கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அணைக்கரை பாலத்தில் கனரக போக்குவரத்து தொடங்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு

திருவிடைமருதூர் டிச. 27
சென்னை–கும்பகோணம் சாலையில் கும்பகோணம் அருகே அணைக்கரை பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 2 வருடங்களுக்கு முன் பழுதடைந்தது.இதனை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த பாலம் பழுது பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் இலகு ரக வாகனங்கள் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அரியலூர், ஜெயங்கொண்டம், பந்தநல்லூர், திருப்பனந்தாள் மற்றும் அதனை சுற்றி உள்ள 100–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள் சுமார் 1 கிலோ மீட்டர் பாலத்தில் நடந்து சென்று தான் பஸ்சை பிடித்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் வீணாகிறது.

மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ் உள்ளிட்ட கன ரக வாகனங்கள் நீலத்தநல்லூர் பாலம் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்கிறது.

இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். அணைக்கரை பகுதியில் சுமார் 1½ கோடி மதிப்பிலான கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பாலம் பழுதடைந்து உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு இந்த கரும்புகளை வெட்டி கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.

அணைக்கரை பாலத்தில் கனரக போக்குவரத்தை தொடங்க கோரி பொதுமக்கள், வியாபாரிகள் பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வியாபாரிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. திருப்பனந்தாள், அணைக்கரை, பந்த நல்லூர், தத்துவாச்சேரி, சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் திருப்பனந்தாள் வியாபாரிகள் கடை தெருவில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்: