கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பொய்யும் மெய்யும்

Post image for பொய்யும் மெய்யும்
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.

அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்.

உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.]

மெய்யும் பொய்யும் நம்முடைய வாழ்க்கையோடு கலந்து விட்டனவைகளாகவே இருக்கின்றன. நமக்கு எது ஆதாயம் தருகின்றதோ, அதை தேர்வு செய்ய நாம் தயங்காதவர்களாகவே இருக்கின்றோம். அது பொய்யாக இருந்தாலும் சரி, மெய்யாக இருந்தாலும் சரி.

ஆனால் உண்மை என்னவென்றால், பொய் சொல்வது என்பது நமக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதுதான். இந்த உண்மையை எண்ணிப் பார்க்கிறபோது நமக்கு மிகவும் வியப்பாகத் தோன்றும். பிடிக்காத விஷயமாகிய ஒன்றை – அதாவது பொய் சொல்வதை நாம் வாழ்க்கையில் அதிகம் கடைப்பிடிக்கிறோம் என்பதுதான் அது.

பொய் சொல்வதா? உண்மையைச் சொல்வதா என்பதை நாம் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்கிறோம். எதைச் சொல்வதனால் அந்த நேரப் பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது என்பதுகூட நாம் சொல்ல வேண்டியது பொய்யா? மெய்யா? என்பதை நிர்ணயித்து விடுகின்றது. மேலும் நாம் ஆதாய நோக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவேதான் அப்படி இப்படிப்பட்ட வேளைகளில் நாம் பொய் சொல்வதற்கு தயங்குவதில்லை.

ஆனால் பொய், மெய் இரண்டில் எதைச் சொல்வது சுலபம் என்ற கேள்வி எழுமானால் நாம் கூறும் விடை என்னவாக இருக்கும்?

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதே!

ஆம்! உள்ளத்தில் உண்மைகளே பதிவு செய்து வைக்கப்படுகின்றன. பொய்யை நாம் தான் தூக்கி அதில் ஒரு சுமையை வைக்கின்றோம். அந்த சுமையை உள்ளம் மெல்ல மெல்ல இறக்கி தூர எறிந்து விடக்கூடும். ஆம்! பொய்ச்சுமைக்கு உள்ளத்தில் நீடித்த இடப்பிடம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும். எனவே தான் சொல்லி வைத்தாற்போல் பொய்கள் எல்லாம் விரைவில் மறந்து போய் விடுகின்றன.

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.


அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

மேலும், உண்மைக்கு இயற்கையே சாட்சியாக அமைந்து விடுகின்றது. ஆனால், பொய்யை நிரூபிக்க சாட்சியை ஜோடிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த சாட்சியும் அந்த நிமிடத்துக்கு மட்டும்தான் மேடையேற உதவும். காட்சி முடிந்தபின் கழன்று கொண்டு போய்விடும். பின்பொரு சூழ்நிலையில் அந்த நாடகத்தைப் போடும் போது முன்பு வந்த பொய்சாட்சியே காட்டிக் கொடுக்கும் சாட்சியாக மாறிப்போய் விடுகிறது.

எனவே நீர்க்குமிழிகள் போன்றவையே பொய்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் பொய் சொல்வதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.

அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும். எனவே நாம் சொல்லும் உண்மைகள் ஏற்கப்படாத நிலைமை வருமேயானால், அது நம்முடைய வளர்ச்சிக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும். இதற்குக் காரணம், நாம் முன்பு ஏதோ ஓர் ஆதாயம் கருதி கூறிய பொய்தான். ஆனால் அப்போது கிடைத்த ஆதாயத்தைவிட இப்போதும், இனிமேலும் கிடைக்கின்ற இழப்பு மிக மிக அதிகமானதாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்ப்போமேயானால் வலி தான் மிஞ்சும்.

எனவே தான் முன்பு ஏதோ ஒரு சூழலில் தவிர்க்க முடியாமல் நாம் ஒரு பொய்யைச் சொல்ல நேர்ந்திருந்தால் அப்போது அப்பொய்யை சொல்லியிருந்தால், அப்பொய்யை பொய்யல்ல என்று கட்டிக் காக்க வேண்டிய பொருப்பு நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது. அந்த பொய் நன்மையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம் அல்லது தீமையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம். எதைக் கருதி கூறப்பட்டிருந்தாலும் சரி பொய்யன் என்ற பழியிலிருந்து நாம் மீள முடியுமா?

பொய் அற்ப ஆயுள் கொண்டது. அப்படிப்பட்ட பொய்யை நாம் கட்டிக்காக்க முடியுமா என்ன? பொய் வெளிப்படும்போது அது விளைந்த தீமைக்கேற்ப நமக்கு அழிவைத் தந்துவிடும். எனவே நல்லதொரு சூழ்நிலையில் அப்பொய்யை நாமே நயமாக வெளிப்படுத்துவது என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும். அப்போது அது தீமையைத் தந்தால்கூட ஏற்க சித்தமாக இருக்க வேண்டும்.

பொய் சொல்வது என்பதே மிகவும் சிரமமானது. அப்படியெனில் உண்மையைச் சொல்வது மிகவும் சுலபமானதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கும் சிந்தித்தே விடைகாண வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்வதே சுலபம் என்றால் நமக்குப் பொய் கூற வேண்டிய அவசியம் பெரும்பான்மையான சூழ்நிலைகளால் ஏற்படாதே என்பதுதான்.

ஆனால், நாம் பல நிலைகளில் உண்மையை மறைப்பதில் குறியாக இருக்கின்றோம். உள்ளத்தை உள்ளபடி கூறுகின்ற மனத்திண்மை பல நேரங்களில் நம்மிடம் இல்லாமல் போய் விடுகிறது.

இதற்கு என்ன காரணம்?

ஒன்று அதனால் நாம் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றொன்று மிகவும் முக்கியமானது. நாம் அவமானத்துக்கு உள்ளாக நேரிட்டு விடக் கூடும். ஒரு தவறை நாம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த தவறை ஒப்புக் கொள்கிற மனநிலை நமக்கு வந்து விடுகிறதா என்ன? அதை உள்ளபடியே கூறிவிட்டால் மிகப்பெரிய கேவலத்தை அடைய வேண்டியதிருக்கும். அதுவரை ஊராரிடம் சேர்த்து வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காலவதியாகப் போய்விடும்.

நாம் எப்பொழுதும் உண்மையே பேசும் மன உறுதியை கொண்டவராக இருப்போமேயானால் எந்த சூழ்நிலையிலும் தவறான செயலை நமக்கும், பிறருக்கும் தீமை தருகின்றன செயலை செய்ய விழையவே மாட்டோம்.

இதிலிருந்து உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.

ஒரு பொய்யை காப்பாற்ற நாம் பல பொய்களை சொல்லிக் கொண்டு போக வேண்டியதாகி விடுகிறது. அதே போல உண்மைகளை தொடர்ந்து சொல்லச் சொல்ல உண்மையைச் சொல்வது என்பது இனிமையாகிப் போகிறது.

பொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். உண்மையை சொல்பவர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். நாம் தைரியசாலிகளாகவே இருப்போம்.

அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா
கா. அலியார்

0 கருத்துகள்: