கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உதவித் தொகையுடன் பட்டப் படிப்பு

பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்கும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். முன்னணித் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலை

இந்தச் சூழ்நிலையில், ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகையுடன் பி.எஸ்.சி கணிதப் படிப்பு வழங்குகிறார்கள் என்றால் மாணவர்களுக்கு அது மகிழ்ச்சியான விஷயம்தான். அதுவும் இந்தப் படிப்பு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்தான் (Chennai Mathematical Institute) இந்த அரிய வாய்ப்பை வழங்கிவருகிறது. இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும்.

இங்கு கணிதம், கம்ப்யூய்ட்டர் சயின்ஸ் மற்றும் கணிதம்-இயற்பியல் பாடங்களுடன் பி.எஸ்சி. ஆனர்ஸ் என்ற 3 ஆண்டு பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.பி.எஸ்சி. ஆனர்ஸ் (கணிதம்-கம்ப்யட்டர் சயின்ஸ்), பி.எஸ்சி. ஆனர்ஸ் (கணிதம்-இயற்பியல்) ஆகிய படிப்புகளில் பிளஸ்-2 மாணவர்கள் சேரலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகியோருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு.

பி.எஸ்சி. ஆனர்ஸ் பட்டப் படிப்புகளுக்குத் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.4,000 கல்வி உதவித்தொகை. இதர செலவினங்களுக்காக தனியார் மூலம் ரூ.1,000-மும் (மொத்தம் ரூ.5,000) வழங்கப்படுகிறது. இங்கு பி.எஸ்சி. படித்து முடிக்கும் மாணவர்கள் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம், யெல் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) உள்ளிட்ட புகழ்பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டு. படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்துகொள்கிறார்கள்.

சென்னை கணிதவியல் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பு மட்டுமின்றி, எம்.எஸ்சி. பயன்பாட்டுக் கணிதம், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய முதுகலை படிப்புகளும், பிஎச்.டி. படிப்பும் வழங்கப்படுகின்றன. முதுகலை மாணவர்கள் மாதம்தோறும் ரூ.6 ஆயிரமும், பி.எச்டி. மாணவர்கள் ரூ.16 ஆயிரமும் உதவித்தொகை பெறலாம்.

வரும் ஆண்டில்…

வரும் கல்வி ஆண்டுக்கான (2014-2015) மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மே மாதம் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் தேர்வு நடைபெறும். பி.எஸ்சி. ஆனர்ஸ் படிப்பில் சேர விரும்பும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளும், எம்.எஸ்சி. பி.எச்டி. படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரிகளும் www.cmi.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் “Chennai Mathematical Institute” என்ற பெயரில் ரூ.600-க்கு எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்ட்-ஐ தங்கள் பெயர், சேர விரும்பும் படிப்பு, முகவரி ஆகிய விவரங்களுடன் “Chennai Mathematical Institute, H1, SIPCOT I.T. Park, Siruseri, Kelambakkam, Chennai 603 103” என்ற முகவரிக்கு அனுப்பி வி்ண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15ஆம் தேதி ஆகும்.

நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும், அட்மிஷன் தொடர்பான தகவல்களை அறிய 044-27470226, 27470229 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். admissions@cmi.ac.in என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் விவரங்கள் பெறலாம்.
Thanks: http://tamil.thehindu.com/general/education/

0 கருத்துகள்: