கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

“ஓநாய்கள்” (Wolves) – ஆவணப்பட விமர்சனம்

கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.

ஆய்வுகள், வரலாறு, வன்முறை நிகழ்வுகளின் பதிவுகள் என ஆவணப்படங்கள் பல்வேறு தளத்தில் எடுக்கப்படுகின்றன. உண்மைச் சம்பவங்கள் சினிமாக்களாக எடுக்கும்போது பாதிப்புகள் வர்ணிக்கப்பட்டாலும், வலிதனை உணரச் செய்வது ஆவணப்படங்கள் மட்டுமே. நாயகர்களின் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் இரத்தத்தின் சாட்சியல்லவா?

அந்த வரிசையில் அஸ்ஸாமின் இருள் முகத்தினை விவரிக்கும் படமாய் வெளிவந்திருக்கிறது “ஓநாய்கள்” (The Wolves).

அஸ்ஸாமின் அவலம்

ஜூலை 20, 2012… அந்தி  மாலைப்பொழுதில் அனைவரின்  கவனமும் ரமழான் முதல் பிறை பார்த்திடும் ஆவலில் இருக்கையில், திடீர் சப்தம் திடுக்கத்திற்கு உள்ளாக்கியது ஜோய்பூர் கிராம (கோக்ரஜார் மாவட்ட) மக்களை!பீதிக்குள்ளான மக்கள் ஒன்று கூடினர். 

இராணுவ சீருடையில் வானை நோக்கி துப்பாக்கியால்  சுட்டுக் கொண்டே சென்ற நால்வர்தான் வெடி சப்தத்திற்கு காரணம் என்றறிந்த மக்கள், அவர்களை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் போடோ லிபரேஷன் டைகர் (BLT ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டனர்.

இது அம்மக்களுக்கு புதிதல்ல. அவ்வப்போது வன்முறை குழுக்களை எதிர்கொள்வதும், அவர்களால் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையே என அஸ்ஸாம் கிராமத்தின் பாதுகாப்பற்ற சூழலை விளக்கியவாறு துவங்குகிறது படம்.

போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் அவர்களுக்கு அரசின் எந்தவொரு பாதுகாப்பு உறுதியையும் பெற்றுத் தந்திடவில்லை. மாறாக போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களின் உயிரையே பறித்தது.

கலவரத்தின் பின்னணிபதட்ட சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகள் (?), தங்களின் சுய இலாபத்திற்காக மூட்டிய “தீ”தான்  அஸ்ஸாம்-2012 இனப்படுகொலையின் பின்னணி என காட்சிகள் விரிகின்றன.

இவர்களது வெறுப்புப் பேச்சால் 90 நபர்கள் பலி கொடுக்கப்பட்டும்,  244 கிராமங்களில் சுமார் 5000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும், 4.5 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தும் தவிக்கின்றனர் என்பதும்தான் பெருத்த சோகம்.

திசை திருப்பும் பாஜக

போடோ இனத்தவருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்குமான பிரச்னையை, பாஜக அரசியலாக்க முனைவதையும் படம் பிடிக்கிறார் இயக்குனர். சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட வங்கதேச முஸ்லிம்கள், சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை ஊடுருவல்காரர்களாக சித்தரித்து, அவர்களால் நாடு மீண்டும் ஒரு பிரிவினைக்கு உள்ளாகும் எனும் துவேஷ கருத்தினை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான (லாஹூரில் பிறந்து சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா வந்த) வந்தேறி எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துகிறார்.

தேசம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்றால்,  அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு தங்கள் குடியுரிமையையே நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அந்தோ பரிதாபம்!

முஸ்லிம்களின் அடர்த்திமிக்க மாநிலமாக அஸ்ஸாம் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை (1991-2001 கணக்கின்படி) 4 சதவிகித அளவில் சற்றே உயர்ந்திருப்பதும் காவி அரசியலின் கண்களுக்கு அஸ்ஸாமை இலக்காய் ஆக்கியிருக்கிறது. ஆனால் மேகாலயா பிரிக்கப்படும்போது மற்ற சமூகத்தித்தினர் அம்மாநிலத்திற்கு  சென்றதே முஸ்லிம்களின் சதவிகித உயர்வுக்கு காரணம் என விளக்குகிறார் இயக்குனர்.

போராட்டம் தொடர்கிறது

கலவரங்களில்  வாக்காளர் அட்டை உட்பட, தங்களிடமிருந்த   அனைத்து ஆவணங்களையும் இழந்து அகதி முகாம்களில் வாடும் அஸ்ஸாமிகள், தங்களை இந்தியர்களாய் நிரூபிக்கும் போராட்டம் தொடர்கிறது.

அம்மக்களின் நிலையை ஆவணப்படுத்தி நியூ இந்தியா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதனை மிகுந்த சிரமங்களுக்கிடையில் உருவாக்கிய இஸ்மாஈல் பின் ஸக்கரிய்யா, அஹமத் இக்பால் தன்வீர் ஆகியோரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அவர்கள் இதே போன்று பல படங்களை வெளியிட்டு உறங்கிக் கிடக்கும் உண்மைகளையும், மண்டிக் கிடக்கும் மர்மங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட வேண்டும் என்பதே எம் அவா!

இந்த ஆவணப் படத்தைக் காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
                                                   Wolves
முஹம்மது ஷாஃபி
source:http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: