கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மாப்பிள்ளை கிளர்ச்சி!

வரலாற்று ஆய்வாளர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட கிளர்ச்சி மாப்பிள்ளை கிளர்ச்சி. தமிழகம் எங்கும் நாட்டுப்புறப்பாடல் ஒன்று இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அப்பாடல்,

"மலையாளக் கரைதனில் ரத்த ஆறு ஓட்டம், மாப்பிள்ளமார் செய்தது வீரமிக்க தியாகம்" என்கிற நாகூர் அனிபா பாடுகின்ற பாடலாகும்.

கேரளத்தில் மாப்பிள்ளைமார்கள் வறுமையில் வாழ்ந்தவர்கள். தென் மலபாரில் நம்பூதிரிகளும், ஜமீன்தார்களும், நில உரிமையாளர்களும் அநியாயக் குத்தகை வசூலித்தனர். குத்தகை தர மறுத்தவர்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் ஜமீன்தார்கள் மற்றும் நிலப் பிரபுக்களுக்கும் மாப்பிள்ளைமார்களுக்குமிடையே குத்தகை, கூலிப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது.

இந்தக் கலவரத்தை அடக்க எறநாடு, வள்ளுவநாடு, பட்டாம்பி பகுதிகளில் ஆங்கிலேய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மாப்பிள்ளைமார்கள் ஜாமீன்தொகை கட்டவேண்டும் என நிர்பந்தம் செய்தது. ஆங்கிலேய அரசு விதித்த ஜாமீன்தொகை கட்டமறுத்த மாப்பிள்ளைமார்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் மாப்பிள்ளைமார் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரத்திற்கான வித்து தூவப்பட்டது.  இந்நிலையில் மாப்பிள்ளைமார்கள் சார்பாக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் மூலம் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆங்கிலேய அரசு அந்தப் பிரசுரங்களுக்கு தடை விதித்தது.

கேரள முஸ்லிம்கள், முஸ்லிம் மத குருமார்களை(அஜரத்) முஸ்லியார் என அழைப்பது வழக்கம். முஸ்லியார்கள் விடுதலைப்போராட்டத்திற்காக பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் மூலம் முஸ்லிம்களிடையே சுதந்திரதாகத்தை ஏற்படுத்தினர். மேலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு இரகசிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார்கள். அப்போது ஆங்கிலேய அரசு ஒரு யுக்தியை கைக்கொண்டது. ஆப்கானிஸ்தான் அமீர் இந்தியாவின் மீது படையெடுக்கப்போவதாகவும், அதற்கான ஆயுதங்கள் பள்ளிவாசல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி கீழகப் பள்ளியை உடைத்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் அப்பாவி மூன்று பேரை கைது செய்தனர். இதனால் கலவரம் வெடித்தது. அதன் பின்னர் கிலாபத் இயக்கம் துவக்கப்பட்டது.

ஆலி முஸ்லியார்

ஆங்கிலேயர் மலபாரைக் கைப்பற்றியவுடன் மலபாரின் முஸ்லிம் மார்க்க மேதைகள் மலபார் பகுதியை  "தாருல் ஹர்ப்" என்று அரபியில் கூறும் "போராடும் பகுதி" என்று பத்வா என்னும் மார்க்கத் தீரப்பு வழங்கினர். மாம்பரம் செய்யிது அலவித் தங்ஙள் மற்றும் அவரது மகன் செய்யிது பைசல் ஆகியோர் வெளியிட்ட பத்வாக்களான ஷப் அல் பத்ர் மற்றும் அல் உமர் ஆகியவை தாருல் இஸ்லாம் என்றும் இஸ்லாமிய பகுதி ஆக்கிரமிக்கப்பட்டால், அந்நிலத்தை காக்க எதிரிகளை எதிர்த்து போராட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்றும் பரீக்குட்டி முசலியார் வழங்கிய தர்ஜுமா முஹம்மத் அல்முமீன் என்ற பத்வாவில், எவர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடுகின்றாரோ அவருக்கு சுவனம் சன்மானமாக இறைவனால் வழங்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்தத் தீர்ப்புகளால் அச்சமடைந்த ஆங்கிலேயர்கள் அந்த பத்வாக்களைத் தடை செய்தனர். மேலும் அந்த பத்வாக்களை யார் வைத்திருந்தாலும் அவற்றை யார் பரப்பினாலும் அவர்களுக்கு எந்தவித விசாரணையுமின்றி 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்று 1921 ஆம் ஆண்டு மெட்ராஸ் கெஜட்டில் வெளியிட்டனர்.

பத்வாவிற்கு ஆதரவளித்த செருசேரி அஹமது குட்டி முசலியார் மற்றும் அப்துல் ரஹ்மான் முசலியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் சிறையில் மாப்பிள்ளாக்கள்

கேரளாவில் மலபார் என்றழைக்கப்படும் மலப்புரம் பகுதியில் செய்யது அலி சிகாப்தீன் என்பவரின் மகனாக பனங்காடு செய்யது உசைன் தங்ஙள் பிறந்தார். இவர் மலப்புரத்தில் மார்க்க கல்வி பயின்று திரூரங்காடி மற்றும் மலப்புரத்தின் காஜியாக-நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது முஸ்லிம்களின் கடமை என்று பத்வா வழங்கினார். இதனால் ஆங்கிலேயர்கள் இவரை நாடுகடத்தினர். 1852 ஆம் ஆண்டு கலங்குட்டி ஹசன் தலைமையில் நடைபெற்ற போரில் பங்கு கொண்ட பனங்காடு செய்யது உசைன் நேரடியாக போர்களத்தில் குதித்தார். இதனால் ஆங்கிலேயர் இவர் மீது வழக்கு தொடர்ந்து வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக அடைத்து இறுதிவரை சிறையிலேயே காலம் கழித்தார்.

பெரும் செல்வச் செழிப்பு குடும்பத்தில் பிறந்தவரும், மார்க்க அறிஞருமான ஆலி முஸ்லியார் தலைமையில் கேரளாவில் தனி ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டது. இதற்காக தனிக்கொடி உருவாக்கப்பட்டு கிலாபத் ராஜ்ஜியமாக உருவாக்கப்பட்டது. தனிக்கொடி, தனி நாணயம் என ஆலி முஸ்லியாரின் அரசாங்கமே உருவாகியது. இதில் 22 ராஜ்ஜியங்கள் ஆலி முஸ்லியார் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டன.  மலப்புரம், பொன்னானி, திரூரங்காடி, சாசெரி, பெரிந்தள்மன்னா ஆகியன ஆலி முஸ்லியார் கட்டுப்பாட்டில் வந்தன. ஆலி முஸ்லியார் தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்க்க தனி இராணுவம் அமைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஆங்கிலேயர்கள் ஆலி முஸ்லியார் ராஜ்ஜியத்தை உடைக்க பல்வேறு யுக்திகளை கையாண்டனர்.

ஆலி முஸ்லியாரிடம் பலமுறை மோதியதில்  தோல்வியை பரிசாகப்பெற்றார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் நயவஞ்சகமாக இதனை மதக்கலவரமாக மாற்ற முயற்சி செய்தனர். தொடர்ந்து இந்துக்களுக்கும்-முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்துவதில் ஆங்கிலேயர் வெற்றிபெற்றனர். இதனால் கிலாபத் இயக்கத்திலிருந்து இந்துக்கள் வெளியேறி ஆலி முஸ்லியாருக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனை தடுத்து நிறுத்த ராஜாஜியும், யாகூப் ஹாசனும் கேரளா விரைந்தனர். ஆனால் ஆங்கிலேய அரசு அதற்கு தடை விதித்தது. ஆலி முஸ்லியார் இராணுவத்தை அடக்க உடனடியாக "மாப்பிள்ளை அவுட்ரேஜ் சட்டம" என்றும் "மாப்பிள்ளா கத்திச்சட்டம்" என்ற இரு சட்டங்களை ஆங்கிலேய அரசு அமல் படுத்தியது.

இச்சட்டத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. பள்ளிவாசல்களில் இருந்து முஸ்லிம்கள் கொத்து, கொத்தாக கொலை செய்யப்பட்டனர். இதனால் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இருபது ஆயிரம் பேர் நாடு கடத்தப்பட்டனர்.

மாப்பிள்ளமார்களின் கிளர்ச்சியின்போது பட்டாம்பி, பொக்காத்தூர், சொரனூர் பகுதிகளில் உள்ள மாப்பிள்ளமார்கள் திரூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த கூட்ஸ் ரயிலி கொத்து கொத்தாக மூட்டைகள் போன்று அடைத்து கோயமுத்தூருக்கு அனுப்ப பட்டனர். ரயிலின் வேகம், கூட்ட நெரிசல், பசி, தூக்கமின்மை, மூச்சு திணறல் போன்றவற்றால் வரும் வழியிலேயே ஏராளமான மாப்பிள்ளமார்கள் ரயிலினுள்ளேயே இறந்தனர்.

சோகத்தை சுமந்து வந்த அந்த கூட்ஸ் ரயிலின் கதவுகள் கோயமுத்தூரில் திறக்கப்பட்டபோது ரத்த வாடைகளும், பிணங்களும் கொத்து, கொத்தாக வெளியே வந்து விழுந்தன. பலர் உயிருக்கு போராடினார்கள். இறந்தவர்கள் கோயமுத்தூர் ரயில்வே நிலையம் அருகே இருந்த பள்ளிவாசலிலும், திருச்சியிலும் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டனர். திருச்சி காஜாமலை கபர்ஸ்தானில் சையது முர்துஸா சாகிபின் தலைமையில் அடக்கம் செய்யப்பட்டது. ஆலி முஸ்லியார் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

ஆதார நூல்கள் :

தியாகத்தின் நிறம் பச்சை - பேராசிரியர் அப்துல் சமது, யுனிவர்சல் பப்ளிசர்ஸ், சென்னை
விடியல் வெள்ளி மாத இதழ் - ஆகஸ்ட் 2013 பக்கம் 28
மறுக்கப்படும் உண்மைகளும், மறைக்கப்பட்ட வரலாறும் - மக்கள் தாரகை மாத இதழ் பக்கம்16, சென்னை.
மறைக்கப்பட்ட வரலாறும் மறுக்கப்படும் உண்மைகளும் - அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி
புகைப்படம் : ஆலி முஸ்லியார்

தொகுப்பு: வைகை அனிஷ், 9715795795​

0 கருத்துகள்: