கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

காலம் ஓர் ஆயுதம்!

‘காலம் ஓர் ஆயுதம்’ என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.


ஆமினா: (அஸர் தொழுகைக்குப் பின்) அன்புச் சகோதாரி ஆயிஷா… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

ஆயிஷா: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. உள்ளே வாருங்கள் ஆமினா. நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?

ஆமினா: அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் எல்லோரும் நலமாக இருக்கிறோம்.

ஆயிஷா: என்ன ஆமினா… நோன்பு வந்ததில் இருந்து இத்தனை நாளாக இங்கு வரவே இல்லையே ஏன்?

ஆமினா: என்ன செய்வது? எல்லாம் நேரப் பற்றாக்குறைதான். அல்லாஹ்வின் கிருபையால் அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்தது. அம்மாதத்தில் செய்யக்கூடிய நல்ல அமல்களுக்குண்டான கூலி பல மடங்காகும். அதைத் தவற விட்டால் நாளை மறுமையில் கைசேதப்பட்டவர்களாகி விடுவோம். அப்படிப்பட்ட மாதத்தில் இறைவணக்கம் புரிவதற்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதற்கும் நேரம் சாரியாக இருந்தது.

ஆயிஷா: (டி.வி சப்தத்தைக் குறைத்துக் கொண்டே) சரி ஆமினா… இப்போதாவது வந்தீர்களே… மிகவும் சந்தோஷம். என்ன சாப்பிடுறீங்க?

ஆமினா: அது இருக்கட்டும். நீங்க நோன்பு நோற்றீர்களா? இறைவணக்கமெல்லாம் எப்படி? ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு வைத்தீர்களா?

ஆயிஷா: அதை ஏன் கேட்கிறீங்க ஆமினா? எனக்கு தொழுகைக்கே நேரம் கிடைப்பதில்லை. எப்பொழுதும் வேலையும் குழந்தையுமாக இருக்கிறேன்.

ஆமினா: ஸுப்ஹானல்லாஹ். ஆயிஷா… உங்களிடமிருந்து இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஆயிஷா: ஒரு நிமிடம்… (செல்போனில் அழைப்பு) ஹலோ யாரு மர்யமா? என்ன 12.30 மணிக்கு சீரியல் பார்க்கவில்லையா? நான் எப்பாடு பட்டாவது பார்த்து விடுவேன். வீட்டுக்கு சகோதாரி ஆமினா வந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிறகு அந்த சீரியல் கதையை சொல்கிறேன். (செல்போனை அணைத்து விட்டு) சாரி… நீங்க சொல்லுங்க.

ஆமினா: ஆயிஷா… நீங்க மரியமிடம் பேசியதை நான் கவனித்தேன். நல்ல விஷயம் செய்ய நேரமில்லை என்று சொன்ன உங்களுக்கு டிவி பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா?

ஆயிஷா: வேலை பார்த்துக் கொண்டே டிவியும் பார்ப்பேன்.

ஆமினா: வேலை பார்க்கவும், டிவி பார்க்கவுமா வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்தான்? மனிதர்களாகிய நாம் ஒரு உன்னத நோக்கத்திற்காக படைக்கப் பட்டுள்ளோம். அந்த நோக்கம்தான் இறைவனை வணங்குவது.

ஆயிஷா: என்ன ஆமினா சொல்றீங்க? உலகில் பிறந்தோம், வாழ்கிறோம், வெந்ததைத் தின்று விட்டு விதி வந்தால் சாவோம்… இப்படித்தான் என்னுடைய நாட்கள் நகர்கிறது.

ஆமினா: ஆயிஷா… சாவோம் என்று சொல்கிறீர்களே. அது உங்களுக்கு எளிதாக உள்ளதா? மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு உண்டு என்று நம்பக்கூடிய உண்மை முஸ்லிம்கள் நாம். அதை மறந்து விடாதீர்கள்.

ஆயிஷா: எல்லாம் தொரியத்தான் செய்கிறது. தொழத்தான் நேரம் கிடைக்கவில்லை.

ஆமினா: ஆயிஷா… வல்ல ரஹ்மான் தன் திருமறையில் “இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51:56)” என்று கூறுகிறான். நம்மை அவன் படைத்ததின் நோக்கமே அவனை வணங்கத்தான். நாம் அதையே மறந்து வாழ்ந்தால் என்ன அர்த்தம்?

ஆயிஷா: என்ன செய்வது? எனக்கு நேரம் கிடைப்பதில்லை. வேலை நேரம் போக குழந்தையை கவனிப்பது. குழந்தை தூங்கினால் நானும் தூங்கிவிடுகின்றேன். பின் இன்டர்நெட்டில் ஈமெயில் பார்ப்பேன்.

ஆமினா: உங்களிடம் இறைவன் விசாரிக்கும் நாளைப் பற்றி உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. அமானிதம் என்றால் என்ன?

ஆயிஷா: எனக்குத் தொரிந்ததைச் சொல்கிறேன். பிறர் நம்மிடம் ஒப்படைக்கும் பொருளைப் பாதுகாத்து அவர்கள் கேட்கும்போது அதை நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும். இதில் நம்முடைய நேர்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆமினா: நல்ல பதில்தான். இதே போன்றுதான் ஒரு மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வாழ்நாள், அவனுக்கு இறைவன் வழங்கிய அமானிதம் ஆகும். அதைப் பற்றி இறைவன் நாளை மறுமையில் நம்மை கண்டிப்பாக கேள்வி கேட்பான்.

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “இறுதித் தீர்ப்பு நாளில் நான்கு விஷயங்களுக்கு பதில் சொல்லாதவரை ஆதமுடைய மகனின் கால்கள் நகராது. அவன் தன் வாழ்நாளை எவ்வாறு செலவிட்டான், இளமையை எவ்வாறு செலவிட்டான், எப்படி பொருள் சம்பாதித்தான் – அதை எவ்வாறு செலவிட்டான், தன் அறிவை எப்படி செலவிட்டான்.”

ஆயிஷா: இவை அனைத்தும் காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறதே! இப்படியுமா சொல்லியிருக்கிறான் அல்லாஹ்?

ஆமினா: இது மட்டுமா? வல்ல ரஹ்மான் தன் திருமறையில் காலத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பல இடங்களில் சொல்லியிருக்கிறான். நாம் எல்லோருக்கும் தொரிந்த சிறிய அத்தியாயமான சூரா அல் அஸ்ரை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டே துவக்குகிறான்.

ஆயிஷா: இப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லியிருக்கிறான். ஆனால் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லையே.

ஆமினா: நல்ல காரியங்களை உடனே செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். “ஏழு பேரழிவுகளில் ஒன்று உங்களை பீடிக்கும் முன் நன்மைகளைச் சேகரியுங்கள். 1) பட்டினி – அது உங்களின் அறிவுக்கு அணை போடலாம். 2) வசதி – அது உங்களை வழிகெடுக்கலாம். 3) நோய் – அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்.  4) முதுமை – அது உங்கள் புலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கலாம். 5) திடீர் மரணம். 6) தஜ்ஜால். 7) உலக முடிவுநாள் – அது உண்மையிலேயே மிகவும் கடினமானதும், கசப்பானதுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆயிஷா: இப்படிப்பட்ட நேரத்தை நான் எப்படியெல்லாம் வீணடித்து விட்டேன்! இனி நான் என்னுடைய நேரத்தை ஒதுக்கி ஐந்து வேளை தொழுகைகளையும் குறித்த நேரத்தில் தொழுவேன்.

ஆமினா: தொழுகையோடு சேர்த்து ஒரு நிமிடத்தில் கூட அதிகமான நன்மைகளை அள்ளிவிடலாம்.

ஆயிஷா: என்ன? ஒரு நிமிடத்தில் அதிகமான நன்மைகளா? அதை எனக்கும் சொல்லித் தாருங்களேன்.

ஆமினா: கண்டிப்பாக சொல்லித் தருகிறேன். அதில் எனக்கும் நன்மை உண்டு. மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் கேளுங்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்கிறேன்.

1) ஒரு நிமிடத்தில் சூரா அல் ஃபாத்திஹாவை சாதாரணமாக ஓதினால் 3 தடவை ஓதலாம். ஒரு தடவை அல்·பாத்திஹா ஓதினால் 600 நன்மைகள் கிடைக்கும். ஆக, மூன்று தடவை ஓதினால் 1800 நன்மைகள் கிடைத்து விடும், அதுவும் ஒரு நிமிடத்தில்.

2) ஒரு நிமிடத்தில் சூரா அல் இஃக்லாஸை சாதாரணமான நடையில் ஓதினால் 20 தடவை ஓதலாம். இந்த சூராவை ஓதுவது முழு குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியை ஓதியதற்குச் சமம். நீங்கள் 20 தடவை ஓதினால் அது திருக்குர்ஆன் முழுவதையும் 7 தடவை ஓதுவதற்குச் சமமாகி விடும்.

3) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் ஒரு பக்கத்தை ஓதி விடலாம்.

4) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் சிறிய வசனத்தை மனப்பாடம் செய்து விடலாம்.

5) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று 20 தடவை ஓதி விடலாம்.

6. ஒரு நிமிடத்தில் ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்’ என்று 50 தடவை கூறலாம். இவை நாவுகளால் சொல்வதற்கு மிகவும் இனிமையானவை. அல்லாஹ்வின் தராசுத் தட்டில் மிக்க கனமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹா¡ரி,முஸ்லிம்)

7) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை 50 தடவை கூறலாம். இது தௌஹீத் எனும் ஏகத்துவம் பொதிந்த வார்த்தையாகும். ஒரு மனிதன் உயிர் விடும் போது கடைசி வார்த்தை இதுவாக இருந்தால் அவன் சுவனம் புகுவான் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

8) ஒரு நிமிடத்தில் ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று 100 தடவை கூறலாம்.

9) ஒரு நிமிடத்தில் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் முகமாக ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என்னும் சொல்லை 100 தடவை கூறலாம்.

10) ஒரு நிமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். ஒரு ஸவாத்திற்கு அல்லாஹ் நம் மீது 10 அருள்களைப் பொழிகிறான். ஆக, 500 அருள்கள் நமக்குக் கிடைக்கிறது.

11) ஒரு நிமிடத்தில் எளிதில் புரிகின்ற நல்ல இஸ்லாமிய நூல் ஒன்றில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம்.

12) ஒரு நிமிடத்தில் நம் இறைவனிடத்தில் கையேந்தி துஆ செய்யலாம்.

13) ஒரு நிமிடத்தில் துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறலாம்.

14) ஒரு நிமிடத்தில் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை – ஆக, 100 தடவை ஓதி இறைவனை அதிகம் நினைவு கூரலாம்.

ஆயிஷா: எல்லாம் புரிந்தது சகோதரி. நான் இரவில் அதிக நேரம் விழித்து விடுவதால் பகலில் சீக்கிரமாக விழிப்பதில்லை. என்ன செய்வது?

ஆமினா: “அல்லாஹ்வே… எனது சமுதாயம் அதிகாலையில் எழுவதற்கு அருள் புரிவாயாக!” என்று அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பிரார்த்திக்கும்போது கூறினார்கள் (அபூதாவூத்).

அதிகாலையில் எழுவதில் அல்லாஹ் தன் அருள்களைப் பொதிந்துள்ளான். அது வெற்றியின் பக்கம் நம்மை அழைத்துச் செல்லும். இரவு முன்கூட்டியே படுத்து அதிகாலை சீக்கிரமே எழும் பழக்கம் ஒரு மனிதனை ஆரோக்கியமுள்ளவனாக ஆக்கும். புத்திசாலியாக மாற்றும். வளத்தைக் கொண்டு சேர்க்கும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நீங்கள் உறங்கும்போது ஷைத்தான் உங்கள் தலையின் பின்புறம் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது உறங்கு என்று சொல்லியே ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரையிடுகிறான். அதிகாலையில் நீங்கள் எழுந்து நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் முதல் முடிச்சு அவிழும். தொழுகைக்காக ஒழு செய்யும்போது இரண்டாவது முடிச்சு அவிழும். நீங்கள் தொழுதால் மூன்றாவது முடிச்சு ஆவிழும். அந்தக் காலைப் பொழுதில் உயிரோட்டத்தோடும் உள்ள சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படி இல்லையெனில் அந்தப் பொழுது உங்களுக்கு தீமையாகவும் சோம்பேறித்தனமாகவும் இருக்கும்.” (புகாரீ)

அதேபோல் அறிவியல் பூர்வமான உண்மையும் அதில் உண்டு. அதிகாலை வேளையில் வாயு மண்டலத்தில் ‘ஓஸோன்’ காற்று அதிகமாக இருக்குமாம். அதனை அதிகமாக சுவாசிப்பவர்களுக்கு ஆயுள் நீடிக்குமாம். ஆயுள் நீடிக்கிறது என்றால் நம் உடலில் உள்ள நோய்களை ஓஸோன் காற்று குணப்படுத்துகிறது என்று தானே அர்த்தம்.

ஆயிஷா: ஆமாம். ஒத்துக் கொள்கிறேன். இனி அதிகாலையில் எழுந்து தொழுவதற்கு நானும் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

ஆமினா: மிக்க மகிழ்ச்சி. அத்தோடு டிவி பார்ப்பதையும் நீங்கள் குறைத்து விடுங்கள்.

ஆயிஷா: அது ஒரு சின்ன பொழுதுபோக்குதானே!

ஆமினா: நான் முதலில் சொன்னேனல்லவா… நம்முடைய பொழுதுபோக்கு நன்மையானதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. கெட்டதைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம், கெட்டதைக் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கெட்டதைப் பேசுவது வாய் செய்யும் விபச்சாரம்.

வல்ல ரஹ்மான் நாளை மறுமையில் உன்னைக் கேள்வி கேட்கும்போது இப்படிப்பட்ட அருவருப்பான பதிலையா சொல்வாய்? கொஞ்சம் சிந்தித்துப் பார்.

ஆயிஷா: உங்களை சந்தித்து உங்கள் மூலம் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் நாடி இருக்கின்றான். நானும் இனி இறைவழி சொன்ன நேர நிவாகத்தைப் பேணி நடந்து கொள்கிறேன். எனக்காக நீங்களும் துஆச் செய்யுங்கள்.

ஆமினா: இன்ஷா அல்லாஹ் துஆச் செய்கிறேன். எனக்கும் மஃக்ரிப் தொழ நேரமாகி விட்டது. நான் வருகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆக்கம் : சகோதரி மன்ஸூரா
நன்றி : “அல் மர்ஜான்” (சவூதி அரேபியாவில் இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம் பெண்கள் தமிழ் பிரிவு மூலம் வெளிவரும் காலாண்டிதழ்)

0 கருத்துகள்: