைய நகரங்களைச் சாப்பிட்டு விடும்!” எனக் கூறினார்கள். நபியவர்கள் கூறிய பிரகாரம் மதீனா அன்றைய ரோம – பாரசீக வல்லரசுகளையும் வெற்றி கொண்டது. ரோம – பாரசீக மன்னர்களின் பொக்கிஷங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறிய பிரகாரம் உமர்(ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் ரோம – பாரசீகச் செல்வங்கள் உமர்(ரலி) அவர்களால் மதீனாவில் வைத்துப் பங்கிடப்பட்டன.
மதீனாவில் பித்அத் செய்தல்:
பித்அத் செய்வது ஹராமாகும். அதனை மதீனாவில் செய்வது மிகப் பெரும் குற்றமாகும்.
அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘மதீனா என்பது புனித பூமியாகும். யார் அதில் மார்க்கத்தில் புதிய செயலை உருவாக்குகின்றாரோ அல்லது புதிய செயலைச் செய்பவருக்குப் புகலிடம் அளிக்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வுடைய, மலக்குகளுடைய, முழு மனிதர்களுடைய சாபம் உண்டாகும். அவனிடமிருந்து எந்தச் சாக்குப்போக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 1870, 3172, 6755)
இந்த ஹதீஸ் மதீனாவில் பித்அத் செய்தால் அல்லாஹ்வுடைய, மலக்குகளுடைய, மற்றும் மனிதர்களுடைய சாபமுண்டாகும் என்று கண்டிக்கின்றது. சிலர் மதீனா சென்று ‘நபியின் பெயரில் ஸலவாத்துக் கூறுகின்றோம்’ என்ற பெயரில் ஸலாதுன்னாரியா போன்ற பித்அத்தான, ஷிர்க்கான வாசகங்கள் அடங்கிய ஸலவாத்துகளை ஓதுகின்றனர். மற்றும் பல பித்அத்துகளை ஸியாரத்தின் போதும், ஏனைய இடங்களை ஸியாரத் செய்யும் போதும் செய்கின்றனர். சில உலமாக்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். சில இலட்சம் ரூபாய்களைச் செலவிட்டுப் புனித பூமிக்குச் சென்று அல்லாஹ்வின் சாபத்தைத் தேடிக் கொண்டு வரலாமா? என்பதை இத்தகையவர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.
பரகத் பொதிந்த பூமி:
மதீனா பரகத் பொதிந்த பூமியாகும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது, ‘யா அல்லாஹ்! எமது (மதீனாவின்) கனிகளில் அருள் புரிவாயாக! யா அல்லாஹ்! எமது மதீனாவில் அருள் புரிவாயாக! யா அல்லாஹ்! எமது ஸாஉ என்னும் அளவையிலும், முத்து எனும் அளவையிலும் அருள் புரிவாயாக!” என அவர்கள் துஆச் செய்தார்கள்.
(முஸ்லிம் 473, 3400, திர்மிதீ 3454,
இப்னுமாஜா 3329)
எனவே மதீனா அருள் பொருந்திய பூமியாகும்.
பாதுகாக்கப்பட்ட பூமி:
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘மதீனா நகருக்கு இரண்டு விதமான முக்கிய பாதுகாப்புகளை அல்லாஹ் வழங்கியுள்ளான். மதீனாவைச் சூழ மலக்குகள் பாதுகாப்புக்காக இருக்கின்றனர். அவர்கள் காலரா நோயையும், தஜ்ஜாலையும் உள்ளே நுழைய விட மாட்டார்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி1880, 7133, முஸ்லிம் 485, 3416)
கடந்த கால வரலாற்றை ஆராய்ந்தால் கொள்ளை நோய் எனப்படும் காலரா நோயால் பல இலட்சம் மக்கள் காவு கொள்ளப்பட்டுள்ளனர். உமர்(ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் அரேபியாவில் மிகப் பெரிய காலராத் தொற்று ஏற்பட்டது. இது குறித்து நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துமிருந்தார்கள். மூன்று தினங்களில் 70,000 முஸ்லிம்கள் மரணமடையும் அளவுக்கு சிரியாவில் காலரா நோய் பரவியது. எனினும் நபி(ஸல்) அவர்களது இந்த முன்னறிவிப்பின் பிரகாரம் 1430 ஆண்டுகள் தாண்டியும் மதீனாவைக் காலரா தொற்று தாக்கியதில்லை.
உலக அழிவின் போது வெளிவரும் தஜ்ஜாலும் மக்கா – மதீனாவுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்படுவான் என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த வகையில் மதீனா அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட பூமியாகத் திகழ்கின்றது.
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலஃபி
நன்றி:சமுதாய ஒற்றுமை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக