கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நேற்று திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

 விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்தடை அதனால் தொழில்கள் மூடப்படும் சூழ்நிலை இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாக்குகள் சிதறி விடும் சூழலை ஏற்படுத்தி விடாத நிலைப்பாட்டை உருவாக்கிடுமாறு தமிழக கட்சிகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஜனநாயக சமய சார்பற்ற சமூக நீதியை நிலைநிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை தொடருமாறு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

10 சதவீதம் இட ஒதுக்கீடு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அரசியல் சாசனத்தின் 44–வது பிரிவை நீக் கவேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதமும், அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் பிறப்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கி அதில் 6 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான தனி உள் ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தி தரவேண்டும். இஸ்லாமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்பினர் சான்று வழங்க வேண்டும்.

பள்ளிவாசல் திருமண பதிவை ஏற்று பாஸ்போர்ட்டு வழங்க அனுமதிக்க வேண்டும், காஜி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியில் முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும், திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகில் இருந்து முஸ்லிம் லீக் பேரணி புறப்பட்டது. இந்த பேரணியில் மாவட்ட வாரியாக தொண்டர்கள் கலந்து கொண்டு அணிவகுத்து வந்தனர். பேரணி சாஸ்திரி சாலை, தென்னூர் வழியாக மாநாட்டு திடலை அடைந்தது.

மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான இ.அகமது, தேசிய செயலாளர் முகமது பஷீர், மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர், அப்துல் ரகுமான் எம்.பி, பொருளாளர் ஷாஜகான், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பாரூக், மாவட்ட நிர்வாகிகள் ஹபிபுர் ரகுமான், அப்துல் சலீம், அப்துல் முத்தலீப், முகமது பாரூக் உள்பட பலரும் பேசினார்கள்.

0 கருத்துகள்: