கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இட்டுக்கட்டுவோரை நம்பாதீர்கள்

இன்று முஸ்லிம்களிடையே பரவலான ஒரு நோய் உள்ளது. அது தான் இட்டுக்கட்டுக்களை அப்படியே நம்பிவிடுவது. இன்று சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு ஹதீஸில் வரக் கூடிய விடயங்களில்
தமக்கு சார்பானதை மட்டும் கூறி மற்ற விடயங்களை மறைக்கின்றார். அதை அப்படியே ஒரு கூட்டம் நம்பி அதற்காக சண்டையிடுதல் சவால் விடுதல் குழப்பங்களை உண்டு பண்ணுதல் போன்ற விடயங்களைச் செய்கின்றனர். இது தக்லீத் என அழைக்கப்படுகிறது. ஒரு விடயத்தை தீர விசாரிக்காமல் அப்படியே நம்புவது தனி மனித வழிபாடாக உள்ளது. அதே போன்று ஒருவர் ஒரு விடயத்தை கேள்விப்பட்டு அது உண்மையா என்பதை அறிவதற்காக தீரவிசாரித்து பலரை சந்தித்து கேட்டு பல சான்றுகளை தானே பார்த்து ஒரு முடிவை எடுப்பதை இஜ்திகாத் என்று சொல்லப்படும். இந்த விடயங்கள் சம்பந்தமாக இஸ்லாம் எமக்கு கற்றுத்தரும் சில விடயங்களை நோக்குவோம்.

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

பனூ முஸ்தலக் போர் நடந்து முடிந்திருந்த நேரம் அது. பனூ முஸ்தலக் குலத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உவந்தெடுத்து, தழுவிக் கொண்டிருந்த நேரம். அவ்வாறு தழுவிக் கொண்டவர்களின் தலைவரான அல் ஹாரித் என்பவரிடம், 'நீங்கள் உங்களது பகுதிக்குச் சென்று விடுங்கள், பின்பு ஒரு நாள் உங்களிடம் ஜகாத் பொருளை வசூல் செய்வதற்காக ஒருவரை அனுப்பி வைக்கின்றேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அனுப்பி வைத்தார்கள்.

சில காலங்கள் கழித்து அல் வலீத் பின் உக்பா (ரலி) என்ற நபித்தோழரை, இந்த பனூ ஹாரிதாக்களிடம் சென்று ஜகாத் பொருட்களைப் பெற்று வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள், வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, பனூ ஹாரிதாக்கள் மதீனாவைத் தாக்கும் எண்ணத்துடன் படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அவர், அதனைப் பற்றி தீர ஆய்வு செய்வோம் என்ற நிலையை எடுக்காமல், பயத்துடன் மதீனாவிற்கு வந்து விட்ட அவர், பனூ ஹாரிதாக்கள் ஜகாத் பொருட்களைக் கொடுக்க மறுத்து விட்டதுடன், தன்னைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி விடுகின்றார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுங்கோபங் கொண்டவர்களாக, பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களுக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் இறங்குவதற்காக, மிகப் பெரிய முஸ்லிம் படை ஒன்றையும் திரட்டி விடுகின்றார்கள். இப்பொழுது இரண்டு படைகளும் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் சந்திக்கக் காத்திருக்கின்றன.

இப்பொழுது அல் ஹாரிதா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப் பட்டார்கள். ஹாரிதாவைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

ஹாரிதாவே.. நீங்கள் ஏன் ஜகாத் கொடுக்க மறுத்து விட்டீர்கள்?இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எங்களிடம் ஜகாத் பொருட்களை வசூல் செய்வதற்கென்று யாரும் உங்களிடம் இருந்து வரவில்லை. எனவே, அதனைக் கொடுப்பதற்காகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் தான் மேற்கண்ட வசனத்தை இறைவன் இறக்கி அருளினான் :முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

அல் ஹாரித் (ரலி) அவர்களிடம் இருக்கின்ற நியாயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி அறிவுறுத்துவதோடு, முன்பின் ஆய்வு செய்யாமல் வெறுப்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருப்பதோடு, இறையச்சம் கொண்டவர்களுக்கும் இந்த வசனம் எச்சரிக்கையாகவும் அமைந்திருப்பதோடு, எதுவொரு விஷயமானாலும் தீர்க்கமாக விசாரிக்காது எந்தவொரு எதிர் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றது.

இறைவன் விடுத்த இந்த எச்சரிக்கை குறித்து நம்மில் எத்தனை பேர் கவனத்துடன் செயல்படுகின்றோம்? நமக்கிடையே உலா வரக் கூடிய வதந்திகளை உண்மை என்று நம்பி நம்மில் எத்தனை பேர், விசாரிக்காது எதிர் நடவடிக்கைகளில் இறங்கி விட்டு, பின் உண்மையை உணர்ந்த பின்பு அதற்காக வருத்தப்படுவோர் எத்தனை பேர், அதற்குள் நிகழ்ந்து விட்ட அத்தனை அம்சங்களும் சொந்த சகோதர சகோதரிகளின் மனங்களைக் காயப்படுத்தி, பின் வாழ்க்கையில் என்றுமே முகத்தில் விழிக்க இயலாத அளவு நிலைமை விபரீதமாகச் சென்று விடுகின்ற நிலைமைகளும் நம்மில் இருந்து வருவதை நாம் அறிவோம்.

நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும், நாம் அப்படியே பிறருக்குச் சொல்வது கிடையாது, கிடைத்த தகவல்களில் சில ஒட்டுக்களை வைத்து, அதனை சிறிது மாற்றி மாற்றி இறுதியாகச் சம்பந்தப்பட்டவரை அது அடையும் போது, அதனை அவர் கேட்டு விட்டு கடினமான வார்த்தைகளை உதிர்ப்பதோடு, இன்னும் உடனடியாக பெரும் பாவங்களில் இறங்கி விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடுவதையும், புறம் பேசுவதில் ஆரம்பித்து, அடிதடிகளில் கூட முடியும் சூழ்நிலைகள் உருவாகி விடுவதையும், இன்னும் தான் கேட்ட அந்தப் பொய்ச் செய்தி ஒன்றே அவரது எதிர்நடவடிக்கைக்கான நியாயமாக்கப்படுவதையும் நாம் காணலாம்.

இவ்வாறான சூழ்நிலைகளில், குறிப்பிட்ட அந்த சகோதரரை அல்லது சகோதரியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அவரைக் கண்ட மாத்திரமே அந்தப் பொய்ச் செய்தியின் விளைவாக இவரிடம் உண்டாகி இருக்கின்ற வெறுப்புத் தான் முன்னிற்குமே ஒழிய, இஸ்லாமிய சகோதரத்துவம் முன்னிற்காது, ஏன் ஸலாம் சொல்லாமல் கூட ஒதுங்கி விடக் கூடியவர்களாக மாறி விடுவார்கள். குறிப்பிட்ட அந்த சகோதரரின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் சந்தேகப் பார்வையும், இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதனால் விளைந்ததல்ல, யாரோ ஒருவர் வந்து இன்ன மனிதர் உன்னைப் பற்றி இவ்வாறு இவ்வாறு கூறினார் என்று கூறியதன் விளைவேயாகும்.

பல காலங்களாக வளர்ந்து விட்ட வெறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய ஒழுக்கப் படுகொலைகள் உண்மையை அறிய விடாமல் நம்மைப் பிற்படுத்துவதோடு, குறிப்பிட்ட நபரை ஏசிய, மற்றும் திட்டித் தீர்த்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது எவ்வாறு? ஒருமுறை ஒரு செயலைச் செய்து விட்டாகி விட்டதென்றால், அதனைத் திரும்ப மீட்டுவது என்பது இயலாத காரியமாகி விடும். அதற்காக எவ்வளவு வருந்தினாலும் சரியே, அதற்காக சிரமமெடுத்து பிரயாச்சித்தம் தேடினாலும், ஒருமுறை நம்மால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு அகலுவது என்பதும், நம்மால் பாதிக்கப்பட்டவரின் மனதில் இருந்து துடைத்தெறிவது என்பதும் இயலாத காரியமாகும். இவை யாவும் வதந்திகளால், பொய்யான குற்றச்சாட்டுக்களால் விளைந்தவைகளாகும்.

நாம் எதனைக் கேள்விப்பட்டமோ, அதனை அப்படியே பிறருக்கு எடுத்துரைப்பது என்பதில் எத்தனை கவனமாகச் செயல்படுகின்றோம். இன்றைய தலைமுறையினரின் கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பாதுகாத்து வரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கும்பட்சத்தில், என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போமா? அன்றைய தலைமுறையினர் போல நாம் அவற்றைப் பாதுகாத்திருக்க மாட்டோம், தவிர நம்மிடையே ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் நம் கைவசம் இருந்திருக்காது என்பதே நிதர்சனமாகும்.

வதந்தி அல்லது தவறான தகவலைப் பெற்றதன் மூலம், ஒரு இறைத்தூதரே இன்னொரு சமூகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டப்பட்டிருக்குமென்றால், அதன் மூலம் ஒன்றுமே அறியாத - பாவத்திலும் பழியிலும் சம்பந்தப்படாத மக்கள் அழியவும், இன்னும் நடைபெற இருந்த அந்தப் போரின் மூலமாக சில முஸ்லிம்கள் கூட அழிந்து போகக் கூடிய நிலையும் உருவானதென்று சொன்னால், நம்முடைய நிலைகள் எவ்வாறு என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான பொய்யான தகவல்கள் தான் மனித மனங்களில் ஏற்படுகின்ற உளநோய்களுக்கான மூல காரணமாக அமைந்து விடுகின்றது. அது இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு மத்தியில் வேற்றுமையையும், வெறுப்புணர்வையும், பகைமையையும் வளர்த்து விடுகின்றது. இறுதியாக இஸ்லாமிய சகோதரத்துவம் என்பதே இல்லாமலாகி விடுகின்ற சூழலுக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டு விடுகின்றது.

எனவே தான் அல்லாஹ், தனது திருமறையில் இவ்வாறான பொய்ச் செய்திகள், வதந்திகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறு, நம்மைப் பணிக்கின்றான். எச்சரிக்கவும் செய்கின்றான். எந்தவித பரிந்துரைகளும் எடுபடாத அந்த மறுமை நாளிலே வல்ல அல்லாஹ்வின் முன்பதாக நாம் நிற்கும் நிலையில், இந்த செயலுக்கான எந்த காரணத்தை அவன் முன் வைக்கப் போகின்றோம்? அன்றைய தினம் நாம் கேட்கக் கூடிய பாவ மன்னிப்புகள் எடுபடுமா? அல்லது மன்னிப்பைப் பெற்றுத் தருமா?

எனவே, இத்தகைய கொடுமையான செயல்களில் வீழ்ந்து விடாமல் இருக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்னும் யாராவது உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வருவாராகில், அந்த செய்தி பற்றிய உண்மைத் தன்மையை அறியாத வரைக்கும், அது பற்றி எந்த கருத்தையும் அல்லது அதற்கான எந்த எதிர்நடவடிக்கையையும் எடுத்து விடாதீர்கள்.
அப்துல்லாஹ்
http://www.jaffnamuslim.com/

0 கருத்துகள்: