கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை.


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 10 ஆண்டுளுக்கும் மேலாக நன்னடத்தையுடன் விளங்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.

முசாஃபர் நகரில் ஆய்வு: உத்தர பிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் தாய் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நால்வர் குழு கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை இக் குழுவினர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியது:

"முசாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறித்து உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அந்த மாநில சிறுபான்மையினர் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆசம் கான் ஆகியோரிடம் விளக்கினோம். நாங்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சம் ஆக உயர்த்தவும் காணாமல் போனவர்களை கலவரத்தில் உயிரிழந்தவர்களாகக் கருதி அவர்களின் அடுத்த வாரிசுக்கு ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அகிலேஷ் கூறினார். மேலும், முகாம்களில் இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

100 வீடுகள் திட்டம்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்த வசிப்பிடம் தேவை என்பதை நாங்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்தோம். இதையடுத்து, "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை' சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு 300 சதுர அடி காலி இடத்துடன் கூடிய 400 சதுர அடியில் வீடு கட்டித் தர முடிவு செய்துள்ளோம். இத் திட்டத்தைச் செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உத்தர பிரதேச அரசு கூறியுள்ளது. கலவரம் பாதித்த பகுதிகளில் இன்னும் பதற்றம் குறையவில்லை.

ஆகவே, முசாஃபர் நகர், ஷாம்லி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துணைத் தலைவர் (டிஐஜி) தலைமையில் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தர பிரதேச முதல்வரை கேட்டுக் கொண்டோம்' என்றார்.

ராஜீவ் கொலையாளிகள் விவகாரம்: தமிழகத்தில் ராஜீவ் கொலையாளிகள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீடித்துவரும் சர்ச்சை குறித்து கேட்டதற்கு ஜவாஹிருல்லா அளித்த பதில்:

"முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்துவருகிறது. உச்ச நீதிமன்றம்கூட, காலதாமதமாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்படும் அடிப்படையில் தூக்கு தண்டனை குறைக்கப்படுவதாகத் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. அதை வரவேற்கிறோம்.

ராஜீவ் கொலை வழக்கில் மூவரையும் சேர்த்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஞ்சிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ள நடவடிக்கை, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது. அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும்,கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ள அபு தாஹிரை விடுதலை செய்ய வேண்டும். 17 வயதில் சிறை சென்ற அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். இதுபோன்ற பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் ஜவாஹிருல்லா

0 கருத்துகள்: