தஞ்சாவூர்,அணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் வணிகர் சங்க பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.
வணிகர் சங்க பேரவை
தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் செயலாளர் முருகேசன், மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் திருப்பனந்தாள் வணிகர் சங்க தலைவர் பத்மநாபன், அணைக்கரை வணிகர் சங்க பேரவை செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 50–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அணைக்கரை பாலம் பழுது காரணமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அணைக்கரை, சோழபுரம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஜெயங்கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை செல்ல வேண்டுமானால் சுற்று வழியில் அதிக நேரம் செலவழித்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் செலவும் அதிகரிக்கிறது. மேலும் கும்பகோணம்– நீலத்தநல்லூர் சாலையில் போக்குவரத்து அதிகம் நடைபெறுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
வியாபாரிகள் பாதிப்பு
அணைக்கரைக்கு அந்த பகுதியில் உள்ள திருப்பனந்தாள் மற்றும் குடந்தை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தினமும் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டி உள்ளது. பல நேரங்களில் தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளில் கடைவைத்து பிழைக்கும் வியாபாரிகளாகிய எங்களுக்கு பஸ்கள் நேரிடையாக செல்லாதால் வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதியும், வியாபாரிகளின் நலன் கருதியும் அணைக்கரை பாலத்தினை போக்குவரத்திற்கு பயன்படுத்திட தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். மேலும் பாலம் வலுவிழந்துள்ள நிலையில் அதில் அதிக லோடு ஏற்றி வரும் லாரிகளை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது மாவட்ட பொருளாளர் ரவி, துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் கருப்பையா, நகர தலைவர் வாசு, நகர பொருளாளர் கந்தமுருகன், நகர செயலாளர் ராஜா, அணைக்கரை வணிகர் சங்க பேரவை பொருளாளர் வைரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக