கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஷைத்தானின் ஊசலாட்டம்...

நிலையாய் இருப்பவன், பிறப்பு, இறப்பு  பசி, தூக்கம், தேவை, மற்றும் சந்ததிக்கு அப்பாற்பட்ட தூய இறைவன் முதன் முதலாக மண்ணிலிருந்து மனிதனை ( ஆதம் நபியை ) படைத்தான். மேலும் சுவனத்து இன்பங்களை அனுபவிக்கச் சொல்லி, ஆறறிவையும் கொடுத்து பலகீனம் என்னும் ஒரு யதார்த்தமான ஒன்றையும் கூடவே கொடுத்து, ஷைத்தான், மலாயிக்கத், என இரண்டு தூண்டுதல்களையும் கொடுத்து சோதனை செய்தான்.

ஆரம்பமே ஷைத்தான் தூண்டுதல் மேலோங்கவே, நெருங்க வேண்டாம் என்று படைத்தவனால் எச்சரித்து தடுக்கப்பட்ட மரத்தினை நெருங்கி, அதன் கனிகளைப் புசிக்க வேண்டாம் என்று விலக்கப்பட்டதை சுவைத்து சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட முதல் மனிதரே ஷைத்தானின் தூண்டுதலாலேயே இவ்வுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இப்படி முதல் மனிதரையே  ஷைத்தான் வெற்றி கொண்டு இவ்வுலகில் அந்த தூண்டுதல் ஒரு புறமும், இறைவனின் எச்சரிக்கை சைத்தானைப் பற்றி மறுபுறமுமாக அல்லாஹ் இவ்வுலகில் ஆதம் (அலை) , அவரின் துணையாக ஹவ்வா (அலை) இருவரையும், ஷைத்தான்,  மலாயிக்கத் என்னும் இரு தூண்டுதல்களோடு மனதை படைத்து, இச்சோதனையில் இறைவனின் எச்சரிக்கையில் வெற்றி பெறுதல் மூலமே  ஈடேற்றம் அடைய முடியும் என்ற நற்போதனைகளையும் வழங்கி இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகின்றான்  

அந்த ஷைத்தானியத்தின் ஊசலாட்டம் மனிதனை எவ்வாறெல்லாம் ஆட்கொள்ளும், அதிலிருந்து மனிதன் கரை சேருவது, அதை எப்படி கையாளுவது, அதனை எப்படி வெற்றி கொண்டு இறை பொருத்தத்தை பெறுவது என்பதின் நோக்கமே இந்த பதிவு. 

ஈமானில் ஊசலாட்டம்

ஒவ்வரு மனிதனும் பலகீனமானவனாகவே படைக்கப் பட்டிருக்கின்றான். ஆசாபாசங்கள், தேவைகள், பசி, தூக்கம், மறதி, இச்சை மற்றும்  உலகாதாய விஷயங்களில் அவன் மிகவும் அவசரக்காரனாகவும், ஆத்திரக்காரனாகவுமே இருக்கின்றான்.  இவைகள் அல்லாஹ்விடத்தில்  மிகப்பெரும் பாவத்தை ஏற்படுத்தி விடப் போவதில்லை. 

ஆனால் அடிப்படை வேரான ஈமானை பாதிக்கக் கூடியவைகளில் எந்த ஒரு விஷயமும் தலைப்பட்டால், அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பேர்ப்பட்ட விஷயம், ஷைத்தானின் இந்த ஊசலாட்டத்தில் நாம் சலனப்படுகையில் நடைபெற வாய்ப்புண்டு. (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேணும்).

இப்படி சலனப் படுகையில் மார்க்கம் நம்மை எப்படி வழி நடத்தி செல்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவு நம்மை முன்னெடுத்துச் செல்கின்றது. 

இந்த ஊசலாட்டம், நம்மை மட்டுமல்ல  யார் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்களோ, யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டானோ அந்த சஹாபாப் பெருமக்களுக்கே  இது ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விஷயத்தைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, 

ஷைத்தான் நம்மை நல்ல எண்ணங்களை நம்  மனதினில் தூவி எண்ணவிட்டு அதன் இறுதியில், நம் ஆழ்நம்பிக்கைகளின் அடிப்படையை தகர்த்தெறியும் செயலில் ஈடுபடுவான். அந்த நிலையில் நாம் நம்மை உஷார் நிலையில் வைத்து ஈமானை  பாதுகாக்க வேண்டும். 

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டம் வந்தது. அவர்கள், யாரசூலுல்லாஹ், எங்களுக்கு சில கெட்ட எண்ணங்கள் (ஈமானின் வேரை அசைத்துப் பார்கக்கூடிய அளவுக்கு)   மனதில் தோன்றுகின்றது. ஆனால் அதை வெளியில் சொன்னால் படு பயங்கரமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அதை வெளியில் சொல்வதற்கு  பதிலாக வானத்திலிருந்து கீழே குதித்து விடுவது மேல் என்றும்  தோன்றுகின்றது என்று சொன்னவுடன். 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், என்று மூன்று முறை முழங்கிவிட்டு, இதுதான் உண்மையான ஈமான். ஏனனில், மனதில் தோன்றுவது ஷைத்தான், அதை வாயால் மொழிந்தாலோ, பிறரிடம் சொன்னாலோ அல்லது, செயலில் காட்டினாலே ஒழிய அல்லாஹ்விடத்தில் இதற்கு எந்த வித கேள்வியும் இல்லை. ஏனெனில் , நீ இதை சொல்லாமல் இருப்பதே அல்லாஹ்வை பயந்துதான்.  இதுதான் உண்மையான் ஈமான். இங்கே ஷைத்தானின் ஊசலாட்டம் (உள் எண்ணம்) எந்தப்பயனையும் தராததால், உள்ளத்தில் எண்ணினாலும் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். 

மனதினில் அந்த (வஸ்வாஸ்) ஊசலாட்டம் வரும்போது நாம் அல்லாஹ்வை நினைத்து பயப்படுகின்றோம் அல்லவா ? அங்கேதான் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள்.  

மேலும் ஊசலாட்டம் மனதில் தோன்றும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் " அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தான் நிர்ரஜீம் ( யா அல்லாஹ் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!) என்று வேண்டும்பொழுது நம்  ஈமான் கூடிக் கொண்டே போகின்றது. 

எங்கெல்லாம் நம் எண்ணம் பலகீனப்படுகின்றதோ, அங்கு கண்டிப்பாக ஷைத்தானின் எண்ணங்கள் மேலோங்கும். நம்முடைய பலகீனம் பார்த்து ஷைத்தான் நம்மை நெருங்குவான், எப்படியும் நம்மை அவன் வழிக்கு  சொல் வடிவம், அல்லது செயல் வடிவம் கொடுக்க வைத்து நம்மை தடம் புரள வைக்க தக்க தருணம் பார்த்திருப்பான். அந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமுகமாக " இறைவா என்னை ஷைத்தானின் தீங்கிலிருந்து காப்பாற்று" என்று வேண்டுகின்றோம்.

அல்லாஹ்வையன்றி வேறில்லை 

ஒரு முறை இரு சஹாபிகளுக்கு இடையே ஒரு விஷயத்தில் நடந்த விவாதத்தில், இருவரும் ஆக்ரோஷமாக ஒரு முடிவின்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில், ரசூல் (ஸல்) மற்றொரு சஹாபியிடம் சொன்னார்கள் :  இவர்கள் இருவரிடத்திலும் இப்பொழுது ஒற்றுமை ஏற்பட ஒரு விஷயம் என்னிடம் இருக்கின்றது. இவர்கள் இருவரும் அதைச் சொன்னால் உடன் அங்கு ஒற்றுமை நிலவும்.  அதுதான் " அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்" (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன்) என்று சொல்ல சொன்னார்கள்"  

அல்லாஹ்வின் உதவியின்றி எந்த ஒரு நன்மையான காரியத்தை செய்யவோ அல்லது எந்த ஒரு தீமையிலிருந்து விலகவோ நமக்கு சக்தி இல்லை என்பதையும் புரிந்து கொள்ளனும். 

ஒரு போரில் ஒரு சஹாபி அல்லாஹ்வுக்காக மிகக்கடுமையாக போரிட்டு பல காபிர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போரில் வெற்றியும் கிட்டியது. மிகப்பெரும் அந்தஸ்தை அடைய வேண்டிய இந்த சஹாபி, அப்போரில் இவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக தன்னால் அந்த வருத்தத்தை தாங்க இயலாமல் தன்னைத்தானே ஈட்டியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்  அந்த போர்க்களத்திலே.  அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள் ,  " இவர் ஒரு நரகவாதி”. அவருக்காக மய்யித்து தொழுகை நிறைவேற்ற ரசூல் (ஸல்) மறுத்து விட்டார்கள்.

நாம் நினைக்கும்போதெல்லாம் ஒரு நன்மையான காரியத்தை செய்து முடிக்கவோ, அல்லது தீமையைக் கண்டு விலகி நிற்கவோ முடியாது. இரண்டிலுமே அல்லாஹ்வின் நாட்டம் அங்கே ஆஜராகியே ஆகவேணும். நன்மையின் பக்கம் விரைந்து செல்வதும் , தீமையைக்கண்டு விலகி நிற்பதும் அவனைக் கொண்டே நடக்கின்றது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வேணும்.

நம் பலகீனம் ஷைத்தானின் பலம்

எந்த சூழ்நிலையிலும் நம் பலகீனம் நம்மை ஷைத்தானியத்துக்கு கட்டுப்பட வைத்து விடக்கூடாது. நன்மையான காரியங்களில் நம் கவனம் இருக்கும்போது அங்கே ஷைத்தான் ஆஜராகுவான் என்பது நபி (ஸல்) அவர்கள் வாக்கு. அங்குதான் உலக விஷயங்கள் நம் சிந்தனையில் உலவவிடுவான் ஷைத்தான். 

சாதாரணமாக  கடையில் வியாபாரம் பண்ணும்போதோ, அல்லது வேறு உலக விஷயங்களில் ஈடுபடும்போதோ, ஷைத்தானியத்தின் ஊசலாட்டாம் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இரண்டு  ரக்காத் தொழுகைக்காக நிருக்கும் போதோ அல்லது அல்-குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பிக்கும் போதோ அங்கே பெரும்பாலும் ஷைத்தான் நம்மை கெடுக்க ஆஜராவான்.

இங்குதான். அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான் என்று பொருள் கொள்ள வேணும். ஏனனில் அவன் சொன்னதுதான் ஷைத்தானின் ஊசலாட்டம் என்பது. இது இல்லையெனில் ஸ்திரமான ஈமானுக்கு வேலையே இல்லை.  இந்த ஊசலாட்டத்தில் இருந்து மீண்டு வரத்தான் நமக்கு சோதனை ஆரம்ப மனிதர்  ஆதம் (அலை) அவர்களிலிருந்து இன்று வரை தொடர்கின்றது.  இது இறுதி முடிவு நாள் வரை தொடரும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு  மனிதனிடத்திலும் அல்லாஹ் ஷைத்தானின் ஆதிக்கத்தையும், மலாயிக்கத்துனுடைய ஆதிக்கத்தையும் படைத்திருக்கின்றான். ஷைத்தானின் ஆதிக்கம் மனிதனை உண்மையை பொய்ப்படுத்தவும், தீமையான விஷயங்களில் ஆர்வமூட்டவும் வழிநடத்திச் செல்லும். 

இந்த இடத்தில் "யா அல்லாஹ் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்"என்று சொல்லி அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் வறுமை ஏற்படும்போதும் ஷைத்தான் நம்மை ஆதிக்கம் செலுத்தப் பார்ப்பான். இந்த இடத்தில் மிக கவனமாக செயல்பட்டு அவன் ஊசலாட்டத்திலிருந்து தப்பித்து இதே பாதுகாவல் தேடவேண்டும்.   

மலாயிக்கத்தின் தூண்டுதலோ நம்மை நன்மையின் பக்கம் வழிநடத்தும். இப்படி மலாயிக்கத்தின் தூண்டுதல் நம்மை நெருங்கி நல்ல ஒரு காரியத்தை செய்ய நாடும்போது, முதன் முதலாக நாம் அல்லாஹ்வை புகழ்ந்து , போற்றவேணும். அப்பொழுதுதான், தீமையான காரியத்தின் வழி நடத்தலில் நமக்கு நாட்டம் அற்றுப்போய், நல்லதை செய்ய மனம் நாடுவதோடு, நின்றுவிடாமல், நல்லதை நடத்தியும் காட்டும். ஆதலால்  ஷைத்தான் இந்த இடத்தில் நம்மிடம் தோற்று ஓடும் நிலைமையை அது ஏற்படுத்தும்..

உறங்கும் நேரம்

உறங்கும் நேரம் ஷைத்தான் கனவிலும் கெட்ட விஷயங்களையோ, அல்லது நம்முடைய ஈமானை பாதிக்கக்கூடிய விஷயங்களையோ கனவுகளாக விதைத்தால் அதிலிருந்து விடுபட்டு விழித்து விட்டால், இடது பக்கமாக திரும்பி மூன்று முறை  துப்பிவிட்டு அப்பொழுதும் “இறைவனிடமே  இதே பாதுகாப்பை தேடவேண்டும்”  என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

மேலும் ஷைத்தானே அல்லாஹ்விடத்தில் சொல்லிவிட்டு வரும்போது, யா அல்லாஹ்  நான் மனித இனத்தை என் வழியில் கொண்டு வந்து அனைவரையும் வழிகெடுப்பேன். ஆனால் யார் உன் கவசம் என்னும் ஆயுதத்தை ( அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்) கையில் எடுத்து , உன் உள்ளச்சத்தில் உவப்புடன் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர என்றுதான் உலகத்திற்கே அறிமுகமாகின்றான்

பாதுகாப்பு என்னும் கேடயம் 

அல்லாஹ் நம்மிடத்திலே இரு தூண்டுதல்களை ( ஷைத்தான், மலாயிக்கத்) ஏற்படுத்தி, நம் கையிலே பாதுகாப்பு என்னும் கேடயத்தை தந்து , ஷைத்தானிடத்திலே  ஊசலாட்டம் செய்யும் நம்மை தாக்கும் ஆயுதத்தைக் கொடுத்து நம்மை அவனிடமிருந்து பாதுகாப்பு பெரும் வழியினையும்  நமக்கு சொல்லித்தந்து அல்லாஹ் இப்புவி வாழ்க்கைய உண்மை முமினுக்கு ஒரு சோதனைக் களமாகவே  ஆக்கி இருக்கின்றான்.

இங்கு போட்டி அல்லாஹ்வுக்கும் ஷைத்தனுக்குமல்ல. ஷைத்தானுக்கும், மலாயிக்கத்துக்கும் போட்டி. இதில் மனிதன் இடையில் இருக்கும் ஒரு ஜீவன். ஷைத்தானின் ஆதிக்க மேலோங்க வாய்ப்பு கொடுத்தால் அவன் கட்டுப்பாட்டில் நீ. மலாயிக்கத்தின் வாய்ப்பு மேலோங்கும்போது சுவனவாசி நீ.

இதில் எந்தக் கட்டுப்பாட்டில் இயங்க வேணும் என்று அல்லாஹ் தந்த ஆறறிவு, உன்னிடம். இது தீமை, இது நன்மை என்னும் பகுத்தறியும் தகுதி உன்னிடம் இருக்கையில் ஷைத்தானின் கை மேலோங்க இடம் கொடாமல், மலாயிக்கத்தின் நன்மையில்  மேலோங்க ஒவ்வரு ஷைத்தானியத்தின் ஊசலாட்டத்திலும்  "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தனிர் ரஜீம் (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானைவிட்டும் பாது காவல் தேடுகின்றேன் ) என்று முழங்குவோம். 

ஷைத்தானை நம் வாழ்வில் வெகு தூரமாக்குவோம்.

அபு ஆசிப் என்ற அப்துல்  காதர்.

0 கருத்துகள்: