கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது ,இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும்
மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம்.


எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்

தர்மத்தைப் பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. {அன்னிஸா 4:14}

நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுதரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் நாம் பேசுகின்ற பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து {செயல்களை} எழுதும் இரு வானவர்கள் மனிதர்களிடம் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை {காவ்ப் :50: 17, 18}

குர்ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாக) கேளுங்கள், மௌனமாக இருங்கள். (அதனால் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள். (அல் அஃராப்:- 7 : 204)

நீங்கள் எதையாவது பேசினால் சிந்தித்து பேசுங்கள்! மேலும் நீங்கள் பேசக்கூடிய வார்த்தை நன்மையானதாகவும், அல்லாஹ்வுடைய கோபத்தின்பால் இட்டுச்செல்லக்கூடிய தீமையான விசயங்களிலிருந்து தூரமானதாகவும், இருப்பது அவசியமாகும். எனவே நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு மகத்தான நன்மை உள்ளது.

ஒரு வார்த்தை இறைதிருப்தியில் எவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்றுத்தரும் என்பதை அறியாமலேயே ஒரு அடியான் அவ்வார்த்தையை பேசுகின்றான். இவ்வார்த்தையின் காரணமாக அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான். மேலும் ஒரு வார்த்தையால் எந்தளவு அதிருப்தி ஏற்படும் என அறியாமலேயே பேசுகின்றான். அவ்வார்த்தையின் காரணமாக அவன் நரகத்தை அடைகின்றான். (புஹாரி)

நபி(ஸல்} அவர்கள் கூறுகிறார்கள் ...

இரு தாடைகளுக்கு மத்தியில் உள்ள தீங்கையும், இரு கால்களுக்கு மத்தியில் உள்ள தீங்கையும் எவருக்கு அல்லாஹ் பாதுகாக்கின்றானோ
அவர் சுவர்க்கத்தில் நுழைவார் {திர்மிதி}

அல்லாஹ்வின் தூதரே ! ஈடேற்றம் பெறுவது எவ்வாறு என்று கேட்டேன். அதற்கு நபிகளார்{ஸல்} கூறினார்கள்: உன் நாவை தீங்கைவிட்டு தடுத்துக்கொள் ! உன் வீடு விஸ்தீரமானதாக இருக்கட்டும் ! உன் பிழைகளுக்கு அழுவீராக எனக் கூறினார்கள் (உக்பா பின் ஆமிர்[ரலி}{திர்மிதி

உங்கள் காதால் கேட்கும் அனைத்தையும் பிறரிடம் கூறிவிடாதீர்கள். அது
சில வேலை பொய்யாகவும் இருக்கலாம். பிறர் கண்களுக்கு தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணி பெருமை படாதீர்கள். பேசத் தொடங்கினால் கர்வமாக பெருமையாக பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

தான் கேட்டது அனைத்தையும் அப்படியே பேசுபவன் ஒருவன் பொய்யன்
என்பதற்கு போதுமான ஆதாரமாகும்[முஸ்லீம்]

உங்களில்அழகிய குணமுள்ளவர்கள் எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவர்களிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்களும், மறுமைநாளில் என்னை விட்டும் தூரத்திலிருப்பவர்களும் உங்களில் அதிகமாக பேசுபவர்களும் தங்களின் பேச்சால் மக்களிடம் பெருமையடிப்பவர்களும், வாய்பிளந்திருப்பவர்களும் ஆவார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! வாய் பிளந்தோர் என்றால் யார்? என்று நபித்தோழர்கள் கேட்ட போது பெருமையடிப்பவர்கள் என நபிகளார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி)

எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.(புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

நீங்கள் எவரிடமாவது பேசும்போது அவர்களின் பேச்சை அசட்டை செய்யாது இடையில் துண்டிக்காது, மறுப்புத் தெரிவிக்காது நல்லமுறையில் கேட்டு அதற்கு தெளிவாக ஒழுங்கான முறையில் அழகிய பதிலை கூறுங்கள். அதுவே உங்களுக்கு அழகிய பண்பாகும்.

உங்களில் சிறந்தவர் உங்களில் அழகிய குணமுடையவர் (புஹாரி)

தனது சகோதரனை சிரித்த முகத்துடன் பார்ப்பது உட்பட எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இலகுவாக, இழிவாக கருதிவிடாதே! (முஸ்லிம்)

எவர் தனது உணவில் அபிவிருத்தியும், தனது வாழ்நாள் நீடிக்கவேண்டுமெனவும் விரும்புகின்றாரோ அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடக்கவும். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)
உறவினர்களை தரிசிப்பது, வயதிலும், உணவிலும் பரகத்தை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் ஓதுவதை கேட்டால் அனைத்து பேச்சுக்களையும் விட்டுவிட்டு அதற்கு செவிசாய்க்கவும். ஏனெனில் இதுவே அவனது பேச்சிற்கு மதிப்பளித்து அவனது கட்டளைக்கு கீழ்படிவதாகும்.

பர்ளு, ஸுன்னத்கள் மற்றும் அல்லாஹ்வை நெருங்கக்கூடிய நல்லமல்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கி மாபெரும் கூலியை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைந்துகொள்வதுடன் எவ்வித அச்சமோ கவலையோ இல்லாத அல்லாஹ்வின் நேசர்களில் ஒருவராக நீயும் இருப்பாய்! மேலும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கின்றான். அவர்களின் கவலைகளை நீக்கி அவர்களின் உள்ளங்களை அமைதியால் நிரப்புகின்றான்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

அறிஞர்களிடம் தர்க்கம் செய்வதற்காகவோ, மடையர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்காகவோ யாரேனும் கல்வி கற்றால் அவரை அல்லாஹ் நரகில் நுழைவிப்பான். (திர்மிதி)

உங்களது நாவு அல்லாஹ் உனக்களித்த மாபெரும் அருட்கொடையாகும். நன்மையை ஏவி, தீமையை தடுத்தல், நன்மையின்பால் மக்களை அழைத்தல் போன்ற நல்ல விஷயங்களுக்காக அதனை பயன்படுத்திக்கொள்!

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனவான். எனவே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு அநீதி இழைக்கமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கைவிடமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் பொய்யுரைக்க மாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை தாழ்த்திட மாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது என்று நபிகளார் (ஸல்) அவர்கள் மூன்றுமுறை தங்கள் நெஞ்சை தொட்டுக்காட்டினார்கள்.

ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதர முஸ்லிமை இழிவாக கருதுவது தீய செயலாகும். ஒரு முஸ்லிமின்மீது ஒரு சகோதர முஸ்லிமின் இரத்தமும், உடைமையும், கண்ணியமும் ஹராமாக்கப்பட்டுள்ளது. (அவற்றிற்கு ஊறு விழைவிக்கக்கூடிய எந்தச் செயலும் விலக்கப்பட்டதாகும். (முஸ்லிம்)

0 கருத்துகள்: