தமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
அவரவர் இயக்கத்தை பற்றி கூட அவ்வளவு புகழ்ந்திருக்க மாட்டார்கள்.
திமுக பக்கம் இருக்கும் முஸ்லிம் அமைப்புகள் கலைஞரையும் அவரது ஆட்சி காலத்தின் சிறப்பை பற்றி புகழ்வதும்,அதிமுக பக்கம் இருக்கும் அமைப்புகள் ஜெயலலிதாவையும் அவரது ஆட்சி காலத்தின் சிறப்பை பற்றி புகழ்வதும் வழமையான ஒன்றாகி விட்டது.
முஸ்லிம்லீக்கை தவிர மற்ற அமைப்புகள் எதுவும் திமுக,அதிமுக பக்கம் நிரந்தரமாக இருப்பதில்லை.
ஒரு தேர்தலில் திமுக பக்கம் இருந்தால் அடுத்த தேர்தலில் அதிமுக பக்கம் தாவி விடுவார்கள்.
திமுக பக்கம் இருப்பவர்கள் கலைஞர் ஆட்சியில் நடந்த 1998 கோவை கலவரத்தையும் அதில் படுகொலை செய்யப்பட்ட 19 உயிர்களையும்,காயல்பட்டிணம் அன்னை ஆயிஷா நிஸ்வான் மதரஸாவில் போலீஸாரால் நடத்தப்பட்ட சோதனையையும் மாணவிகளின் அறைகளில் ஆபாச சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸால் அவமானப் படுத்தப்பட்டதையும் மறந்து விடுவார்கள்.
நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைத்து இன்று வரை அவர்கள் வெளியில் வர முடியாமல் இருக்கும் நிகழ்வையெல்லாம் மறந்து கலைஞர் வாழ்க என்ற கோஷத்தை தவறாமல் உச்சரிக்கிறார்கள்.
அதிமுக பக்கம் இருப்பவர்கள் அம்மையார் ஆட்சி காலத்தில் 1992 ல் நடந்த பாபர் மஸ்ஜித் கரசேவைக்கு ஆயிரக்கணக்கானவர்களை அனுப்பி வைத்த நிகழ்வையும்,
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு இன்னொரு பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்து விடுமென எச்சரித்ததையும் மோடி எனது ஆஸ்தான நண்பர் என்று கூறி 64வகையான உணவு பதார்த்தங்களை பரிமாறி மோடியை சந்தோஷப்படுத்தியதையும் மறந்து அம்மா வாழ்க என்ற கோஷத்தை தவறாமல் சொல்கிறார்கள்.
சமுதாய மக்களுக்கு துரோகம் செய்து விட்டு யாரும் யாரையும் துதிபாடட்டும்.திமுக,அதிமுக இவைகளுக்காக சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?
கீழை ஜஹாங்கீர் அரூஸி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக