கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

வாகனங்களுக்கான ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்

High Security Number Plate
வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தியடி உத்தரவுதான் முழு காரணம்.

கடந்த 2005ம் ஆண்டே அமல்ப்படுத்தியிருக்க வேண்டிய இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் ஜவ்வு போன்று இழுத்து வந்தது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் இதை இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டதற்கு அகில இந்திய தீவிரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த எம்.எஸ். பிட்டா என்பவர்தான் பிள்ளையர் சுழிதான் காரணம்.

வாகனங்களில் உயர் பாதுகாப்பு இல்லாத நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்கள் பெருகி வருவதாகவும், இதை தடுக்க ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்துவதை உடனடியாக கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்தார்.

இந்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்துவதற்கான நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அடுத்த மாதம் 30ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், புதிய வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 30ந் தேதி முதலும், பழைய வாகனங்களுக்கு வரும் ஜூன் மாதம் 15ந் தேதிக்குள் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டை பொருத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பாதுகாப்பு, சிறப்பம்சங்கள் முழு விபரம்:

சரி, ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன? உள்ளிட்ட விபரங்களை சற்று விரிவாகவே பார்க்கலாம்.

வாகனங்களை போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதுதான் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்.

தவிர, வாகனம் திருடு போகும்போதும், விபத்து ஏற்படும் நேரங்களிலும் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் விபரங்களை வைத்து உடனடியாக உரிமையாளர் பெயர் மற்றும் விபரங்களை கண்டு பிடிக்க முடியும்.

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளை அரசாங்கம் நியமிக்கும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே வாகனங்களில் பொருத்தும். வாகனத்தில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்தியவுடன் அந்த நம்பர் பிளேட்டை கழற்றவோ அல்லது பிற வாகனங்களில் பொருத்தவும் முடியாது. அப்படியொரு பக்காவான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.

சமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.

இதைவிட இந்த நம்பர் பிளேட்டுகளில் ஓர் முக்கிய விஷயம், இதில் பதிக்கப்பட்டிருக்கும் குரோம் பூச்சுடன் கூடிய ஹாலோகிராம் ஸ்டிக்கர் மூலம், சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த விபரங்களை 200 மீட்டர் தொலைவிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் தவிர, மூன்றாவதாக வாகனத்தில் முன்புற கண்ணாடியில் சிறிய நம்பர் பிளேட் ஒன்றும் பொருத்தப்படும். இதில், வாகன எஞ்சின் நம்பர், சேஸிஸ் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆர்டிஓ விபரங்களுடன் உரிமையாளர் பற்றிய ஏ டூ இசட் விபரங்கள் அடங்கிய சிப் ஒன்றும் அந்த நம்பர் பிளேட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.

வாகனங்கள் திருடு போனாலோ அல்லது சமூக விரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டாலோ வாகனத்தை பற்றிய விபரங்களை இந்த சிறிய ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் மூலம் குறுகிய நேரத்தில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் கிடுக்கிப்பிடி உத்தரவையடுத்து, தமிழகத்திலும் ஹை செக்யூரிட்டி பொருத்துவதற்கான திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களையும் 6 மண்டலங்களாக பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில், விரைவில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்தப்படும் பணிகள் துவங்க உள்ள நிலையில், ஒரு நம்பர் பிளேட் பொருத்துவதற்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை செலவாகும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://tamil.drivespark.com/

0 கருத்துகள்: