கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சாதிக்குமா மனித நேய மக்கள் கட்சி?

mmk
ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையாலும், கூட்டணி கட்சி பலத்தாலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றியுள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் தோற்றுவிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்ற தாய்ச்சபையான முஸ்லிம் லீக் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு ஆளுங்கட்சியின் மீதான மக்களின் கோப அலையில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக இம்முறை தமிழக சட்ட மன்றத்திற்குள் முதன் முதலாக அடியெத்து வைத்துள்ளது மனித நேய மக்கள் கட்சி.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட துடிப்பான இளைஞர் தமீமுன் அன்சாரி தோல்வியைத் தழுவியது வருத்தத்தை தந்தாலும், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும். வெற்றித் தந்த மமதையில் வெறும் அறிக்கைகளை விட்டு காலந்தள்ளாமல் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், சேவைகள் புரியவும் ம.ம.க தயாராகவேண்டும்.
சமுதாயத்திற்கான பல்வேறு சேவைப்பணிகளில் ம.ம.கவின் தாய்க்கழகமான த.மு.மு.க ஈடுபட்டிருந்தாலும் அக்கட்சியின் மீது கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ம.ம.கவின் எம்.எல்.ஏக்கள் அனைத்து முஸ்லிம் சமுதாயத்தின்  பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் வக்ப் வாரிய தலைவர் பதவியை பெற்ற த.மு.மு.க பொதுச்செயலாளரின் நடவடிக்கைகள் பலரையும் முகஞ்சுழிக்க வைத்தன என்பதை மறுக்கவியலாது.
ஊழல், ரவுடியிசம், போலீஸ் அராஜகம் ஆகிய காரணங்களால் தி.மு.கவுடன் உறவை அறுத்தெறிந்ததாக ம.ம.க காரணம் கூறியிருந்தது. அதே காரணங்கள் செல்வி ஜெயலலிதாவின் முந்தைய கால ஆட்சியிலும் இடம் பெற்றிருந்ததை ம.ம.கவினர் மறந்திருக்கமாட்டார்கள். மீண்டும் அதே போல ஜெ.வின் ஆட்சியில் தலை தூக்குமானால் எதிர்த்து குரல் எழுப்பவும், கூட்டணியை விட்டு வெளியேறவும் ம.ம.க தயங்கக்கூடாது.
செல்வி.ஜெயலலிதாவின் பாசிசத்துடனான தொடர்பு முஸ்லிம்களின் உள்ளங்களில் மாறாத வடுவாகவே பதிந்துள்ளது. வருங்காலங்களில் அவரின் செயல்பாடுகள் பாசிசத்துக்கு ஆதரவாக இருக்குமானால் ம.ம.கவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு அக்கட்சி தெளிவுப்படுத்த வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும், தவறுகளை சுட்டிக்காட்டும்போது திருத்தக்கூடிய பண்பையும் ம.ம.க வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என செல்வி.ஜெயலலிதா வாய் வழி வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். மேலும் இட ஒதுக்கீட்டில் குறைபாடுகளை போக்கி பலன் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார் ( இதனை அவர் தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). ஆகவே இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு ம.ம.க சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு நிர்பந்தம் கொடுக்கக்கூடாது என்ற பாலிசியெல்லாம் பேசி துதி பாடுவதை விட்டுவிட்டு சமுதாயத்திற்காக உள்ளார்ந்த நேர்மையுடன் உழைத்திடவும், குரல்கொடுக்கவும் ம.ம.க தயாராக வேண்டும். வக்ப் வாரிய சொத்துக்களை மீட்டல், மதுபானத்தை முற்றிலும் தடைச்செய்தல் (ஏற்கனவே ம.ம.க மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளது), பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கோவை சிறைக்கைதிகள் விடுதலை,முஸ்லிம்களுக்கு தொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை கழைந்துவிட்டு அனைத்து சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். சட்டமன்றத்தில் அதுவும் இம்முறை முஸ்லிம் சமுதாயத்தின் பிரதி என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். மாறாக ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நாங்கள் தாம் எப்பொழுதும் பிரதிநிதி என்ற பெருமை ம.ம.கவுக்கு வந்து விடக்கூடாது. வெற்றி என்பது இறைவனால் வழங்கப்படுவதாகும். ஆகவே பதவியும், வெற்றியும் நிரந்தரமல்ல என்பதை நினைவில் வைத்து ம.ம.க செயல்படும் என எதிர்பார்க்கிறோம்
source:http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: