கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரசு காப்பீட்டு திட்ட உதவியுடன் இதய நோய்களுக்கு ஆபரேஷன் இல்லாமல் நவீன சிகிச்சை

அரசு காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் இதய நோய்கள் மற்றும் ரத்த குழாய் நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத நவீன சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் கீதாலட்சுமி கூறியதாவது:-

பிறப்பில் இருந்தே இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் இருக்கும் சிறு ஓட்டைகள் மற்றும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பினால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் கால் பகுதிகளில் ரத்த குழாய்களில் ரத்தம் உறைவதால், அந்த ரத்தம் தலை பகுதிக்கோ, இதயத்திற்கோ செல்லும்போது உயிர் பிரியும் நிலையும் ஏற்படுகிறது.

இவற்றுக்கான நவீன சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிறுவயதில் இருந்தே இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் ஓட்டை இருந்தால் அறுவை சிகிச்சை செய்யாமல், ‘காப்புறம் தமணி’ மூலமாக அந்த ஓட்டையை அடைத்து, இருபுறமும் வால்வு அமைக்கும் நவீன சிகிச்சை முறை கொண்டுவரப்பட்டு உள்ளது.

ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுகுழாய்கள் மூலம் அடைப்பை சரி செய்வதற்கான நவீன சிகிச்சை முறையும் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் மீண்டும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

இதேபோல் கால் பகுதியில் ரத்தம் உறைந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் உறைந்த ரத்தம் வேறு எந்த பகுதிக்கும் செல்லாதவாறு அந்த இடத்தில் நவீன வடிகட்டி பொருத்தப்படும். இதன் மூலம் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.

பொதுவாக தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அரசு காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக செய்து தரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது டாக்டர் கண்ணன் உள்பட ஸ்டான்லி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்: