கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

தஞ்சாவூர்,தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளப்பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

ஆலோசனைக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலத்திற்கு வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் போதுமான பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் மீனவர்கள் கடலோர பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையிலும் பணியாளர்கள் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மழை வெள்ளப்பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிவிக்க ஏதுவாக செயல்படுத்தப்பட உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்த விவரங்களை அனைத்து பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும்.

ஒத்திகை நிகழ்ச்சிகள்

வருவாய் கோட்ட அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டங்கள் நடத்த வேண்டும். மழை காலத்தில் ஏற்படும் மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு ஆகியவற்றை உடனடியாக கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வரதராஜன், பயிற்சி கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சங்கரநாராயணன், மோகன், சொக்கலிங்கம், நடராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: