கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

விழி : உங்கள் பார்வைக்கு!

சமூகத்தின் புற்று நோயாக மாறிக் கொண்டிருக்கும்  மது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விழி குறித்து வாசகர்களின் பார்வைக்காக...

விழி என்பது என்ன ?

விழி தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு இயக்கமாகும்.

நம் சமூகத்தின்  அறிவுஜீவிகள், அறிஞர்கள், படித்தவர்கள் எனப்படும் சிவில் சொசைட்டியினர் இது குறித்து மௌனம் சாதிக்காமல் குரலெழுப்பி, மதுவால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்  இளைஞர்களையும் பெண்களையும் திரட்டி அரசியல் கட்சிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வைக்கும் அழுத்தம் தரவேண்டும் என்பதே விழியின் நோக்கம்.

ஏன் மதுவிலக்கு தேவை ?

1. இன்று மது நம் சமூகத்தில்  ஒரு சமூக, பொருளாதார, அரசியல், உடல்நல, மனநலப் பிரச்சினையாகும். உலக சுகாதார நிறுவனம் மதுவை விஷம் என்றும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துடையது என்றும் குற்றங்களுக்குத் தூண்டக்கூடியது என்றும் அறிவியல் ரீதியாக வரையறுத்திருக்கிறது.

2. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை மது அருந்தியவர்களால் நிகழ்பவை. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சாலை விபத்துகள் 70 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களைச் செய்வோரில் பெரும்பாலோர் மது போதையில் அவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

3. சென்னை மருத்துவக் கல்லூரி அண்மையில் நடத்திய ஆய்வில் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 11 சதவிகிதம் பேர் மதுப் பழக்கத்தில் இருப்பது தெரிய வந்தள்ளது. இப்போது 11 வயதிலேயே மது குடிக்கத் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மது குடிப்பது தீங்கு என்றும் தவறு என்றும் இருந்த மனநிலை ஊடகங்களால், குறிப்பாக திரைப்படங்களால் மாற்றப்பட்டு வருகிறது. திரையில் கதாநாயகன் குடிப்பதிலிருந்து தொடங்கி நிஜ வாழ்வில் கல்யாண வீட்டில் குடி - விருந்து நடத்துவது வரை எல்லாம் சகஜமாகவும் இயல்பானதாகவும் கருதும் ஆபத்தான மனநிலை சமூகத்தில் பரவியுள்ளது. மது குடிப்பதால் ஏற்படும் உடல்நலிவினால் ஈரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன. மிக இளம் வயதிலேயே கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாக பலர் ஆக்கப்படுகின்றனர்.

4. வரும் ஆண்டில் தமிழக அரசுக்கு மது வரி வருவாய் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள் எதிர்பார்க்கப்படுவதாக சட்டப் பேரவையில் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி மொத்த மதுவிற்பனை அளவு 50 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்  இருக்கும். இந்தப் பணத்தை தருவதற்கு சராசரியாக தினசரி 70 லட்சம் முதல் ஒரு கோடி தமிழர்கள் குடிக்கிறார்கள். இதே ரீதியில் சென்றால் மிக விரைவில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மது அடிமையேனும் உருவாகி நம் அனைவர் குடும்ப வாழ்க்கையையும் சிதைக்கும் நிலையே ஏற்படும்.

5. ஏற்கனவே இரு தலைமுறைகளுக்கும் மேலாக நாம் கணிசமான இளைஞர்களை மது அடிமைத்தனத்தால் இழந்திருக்கிறோம். விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை செயல்திறனுடைய தொழிலாளர்களாகவும், சமூக மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான இயக்கங்களில் ஆக்கப்பூர்வமான பணியாற்றக் கூடிய தொண்டர்களாகவும், கல்வி , கலை, அறிவியல் துறைகளில் அறிஞர்களாகவும் உருவாக வேண்டிய இவர்கள் மதுவால் வீணாகியுள்ளனர். நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களை உற்றுப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். வரும் ஆண்டுகளில் இதே நிலை நீடித்தால் நம் சமூகம் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அழுகிச் சாகடிக்கும் நோயில் இறந்த சமூகமாகிவிடும்.

விழி இதற்காக என்ன செய்யப் போகிறது ?

1. அவரவர் பகுதிகளில் தங்களுக்கு அன்றாடம்  தொல்லை தரும் மதுக்கடைகளை சட்டப்படி அகற்ற  அந்தப் பகுதி மக்கள் முன்னால் இருக்கும் சட்ட வழிமுறைகளைப் பிரசாரம் செய்யும்.

2. மகளிர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழியின் பிரசாரக் குழு பிரசாரம் செய்யும்.

3. நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அனைத்துக் கட்சிகளும் மதுக் கடைகளை மூடுவது பற்றிய தங்கள் கருத்தை நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்று ஒவ்வொரு தொகுதியிலும் வற்புறுத்தப்படும்.

4. தேர்தலில் நியாயமான முறையில் வாக்களிக்காமல் மக்களை தடுக்க பணம், பரிசுப் பொருட்கள் மட்டுமன்றி, மதுவும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவதால், தேர்தல் அறிவிப்பு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எல்லா மதுக்கடைகளையும் மூடி வைக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையமும் அரசும் உத்தரவிட வேண்டுமென்று வற்புறுத்துவோம். மதுவுக்கு எதிரான கருத்தை தெரிவிக்கும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை தாங்களும் வலியுறுத்த வேண்டுமென்று கோருகிறோம்.

5. மதுக் கடைகளை மூடுவது பற்றி மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்புக்கு (ரெஃபரெண்டம்) ஏற்பாடு செய்வோம். மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.

6. மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவர்கள், வணிகர்கள் என்று பல்வேறு பிரிவினரிடமும் மதுவிலக்கை ஆதரித்துக் கையெழுத்து இயக்கம் நடத்துவோம்.

விழி எப்படி இவற்றைச் செய்யும் ?

தனியே யாரும் எதையும் செய்ய முடியாது. எல்லா மக்களும் அவரவரால் இயன்றதை செய்வதன் வாயிலாகவே இதைச் செய்ய முடியும். விழியின் இந்த பிரசார இயக்கத்தில் ஏற்கனவே களத்தில் இயங்கி வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, பாடம் எனப் பல்வேறு சமூக இயக்கங்களும், பல துறை ஆர்வலர்களும் உடன் உழைக்கின்றனர்.

சாதி, மதம், மொழி, பால், இனம், வர்க்கம் என்று எந்த வேறுபாடுமின்றி நம் மக்களை அழித்து வரும் மது வணிகத்துக்கு எதிராக ஒற்றைக் குரலாக ஒலித்து பூரண மது விலக்கை செயல்படுத்தச் செய்வோம்.

விழி தொடர்புக்கு:

ஞாநி, 
ஒருங்கிணைப்பாளர்
39, அழகிரிசாமி சாலை, 
கலைஞர் கருணாநிதி நகர், 
சென்னை - 78
மின்னஞ்சல்: vizhitamilnadu@gmail.com

0 கருத்துகள்: