கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர். (1)

அலி பின் அபீதாலிப் அவர்களின் வரலாற்றில் இருந்து சில பகுதிகள்.…….
RASMIN M.I.Sc

இஸ்லாம் உருவாக்கிய சமுதாயத்தில் மிக முக்கிய சமுதாயமாக நபியவர்களைப் பின்பற்றியவர்களில் அவர்களுடைய சஹாபாக்கள் கருதப் படுகிறார்கள். ஏன் என்றால் அந்த சஹாபாக்கள் இஸ்லாமிய மார்க்கம் இந்தப் புவியில் பரவ வேண்டும் என்பதற்காக தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவு செய்தார்கள்.

சொந்த ஊரை விட்டுத் துரத்தப் பட்டார்கள், கடுமையாக தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் இப்படி தங்களுக்கு எந்தத் துன்பம் ஏற்படினும் கொள்கையை விடோம் என்ற நாதத்தை தங்கள் வாழ்க்கையாகவே வைத்திருந்தார்கள்.

அந்த வகையில் தங்கள் வாழ்வை இந்த மார்க்கத்திற்காக செலவு செய்தவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர்களில் ஒருவர்தான் வீரத்தின் புலி என்று வர்ணிக்கப்படும் அலி பின் அபீதாலிப் அவர்கள்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது ஆட்சியாளரான இவரைப் பற்றி பலர் பல செய்திகளை அறிந்திருந்தாலும் உண்மையில் சில பொழுதுகளில் அறியப்படாதவராகவே அலி (ரலி) அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். அதற்குக் காரணம் அவருடைய வாழ்வில் ஏற்பட்ட சில எதிர்பாராத சம்பவங்கள் தான்.

ஆனாலும் இன்றைய காலத் தலைவர்களில் பலர் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமானவராக அலி (ரலி) அவர்கள் இருக்கிறார்கள் அவருடைய வாழ்வில் நடந்த சில முக்கிய பகுதிகளை நாம் இங்கு பார்ப்போம்.

கொடியெடுத்தால், கோட்டையைப் பிடிப்பார்.

தனது வீரத்தின் மூலமாக பல தடவைகள் எதிரிகளைக் கலங்கடித்தவர்களில் ஒருவர் தான் அலி பின் அபீதாலிப் அவர்கள். போர்க்கலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் இவர் வாளை கையில் எடுத்தால் எதிரியை வீழ்த்தாமல் இருப்பதில்லையென்பதுதான் அதற்கான காரணம்.

இதற்கான நேரடிச் சான்றை கைபர் போரின் வரலாற்றைப் படிப்பவர்கள் காண முடியும்.

சஹ்ல் பின் சஅத்  (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கின்றானோ அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன் என்று கூறக் கேட்டேன். உடனே> நபித்தோழர்கள்> அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அலீ எங்கே? என்று கேட்டார்கள். "அவருக்குக் கண்வலி என்று கூறப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி)  அவர்களை அழைத்து வரும்படி கட்டளை யிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தமது) எச்சிலை உமிழ்ந் தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது.

உடனே அலீ (ரலி) அவர்கள் நம்மைப் போல் (முஸ்லீம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குவீராக! பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின்  உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று  சொன்னார்கள்.(புகாரி – 2942)

அனைத்து நபித் தோழர்களும் தனக்குக்தான் அந்தக் கொடி கிடைக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டு, ஆசைப்பட்டு அடுத்த நாள் அனைத்து நபித் தோழர்களும் காத்துக் கிடந்தார்கள். இறைவன் வெற்றியை யார் கையில் கொடுக்கப் போகிறான் என்பதுதான் அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது அந்நேரம் தான் இறைவனின் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அலி பின் அபீதாலிப் அவர்களை அந்த வெற்றிக்கு சொந்தக்காரராக சொல்லிக் காட்டுகிறார்கள்.

கண் வலியால் அவதிப்பட்டவருக்கு நபியின் உமிழ்நீர் மருந்தாக மாறிய அற்புதமும் அந்நேரத்தில் தான் இறைவன் புறத்தால் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் இறைவனின் நேர்வழிக்காக சரியான பாதையை மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக போராடுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக நபியவர்கள் மிக அழகான தத்துவம் ஒன்றையும் சொல்லிக் காண்பிக்கிறார்கள்,

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின்  உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்.

அரபுகள் தங்கள் செல்வங்களில் மிகவும் சிறப்பான செல்வமாக சிகப்பு ஒட்டகங்களைத் தான் கருதினார்கள். அந்த ஒட்டகங்களை உவமையாகக் கொண்டு நேர்வழி தொடர்பான ஒரு ஆழமான கருத்தைத் தெரிவிக்கிறார்கள். நம் மூலம், நமது கருத்துக்கள் மூலம் ஒருவருக்கு நேர்வழியை இறைவன் கொடுப்பதென்பது சிகப்பு ஒட்டகங்களை நாம் தர்மம் செய்து அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை விடவும் சிறந்ததாகும்.

மூஸா நபியிடம் ஹாரூன் (அலை) அவர்கள் இருந்த இடத்திற்குறியவர்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொருவருக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்படும். அந்த இடம் ஏதோ ஒரு விதத்தில் குறிப்பிட்ட மனிதனுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

அந்த வகையில் நபி மூஸா (அலை) அவா்களிடம் ஒரு நெருங்கிய இடத்தை ஹாருன் (அலை) அவர்கள் பெற்றிருந்தார்கள். அதை இறைவனும் தனது திருமறைக் குர்ஆனில் நமக்குத் தெளிவு படுத்துகிறான்.

நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள் ! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்.(20 - 42)

பின்னர் பிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும், அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம். (23 – 45,46)

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.(25 - 35)

மூஸா நபியிடத்தில் நெருங்கிய அந்தஸ்தில் ஹாரூன் (அலை) அவர்கள் இருந்ததைப் போல் நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் இருந்தார் என்றால் அது அலி பின் அபீதாலிப் அவர்களாகத்தான் இருக்க முடியும்.

இதை நபியவர்களே குறிப்பிட்டுக் கூறியுள்ளதை நாம் காணமுடியும்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை  (தாம்  திரும்பிவரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மூசாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும் (ஒரு வேறுபாடு என்னவெனில்) எனக்குப் பிறகு எந்த  இறைத்தூதரும்  இல்லை என்று சொன்னார்கள்.(புகாரி - 4416)

தபூக் யுத்தத்திற்கு புறப்பட்ட நபியவர்கள் தனது குடும்பத்தாருக்கு பாதுகாவலராக அலி (ரலி) அவர்களை நியமிக்கிறார்கள்.

அப்போது அங்கிருந்த சிலர் இதனை விமர்சிக்கிறார்கள். அலி அவர்களை நபியவர்கள் குடும்பத்தாரை பாதுகாப்பதற்காக விட்டுச் செல்கிறார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள். அதற்குத் தான் அலி (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்கிறார்கள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பொருப்பாளராகவா என்னை இருக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

ஒரு மிகப் பெரும் வீரனை யுத்த கலத்திற்கு அழைத்துச் செல்லாமல் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இரு என்று சொன்னால் எந்த ஒரு வீரனும் இந்தக் கேள்வியைத் தான் கேட்பான் அந்த அடிப்படையில் தான் அலி அவர்கள் நபியிடம் இந்தக் கேள்வியை முன் வைக்கிறார்கள்.

அதற்குத் தான் நபியவர்கள் அலி (ரலி) அவர்களின் கற்பனையில் கூட வந்திர நினைக்காத ஒரு பதிலைக் குறிப்பிடுகிறார்கள்.

மூசாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? என்பதே அந்த பதில்.

இந்த பதிலைச் சொல்லிவிட்டு அதன் தொடராக நபியவர்கள் ஒரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

எந்த அலியைக் கடவுலின் இடத்திற்கு ஷீயா மதத்தினர் உயர்த்தி வழிகெட்டுப் போனார்களோ அந்த அலியைப் பற்றி இவர்கள் கொண்டிருக்கும் கொள்கை பொய்யானது, போலியானது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் அலியைப் பார்த்துச் சொல்லும் வாசகமே போதுமான சான்றாகும்.

மூசாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? என்று கேட்ட நபியவர்கள் ஹாரூன் அவர்களுக்கு இறைவன் கொடுத்த ஒரு பதவியை மாத்திரம் அலி (ரலி) அவர்களுக்கு இல்லையென்றாக்குகிறார்கள்

(ஒரு வேறுபாடு என்னவெனில்) எனக்குப் பிறகு எந்த  இறைத்தூதரும்  இல்லை என்று சொன்னார்கள்.(புகாரி - 4416)

மூஸா நபியவர்கள் எப்படி இறைத்தூதராக இருந்தார்களோ, அப்படித்தான் அவருக்குத் துணையாக ஏற்படுத்தப்பட்ட ஹாரூன் அவர்களும் இறைத்தூதராக இருந்தார்கள்.

இதே நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருந்தாலும் ஹாரூன் (அலை) அவர்களின் அந்தஸ்தில் இருந்த அலி (ரலி) அவர்கள் இறைத்தூதரில்லை என்பதை மேற்கண்ட வாசகத்தின் மூலம் மிகத் தெளிவாக நபியவர்கள் தெரிவித்துவிட்டார்கள்.

அலி (ரலி) அவர்களின் அந்தஸ்து என்ன என்பதை இவ்வளவு தெளிவாக நபியவர்கள் குறிப்பிட்டதின் பின்னரும் அலி (ரலி) அவர்கள் மீது கொண்ட மோகம் அவர்களை கடவுல் அந்தஸ்துக்கு கொண்டு சென்று நிறுத்துமாயின் அது தெளிவான வழிகேடே தவிர வேறில்லை என்பதே உண்மை.

கஷ்டத்திலும் தம் கரங்களால் தமது தேவைகளை முழுமைப்படுத்திய உறவு.

இந்த உலகத்திற்கே அருளாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா அவர்களை திருமணம் செய்திருந்த அலி பின் அபீதாலிப் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் பரிவும், பாசமும் மிக்கவராக பாத்திமா அவர்களுடன் பழகினார்கள்.

இன்நிலையில் வீட்டில் உள்ள வேலைகளை செய்யும் பாத்திமா (ரலி) அவர்கள் கோதுமை போன்றவற்ற அரைப்பதற்காக திரிகையை தானே சுற்றி அதன் மூலம் பிரயோஜனம் பெறுவார்கள்.

நிலைமை இவ்வாரிருக்க திரிகை சுற்றுவதினால் தாம் அதிகம் வேதனை அடைவதை அவர்களினால் தாங்கிக்கொள்ள முடியாமல் போக அதனை நபியவர்களிடம் கூறி குறிப்பிட்ட வேலையை செய்வதற்காக ஒரு அடிமையை பெற்றுக் கொள்ள எண்ணி நபியைப் பார்க்கப் போனார்கள் அவர்கள் சென்ற நேரம் நபயவர்கள் அங்கிருக்கவில்லை.

பாத்திமா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிடுகிறார்கள் அவர்கள் திரும்பி வந்ததின் பின் நபியவர்களே பாத்திமா அவர்களை பார்க்கச் சென்று ஒரு அழகிய உபதேசத்தை சொல்கிறார்கள் அந்த உபதேசம் உலகம் உள்ள வரைக்கும் அனைவருக்கும் ஒரு படிப்பினையானதாகும்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா  முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே ஃபாத்திமா  அவர்கள் (நபிவர்களிடம்  வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை; ஆயிஷா (ரலி)  அவர்களைத்தாம் அங்கே கண்டார். ஆகவே (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்த போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபி -ஸல்- அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு  எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்து  கொண்டார்கள். எந்த அளவுக்கென்றால்  அவர்களுடைய கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி)தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள்  இருவருக்கும்  நான் கற்றுத் தரட்டுமா?  நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச்  செல்கையில் முப்பத்து நான்கு முறை "அல்லாஹூ அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை "அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று சொன்னார்கள். (புகாரி - 3705)

ஆட்சியாளரின் மகள் ஜனாதிபதியிடம் பணியாளைக் கேட்கிறார்கள் ஆனால் அதற்கு பதில் திக்ருகளை கற்றுக் கொடுக்கிறார் ஜனாதிபதி உலகில் எங்காவது இப்படிப்பட்ட ஆட்சியாளரையும், இது போன்ற தீர்பை ஏற்றுக் கொள்ளும் இளவரசியையும் காண முடியுமா?
நன்றி:ராஸ்மின் மிஸ்க்.blog                          

0 கருத்துகள்: