சென்னை: நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது என சென்னையில் இன்று (08/03/2014) நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடசென்னையில் நிஜாம் முகைதீன், இராமநாதபுரத்தில் நூர் ஜியாவுதீன், நெல்லையில் முபாரக் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுவை உட்பட மற்ற 37 தொகுதிகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் நடைபெற்ற மாநில பொதுக் குழுவுக்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
பொதுக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணை தலைவர் நாஸ்னின் பேகம் தேர்தல் அரசியல் களத்தை எதிர்கொள்வது பற்றி உரையாற்றினார்.
மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அபுதாஹிர், சத்தார், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் உஸ்மான் கான், செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அப்பாஸ், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மகளிரணி தலைவர் பாத்திமா கனி, செயலாளர் நபீஸா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யூ வின் மாநில தலைவர் ஃபாரூக், பொதுச் செயலாளர் அஜீத் ரஹ்மான் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். ரஃபீக் அஹமது நன்றியுரையாற்றினார்.
இதையடுத்து பின்வரும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 : பாராளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்
தமிழகத்தில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) வடசென்னை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளில் களமிறங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வடசென்னை தொகுதியில் நிஜாம் முகைதீன், திருநெல்வேலி தொகுதியில் நெல்லை முபாரக், இராமநாதபுரம் தொகுதியில் டாக்டர். நூர் ஜியாவுதீன் ஆகியோர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
புதுவை உட்பட மற்ற 37 தொகுதிகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அநீதிக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, ஃபாசிசத்துக்கு எதிராக, மதுவுக்கு எதிராக, மக்களுக்காக போராடும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்களுக்கு மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், இவர்களின் வெற்றிக்கு கட்சியின் தொண்டர்கள் தீவிரமாக உழைத்திட வேண்டும் என்பதையும் இப்பொதுக்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 2 : ஈழப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை நடத்த ஐ.நாவில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்
இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணையத்தில் கடந்த மார்ச் 03 ம் தேதி அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் சர்வதேச விசாரணையிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் முகமாகவே அதன் அம்சங்கள் அமைந்துள்ளன.
ஏற்கனவே முன்பு இலங்கையை சர்வதேச விசாரணையிலிருந்து தப்ப வைக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைப் போன்றே இந்தத் தீர்மானமும் உள்ளது.
இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயல்படத் தவறினால், சுதந்திரமான நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என அமெரிக்காவின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அங்கு இன்னும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன எனவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியும், நிவாரணமும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
ஆகவே இலங்கை அரசே விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தற்போதைய தீர்மானமும்; இலங்கைக்கு தங்களது மனித உரிமை மீறலை மறைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.
கடந்த ஆண்டு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை; இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை முழுமையாக தோல்வி அடைந்துவிட்ட நிலையில், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் இலங்கையை சுதந்திர சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் அழுத்தமான தீர்மானத்தை கொண்டு வராமல், மீண்டும் பழைய வாய்ப்பையே இலங்கைக்கு அளிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
ஆகவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் வகையிலும், போரினால் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யும் வகையிலும், தமிழர்களின் நலனை காக்கும் வகையிலும் இந்தியா தானாகவே ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வரவேண்டும்.
மனித உரிமை மீறல் மட்டுமின்றி, இனப்படுகொலை தொடர்பாகவும் இலங்கையை சுதந்திர சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஈழப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 : மகளிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும்
சமீப காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் தலை விரித்தாடுகின்றன. ஐ.டி நிறுவனங்கள் முதல் கூலி வேலை செய்யும் பெண்கள் வரை அவர்கள் பாலியல் வன்கொடுமை, ஈவ்டீசிங், ஆசிட் வீச்சு போன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இக்கொடுமைகளுக்கு எதிராக சட்டமியற்றிய போதிலும் பெண்களுக்கு எதிரான களநிலை மட்டும் மாறவில்லை.
ஆகவே பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 : வடசென்னையின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய, மாநில் அரசுகள் சிறப்பு கவனத்தை மேற்க்கொள்ள வேண்டும்
உழைக்கும் வர்க்கத்தினர், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுபான்மை மக்கள் நிறைந்து வாழும் வடசென்னை பகுதியானது, மத்திய-மாநில அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.
மாநில அரசின் புறக்கணிப்பால் சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் சென்னையின் மற்ற பகுதிகளை விட வடசென்னை பகுதி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
மேலும் வடசென்னை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ராயபுரம் மூன்றாம் முனையம் அமைக்கும் திட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே மத்திய, மாநில அரசுகள் வடசென்னையின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் சிறப்பு கவனத்தை மேற்கொள்ளவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் தண்ணீர் ஆதாரமான தாமிரபரணியை காக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் இலட்சக்கணக்கான ஏக்கர் விவாசயத்திற்கு ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் தற்போதைய நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. தொடரும் மணல் கொள்ளையாலும், ஆலைக் கழிவுநீர் கலப்பாலும் தாமிரபரணி கழிவுநீர் குட்டை போல மாறி வருகிறது.
மேலும் பன்னாட்டு குளிர்பான கம்பெனியான கோகோ-கோலா தாமிரபரணியில் தினமும் 5 இலட்சத்திற்கும் அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது. தொடரும் இந்தத் தண்ணீர் கொள்ளையால் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி விருதுநகர், மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற தண்ணீர் கொள்ளை, மணல் கொள்ளையால் அதன் நீர்மட்டம் குறைந்து அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
ஆகவே தமிழக அரசு தாமிரபரணி நதியை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மத்திய-மாநில அரசுகள் தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 : தமிழக மீனவர் நலனை காக்க கட்சத்தீவை மீட்டு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
தமிழக மீனவர் நலனில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றன. இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு கட்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததே காரணம் ஆகும். இப்பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமையை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது மத்திய அரசு.
மேலும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதில் மாநில அரசு போதுமான அக்கறை காட்டுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலைமை மேலும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
ஆகவே தமிழக மீனவர் நலனை காக்க கட்சத்தீவை மீட்டு உடனடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 : இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை தொடர்பாக முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும்
இராமநாதபுரத்தில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் நடத்திய ஒற்றுமை பேரணியின் போது, பொதுமக்கள், வழக்கறிஞர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர்கள் மீது நடத்தப்பட்ட போலீசாரின் வன்முறை தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தத் தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது. முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டுமே இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஆகவே தமிழக அரசு இந்தத் தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசுக்கும் இப்பொதுக்குழு கெட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 8 : தமிழர்கள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் பாஜகவையும், அதன் கூட்டணியையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
அரசியல் ஆதாயத்துக்காக சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தும், மக்களை பிளவுபடுத்தியும், இடஒதுக்கீடு போன்ற சமூகநீதி கட்டமைப்பிற்கு எதிராகவும், ஈழத் தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, மூவர் விடுதலை பிரச்னையில் இரட்டை வேடம் போடும் பாஜகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மேலும் குஜராத்தில் வரலாறு காணாத இனப்படுகொலையை மேற்கொண்ட பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ள அனைவரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். எனவும் இப்பொதுக்குழு தமிழக வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 9 :தமிழக சிறைகளில் ஆயுள் கைதிகளாக 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது
தீர்மானம் 10 :கூடங்குளத்தில் புதிதாக அமையவுள்ள 3வது மற்றும் 4வது அணு உலை திட்டத்தை மக்களின் ஒப்புதலை பெற்ற பிறகே நிறுவ மத்திய அரசு முன்வரவேண்டும். மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டாக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக