கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பெற்றோர்களின் சிந்தனைக்கு...!

சென்னை, பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது, செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி என்ற 39 வயது ஆசிரியையை அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்று வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நாம் பெற வேண்டிய பாடங்களும், படிப்பினைகளும் நிறைய உள்ளன. இந்த கொலைக்குக் காரணம் என்ன என்று அந்த மாணவனிடம் போலீஸார் விசாரித்த போது, அந்த மாணவன் அளித்த வாக்குமூலம் நம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

படம் பார்த்து கொலை செய்தேன்:

அக்னிபாத் என்ற படம் பார்த்தேன். அதில் வரும் சம்பவங்களைப்போல அதைப் பார்த்துதான் ஆசிரியரைக் கொலை செய்தேன் என்று அந்த மாணவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

15 வயது மாணவனுடைய மனதில் இத்தகைய கொடூரமான வக்கிரபுத்தியை ஊட்டக்கூடிய மகத்தான(?) பணியை இந்த திரைப்படங்கள் செய்து வருகின்றன என்றால் இந்த நாடு எத்தகைய கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையும் இந்த நிலை முத்திப் போகுமேயானால் நாம் அடிக்கடி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நடப்பதாக செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கின்றோமே! ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி மாணவன் கைது. பல பேரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி மாணவன் சிக்கினான். இது போன்ற செய்திகள் நமது தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்து விடும்.

அதன் பிறகு சமூகவிரோதிகளுக்கும், கொள்ளைக் கும்பல்களுக்கும் பயந்து வாழும் நிலைமாறி, எந்த மாணவன் கையில் கத்தியுள்ளதோ? எந்த மாணவன் கையில் துப்பாக்கி உள்ளதோ? என பள்ளி ஆசிரியர்கள் உள்பட பொதுமக்களும் பயந்து சாகும் நிலைக்கு ஆளாக்கப்படலாம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்த கேடுக்கெட்ட திரைப்படத் துறையை ஒழித்தால் தான் இது போன்ற வக்கிர எண்ணங்களும் வன்முறைச் சம்பவங்களும் நிகழாமலும் நம்முடைய இளைய தலைமுறையை இது போன்ற பேராபத்திலிருந்தும் நாம் பாதுகாக்க முடியும்.

திரைப்பட மோகத்தின் உச்சம்: எந்த அளவிற்கு திரைப்பட மோகம் மக்கள் மத்தியில் தலை விரித்தாடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று பகர்கின்றது.இந்தக் கொலை சம்பவத்தை இவ்வளவு சீரியஸாக ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டு செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி சேனல்களையும் திருப்பிப் பார்த்தால் இந்த கொலை சம்பவத்தைப் பற்றி அவர்கள் செய்தி சொல்லும் போதும் அதைப்பற்றி எழுதும்போதும் கூட ஒய் திஸ் கொலை வெறி? ஏன் இந்த கொலை வெறி? என்று ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளை வைத்துத் தான் செய்தி சொல்கின்றார்கள் என்றால் ஒரு துக்ககரமான ஒரு செய்தியைக் கூட இவர்களை சினிமா எந்த அளவிற்கு சிந்திக்க விடாமல் தடுத்து இவர்களது மூளைக்கு மூடி போட்டுள்ளது என்று நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

பெற்றேர்களே உஷார்:

இதுபோன்ற சம்பவங்களில் நாம் பெற வேண்டிய அடுத்த படிப்பினை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஒழுங்காகப் பேணி வளர்க்க வேண்டும் என்பது தான். இதுபோன்ற வன்முறையைத் தூண்டக்கூடிய படங்களையும் ஆபாசப் படங்களையும் குடும்ப சகிதம் பார்த்து அனைவரும் பரவசப்பட்டு(?) இருக்கும்போது, இது போன்ற காரியங்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்தால் என்ன? என்ற ஒரு உந்துதல் நமது குழந்தைகள் மனதில் வந்து விடுகின்றது.நம்முடைய பெற்றோர்களுடன் இணைந்து இருந்து பார்த்த,ரசித்த அவர்கள் ஆமோதித்த அவர்கள் கைதட்டி வரவேற்ற இதுபோன்ற வன்முறைகளையும் ஆபாசங்களையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்தால் தவறில்லை என்று நமது குழந்தையின் உள்ளத்தில் பதியுமானால் நாளை நமக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம்.

பெற்றோர்கள் கொடுக்கும் டார்ச்சர் தாங்கமுடியாமல் பெற்றோர்களையே கொலை செய்வது போல ஒரு அழகிய(?) திரைக்கதை வசனத்துடன் கூடிய ஒரு சினிமாவை பெற்றோர் சகிதம் அமர்;ந்து ரசித்துப் பார்க்கும் ஒரு மாணவன், நம்முடைய பெற்றோர் இதுபோல டார்ச்சர் செய்தால் இந்த படத்தில் தனது பெற்றோரை கிளைமாக்ஸ் காட்சியில் கொலை செய்யும் மகனைப்போல நமது பெற்றோரையும் தீர்த்துக் கட்டி விட்டு இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை செய்து காட்டி விடலாம் என்று முடிவெடுத்தால் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியைக்கு வந்த கதிதான் சினிமா பார்க்க வைத்து தங்களது குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வது கூடாது:

அடுத்து, இந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய படிப்பினை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் செய்வது கூடாது என்பதாகும். இப்பொழுது உள்ள கால சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஏதேனும் ஒரு பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்து விட்டால் அந்தக் குழந்தைகளின் பாடு பரிதாபம் தான். ஏன் நீ மதிப்பெண்கள் குறைவாக வாங்கினாய் என்று அந்தக் குழந்தைகளை பெற்றோர்கள் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஏதோ ஐந்து மதிப்பெண்கள் குறைந்து விட்டால் உலகமே அழிந்து விட்டது போல அந்தக் குழந்தைகளை போட்டு பின்னி எடுக்கக் கூடிய பெற்றோர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

ஒரு பக்கம் இப்படி குழந்தைகளை பெற்றோர்கள் அடித்து துன்புறுத்தி அவர்களுக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்போது அவர்கள் இதற்கான தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். துடிக்கின்றனர்.

மறுபக்கம் சரியாகப் படிக்காவிட்டாலோ,அல்லது மதிப்பெண்கள் குறைந்து விட்டாலோ நீ ஏன் சரியாக படிக்கவில்லை? ஏன் மதிப்பெண் குறைத்து வாங்கியுள்ளாய்? என்று ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் அவர்களை கேட்கும் போது அவர்களுக்கு மன அழுத்தம் இன்னும் அதிகமாகின்றது.

வீட்டிற்குப் போனாலும் அடித்து துவைக்கின்றார்கள். பள்ளிக்கு வந்தாலும் பின்னி எடுக்கிறார்கள் என்று உணரும் மாணவன் மன அழுத்தத்தின் உச்சிக்கு சென்றால் என்ன நடக்கும்?

நடக்கக்கூடாதெல்லாம் நடக்கும். அவன் பள்ளிக்கும் செல்ல முடியாமல், வீட்டிற்கும் செல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானால் வேறுவழியின்றி அவன் கத்தி விற்கும் கடைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான் உருவாக்குகின்றார்கள்.அதற்கு வாழ்வியல்(?) வழிகாட்டும் காரணியாக இந்த கேடுகெட்ட சினிமாக்கள் காரணமாக அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரவணைப்பதோடு ஆசிரியர்களும் அவர்களை ஊக்குவிப்பதோடு, வன்முறைகளையும் ஆபாசங்களையும் தூண்டும் கேடுகெட்ட சினிமாக்களையும் மெகா சீரியல்களையும் விட்டு மக்கள் வெளியேற வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயமும் நாடும் உருப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவார் [அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) புகாரி 893]
நன்றி:http://www.tntjpno.com/

0 கருத்துகள்: